Published:Updated:

தலைவர் பதவியிலிருந்து நீக்க போர்க்கொடி: இளங்கோவன்- விஜயதாரணி மோதல் முற்றுகிறது!

தலைவர் பதவியிலிருந்து நீக்க போர்க்கொடி: இளங்கோவன்- விஜயதாரணி மோதல் முற்றுகிறது!
தலைவர் பதவியிலிருந்து நீக்க போர்க்கொடி: இளங்கோவன்- விஜயதாரணி மோதல் முற்றுகிறது!

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நீக்க கோரி, கட்சித் தலைவி சோனியா காந்திக்கு, காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரில், இந்திரா காந்திக்கு இணையாக விஜயதாரணியின் படம் பெரிதாக இடம்பெற்றிருந்தது. ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் படம் சிறியதாக இருந்தது. இது, இளங்கோவன் ஆதரவாளர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தலைவர் பதவியிலிருந்து நீக்க போர்க்கொடி: இளங்கோவன்- விஜயதாரணி மோதல் முற்றுகிறது!

இந்தநிலையில், அந்த பேனர் திடீரென கிழிக்கப்பட்டதோடு, விஜயதாரணி படத்தில் கண்கள் மட்டும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து இளங்கோவனை சந்தித்து விஜயதாரணி கேட்டதோடு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோவன், அவரை அங்கிருந்து வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது ஆதரவாளர்களும் விஜயதாரணியுடன் தகராறு செய்துள்ளனர். உடனே, அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் மோதலை தடுத்துள்ளனர்.

பின்னர் விஜயதாரணி அங்கேயே அமர்ந்து கொண்டதால் நிலைமை விபரீதமானது. இதனால் இளங்கோவன் அங்கிருந்து சென்றதால் பிரச்னை முடிவுக்கு வந்தது. சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை நீக்கக் கோரி அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயதாரணி இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "இந்திரா காந்தி பிறந்தநாளுக்கு மகிளா காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்தனர். பேனர் கிழிக்கப்பட்டது பற்றி இளங்கோவனிடம் கேட்டபோது தகாத முறையில் என்னிடம் பேசினார். மேலும், கட்சியில் இருந்து வெளியேறுமாறும் கூறினார். பெண்களை இழிவுபடுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இளங்கோவன் இனியும் மாநில தலைவராக நீடிப்பது கட்சியை பாதிக்கும். என்னை அவதூறாக பேசிய இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, விஜயதாரணியை எப்போதும் அவதூறாக பேசியதில்லை என்றும், விஜயதாரணி எழுதியுள்ள கடிதம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம் அளித்துள்ளார்.