Published:Updated:

ஈழத்தாயை பார்க்க சென்ற திக் திக் நிமிடங்கள்... முள்ளிவாய்க்கால் பத்மா சிறப்பு பேட்டி!

ஈழத்தாயை பார்க்க சென்ற திக் திக் நிமிடங்கள்... முள்ளிவாய்க்கால் பத்மா சிறப்பு பேட்டி!
ஈழத்தாயை பார்க்க சென்ற திக் திக் நிமிடங்கள்... முள்ளிவாய்க்கால் பத்மா சிறப்பு பேட்டி!

ஈழத் தமிழர்களின் ஈகிகளின் நினைவாக கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்,  மாவீரர்களின் நினைவாக மரம் நடும் விழா, மாவீரர் தின உரை, நினைவஞ்சலி செலுத்தும் முப்பெரும் நிகழ்ச்சியாக நடந்து முடிந்தது.

மாவீரர் தினத்தன்று காலையில், 2011-ம் ஆண்டு ஈழத்திற்கு சென்று பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்த அனுபவங்களை கொண்ட , 'ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள்' என்னும் நூலை, மாவீரர் தினத்தன்று வெளியிட்டார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். அதை ம.நடராசன் பெற்றுக்கொண்டார்.

ஈழத்தாயை பார்க்க சென்ற திக் திக் நிமிடங்கள்... முள்ளிவாய்க்கால் பத்மா சிறப்பு பேட்டி!

மாலையில், உலகத்தமிழர் பேரமைப்பின் மலேசியாவை சேர்ந்த திருமாவளவன், உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் ஆகியோர் ஈழ உரையாற்றினார்கள். ஈழ போராளிகளின் வீரவணக்க பேச்சு 20 நிமிடம் ஒலிப்பரப்பப்பட்டது.

அதன்பின்னர்,  பார்வதி அம்மாளின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள தமிழ்பாவையின் சிலை அருகே ஜோதி ஏற்றப்பட்டது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். பிரபாகரன் மற்றும் அவரது மகன் பாலச்சந்திரன் திருவுருவச்சிலைகளுக்கு ஜோதி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.

இலங்கையிலிருந்து வந்திருந்த ஈழத்தமிழர்கள், "எங்கள் மண்ணில், எங்கள் சொந்தங்கள் இறந்த துக்க நிகழ்ச்சிகளை கொண்டாட அனுமதி இல்லை, ஏன் அழக்கூட அனுமதியில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் மாவீரர்களை இழந்திருக்கிறோம்" என்று சொல்லி, முற்றத்தில் கதறி அழுதனர்.

ஈழத்தாயை பார்க்க சென்ற திக் திக் நிமிடங்கள்... முள்ளிவாய்க்கால் பத்மா சிறப்பு பேட்டி!

மாவீரர் தின நிகழ்ச்சிகளின் இடையே,  'ஈழத்தாயைச் சந்தித்த ஈர நினைவுகள்' எனும் நூலை எழுதிய  முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் துணை செயலாளர் பத்மாவை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

பிரபாகனின் தாய் பார்வதி அம்மாளை நேரில் சென்று சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி வந்தது?

என்னுடைய பூர்வீகம் ராமநாதபுரம் என்பதால் கச்சத்தீவு திருவிழாவிற்கு போவார்கள் என்னுடைய சொந்தக்காரர்கள். எங்க மாமா கொழும்புவில் இருந்தார். எங்களுக்கு சொந்த பந்தங்கள் அங்குதான் அதிகம். 1985ல் கொழும்புவிற்கு சென்று 25 நாள் தங்கியிருக்கிறேன். வைகோவின் ஈழத்தை பற்றிய பேச்சால் ஈர்க்கப்பட்டு, மதிமுகவில் இணைந்தேன். பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சைக்காக இறங்கவிடாமல் செய்தது என் இதயத்தை பாதித்துவிட்டது. அதுதான் பார்வதி அம்மாளை நான் நேரில் போய் பார்க்க வேண்டுமென எண்ணம் தோன்றியது. அந்த நேரத்தில் என்னுடைய மாமா இறந்துபோய்விட்டார். என்னுடைய மாமா பிள்ளைகள் மட்டும் இருந்தார்கள். நான் யார்கிட்டேயும் சொல்லவில்லை. என் மகளிடம் மட்டும் சொல்லிவிட்டு போனேன். நான் 1985ல் போனபோது 'அங்கே இரு இரு..!' ன்னு சொன்ன எனது மாமாவின் சொந்தங்கள், 2011ல் போகும்போது என்னைக் கண்டு பயந்தார்கள். 'நீங்கள் கருணாநிதி கட்சியாக இருந்தால் பயப்பட மாட்டோம், வைகோ கட்சியாக இருப்பதால்தான் பயப்படுகிறோம்' என்றார்கள்.  

