Published:Updated:

ஹிட்லர் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டு அருண் ஜெட்லி விமர்சனம்!

விகடன் விமர்சனக்குழு
ஹிட்லர் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டு அருண் ஜெட்லி விமர்சனம்!
ஹிட்லர் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டு அருண் ஜெட்லி விமர்சனம்!
ஹிட்லர் ஆட்சியையும் காங்கிரஸ் ஆட்சியையும் ஒப்பிட்டு அருண் ஜெட்லி விமர்சனம்!

புதுடெல்லி: சகிப்பின்மை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், அக்கட்சிக்கு பதிலடி கொடுக்கும்படியாக ஹிட்லரின் ஆட்சிக் காலத்தையும், இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்து பேசினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று, இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காப்பதன் மீதான பொறுப்புகள் குறித்த விவாதத்தில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசும்போது, ''அரசமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியே அரசியல் சாசனத்தை கவிழ்க்கும் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த கால வரலாற்றில் அரங்கேறியுள்ளன. அதற்கு ஓர் உதாரணம் 1933-ம் ஆண்டு ஜெர்மனியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதாகும். அந்நாட்டை ஆண்ட சர்வாதிகாரி ஹிட்லர், அவசர நிலையைப் பிறப்பித்தார். சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்தார். பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டன. பொருளாதாரக் கொள்கைகள் மாற்றப்பட்டன. ஹிட்லர்தான் ஜெர்மனி; ஜெர்மனிதான் ஹிட்லர் என்று அவரது ஆலோசகர் ரூடோல்ஃப் அப்போது தெரிவித்தார்.

இந்தியாவில் அவசர நிலைக் காலம் 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. மக்களின் வாழ்வுரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் அரசியல் சாசன விதியின் 21-ம் பிரிவு அந்தக் காலகட்டத்தில் நீக்கப்பட்டது. இதன் காரணமாக அவசரநிலைக் காலத்தில் மக்களின் வாழ்வுரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்டன. இதைத்தவிர பல்வேறு சவால்களை அப்போது மக்கள் எதிர்நோக்கினர். இது மிகக் கொடுமையான சர்வாதிகாரத்தனமாக அமைந்தது. அவசரநிலையை திரும்பப் பெற்ற பிறகு, அரசியல் சாசனத்தின் 21-ம் பிரிவை நீக்க முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாகவே நமது உரிமைகள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகத்தை நசுக்கும் நோக்கில், அரசமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் சாசனத்தைக் கவிழ்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய வாய்ப்புகளை ஒழிக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்த நாம் தயாராக வேண்டும்.

சகிப்பின்மையை முன்னிறுத்தி பல்வேறு சர்ச்சைகள் தற்போது எழுப்பப்படுகின்றன. அரசியல் சாசனத்தை இயற்றிய பிறகு அதை அமல்படுத்துவது தொடர்பாக கடந்த 1949-ம் ஆண்டு அம்பேத்கர் உரையாற்றினார். பொது சிவில் சட்டம் 44-வது பிரிவு, பசுவதை தடுப்புச் சட்டம் 48-வது பிரிவு ஆகியவற்றை அமல்படுத்துவது தொடர்பாக அப்போது அவர் பேசினார். அதே விவகாரத்தை அம்பேத்கர் இன்று பேசியிருந்தால், அதற்கு இந்த நாடாளுமன்றம் என்ன பதில் கூறியிருக்கும்?

வாக்கு வங்கி அரசியலுக்காக, பயங்கரவாதம் சில நேரங்களில் மென்மையான கோணத்தில் அணுகப்படுகிறது. அதை விமர்சிக்காமல் அந்த விவகாரத்தில் பின்வாங்கும் நிலைதான் கடந்த 65 ஆண்டுகளாக நடந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரண்டு போராடுவது அவசியம். கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பையில் 1993-ம் ஆண்டில் வெடிகுண்டு தாக்குதலும், 2006-ல் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பும் நிகழ்த்தப்பட்டன. மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளி யாகூப் மேமனுக்கு அண்மையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நீதித்துறைக்கு சுதந்திரமளிப்பது மிகவும் முக்கியமானது. அதேவேளையில், அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்றமும் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு, நீதிபதிகள் நியமனங்களை கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும். என்ன நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தாரோ? அதற்கு நேர்மாறான நிலை தற்போது உள்ளது. நீதிமன்றங்களின் செயல்பாடுகள், அதன் அதிகார வரம்பைத் தாண்டக் கூடாது என்று பலமுறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல், அரசியல் சாசன விதிகளில் உள்ள நுட்பமான அம்சங்கள் நீதிமன்றத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அத்தகைய நிலைப்பாட்டை உறுதி செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லை" என்றார்.