உங்களுடைய சொந்தங்கள் உங்களுக்கு உதவினார்களா, எப்படிப்பட்ட நெருக்கடிகளை சந்தித்தீர்கள்?

என்னுடைய சொந்தங்கள் யாரும் எனக்கு உதவவில்லை. நானாகத்தான் எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ஆட்டோ, பஸ் ஏறி சுற்றினேன். சொந்தங்களை விட்டுவிட்டு பிரபாகரன் வீட்டையும், யாழ்ப்பாணத்தையும் பார்த்துவிட வேண்டுமென்று கிளம்பிவிட்டேன். பார்வதி அம்மாளை பார்க்க நான் சுற்றும்போது என்னுடைய மடியில் கேமராவை வச்சுக்கிட்டு க்ளிக் செய்துகொண்டு போனேன். புத்தகத்திலில் வெளியிட்டுள்ள படங்களெல்லாம் ஈழத்தில் எடுத்த படங்கள். ஆனால் அது எந்த இடம் என்பது எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு போட்டோ எடுக்கக்கூடாது என்ற நெருக்கடி. ஆட்டோ, பஸ் பிடித்து பல்வேறு சிரமங்களுக்கிடையே ஓமந்தலை சென்றடைந்தேன். என்னை பார்த்து ஓடிவந்த ஒரு பெண், 'இங்குதான் பிரபாகரன் ஆட்சி செய்த இடம், நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்து என்னை விசாரித்தார்கள். அவர்கள் விசாரணை ஒரு நாள் இரவு முழுக்க நடந்தது. 'எதற்காக யாழ்பாணம் போகிறீர்கள்... உங்களுக்கு பயமாக இல்லையா யாழ்ப்பாணம் போவதற்கு?' என்று கேட்டார்கள். இல்லையென்று சொல்லி,  'என்னுடைய பாஸ்போர்ட்டை கொடுங்கள்' என்று கேட்டேன். அப்போது அங்கே வந்த அதிகாரி'  என்னை திருப்பி அனுப்பிவிட்டார்.

ஈழத்தாயை பார்க்க சென்ற திக் திக் நிமிடங்கள்... முள்ளிவாய்க்கால் பத்மா சிறப்பு பேட்டி!

பார்வதி அம்மாளை தேடி கண்டுபிடித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

பார்வதி அம்மாவை பார்க்க போவதாக நான் யாரிடமும் சொல்லவில்லை. யாரிடமும் விபரம் கேட்கவில்லை. யாழ்ப்பாணம் போகவேண்டும், அங்கேதான் அம்மா இருப்பார் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு போகவேண்டுமென்றால் யார் வீட்டுக்கு போக வேண்டும் என்று எழுதி கொடுத்து, அங்குள்ள அதிகாரிகளிடம் அனுமதி பெற்றால்தான் செல்ல முடியும். அப்படியொரு நிலை. திரும்பி போய்விடலாமா என்ற யோசனையும் வந்தது என் மனதில். 'இவ்வளவு தூரம் வந்து, கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் வரை வந்துவிட்டு, அம்மாவை பார்க்காமல் செல்லணுமா?' என்று என் மனம் என்னை கேள்வி கேட்டது. அப்போதுதான் அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு சென்றேன். தேனீரை வாங்கி அருந்திக்கொண்டே தமிழகத்தில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். 'திரும்பி வந்துவிடுங்கள்' என்று சொன்னார்கள். என் மனம் கேட்கவில்லை. அந்த ஓட்டல் உரிமையாளரிடம், ஆட்டோ பிடித்து தருமாறு உதவி கேட்டேன். என்னிடம்  பரிவுடன் விசாரித்த அந்த உரிமையாளர், 'யாழ்ப்பாணத்தில் எங்கள் வீடு இருக்கிறது. நீங்கள் அங்கு எப்ப வேண்டுமானாலும் வரலாம்' என்று எனக்கு அடைக்கலம் கொடுத்தார். அந்த தைரியம் என்னை அந்த வீரத்தாயை பார்க்க வைத்தது.

அம்மாவை தேடி அலைந்து கொண்டிருந்தபோது வல்வெட்டித்துறையில், அம்மா மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள். ஓட்டல் உரிமையாளர் என்னை சுற்றிப்பார்க்க வேண்டுமென அழைத்துச் சென்றார். அப்போது கூரிக்காடு பகுதியில் பிரபாகரன் வீடு இருப்பதாக சொன்னார். அந்த நிமிஷம் நான் பூரித்துபோய்விட்டேன். பிரபாகரன் வீட்டை பார்க்க போகிறோமே என்ற ஆனந்தத்தில், அந்த இடத்தில் காரை நிறுத்தச் சொல்லி,  அங்கிருந்து ஒருபிடி மண்ணை எடுத்துக்கொண்டு வந்தேன். அங்கிருந்து புறப்பட்ட கொஞ்ச தூரத்தில், 'இதுதான் வல்வெட்டித்துறை' என்றார். அருகே மருத்துவமனை இருந்தது. 'இந்த மருத்துவமனையில்தான் அம்மா இருக்கிறார்' என்றார். 'எப்படியாவது பார்த்துவிட வேண்டும், அதுதான் என்னுடைய லட்சியம்' என்று சொன்னேன். 12 மணிக்கு பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். காத்திருந்து போனோம். மருத்துவமனையின் வரவேற்பிற்கு போய், 'அம்மா...!' என்று சொன்ன போது, 3ம் நம்பர் என்று சொன்னார்கள். போய் பார்த்தபோது தாங்கமுடியாத ரணம் என் மனதில் பட்டது. என் மனதை தேற்றிக்கொண்டு, பிரபாகரனின் பெற்றெடுத்த வயிறல்லவா? அந்த வயிற்றை தடவிப் பார்த்தேன், முகங்களையெல்லாம் வருடிப் பார்த்தேன், என்னையும் தாண்டி என் மனம் அழ ஆரம்பித்தது.

ஈழத்தாயைச் சந்தித்தபிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

எனக்கு ஒவ்வொரு வினாடியும் பயம். அம்மாவை பார்க்கும்போது, 'அம்மாவிடம் நீங்க யாரு?'ன்னு சொல்வது என்று கேட்டார் மருத்துவமனையின் செவிலியர். 'உங்க மகள் வந்துவிட்டு போனாள் என்று சொல்லுங்கள்!' என கூறிவிட்டு வந்தேன். 'வாய்ப்பு இருந்தால் மீண்டும் ஒரு முறை வருவேன்'னு சொல்லிட்டு வந்தேன். ஆனால், பிரபாகரன் காலடிப்பட்ட அந்த மண்ணை, அங்கிருந்தவர்களிடம் கொடுத்தேன். அந்த மண்ணை எடுத்து பக்தியாக நெற்றியில் பூசிக்கொண்டார்கள். யாருமே சென்று அம்மாவை பார்ப்பதில்லை. 'பார்த்தால் அங்குள்ளவர்களுக்கு நெருக்கடி தருவார்கள்' என்றார்கள். அதனால்தான் பார்ப்பதில்லை என்று சொன்னார்கள். 

நான் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு  வந்த பின்னர், தாம்பரம் சித்த மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த எனது தாயை பார்க்க  சென்னையில் பிப்ரவரி 20-ம் தேதி இறங்கியபோது, வீரத்தாய் இறந்துபோனாள். இறுதியாக கன்னியாகுமரியில் அவருடைய அஸ்தியை அண்ணன் வைகோ, அப்பா பழ.நெடுமாறன், காசிஆனந்தன் ஆகியோர் என்னை கரைக்க சொன்னார்கள். நான் கரைத்தேன். அன்று எனக்கு 53-வது பிறந்தநாள். அந்த நாளை நான் பூர்வ புண்ணியமாக, பாக்கியமாக கருதுகிறேன்.


-ஏ.ராம்


படங்கள்:
கே.குணசீலன்