Published:Updated:

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!
அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

’’பல்வேறு அவமானங்களைச் சந்தித்தபோதும், இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று அம்பேத்கர் ஒருபோதும் சொல்லவில்லை!”

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினத்தை நினைவுகூர்ந்து பேசியபோது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியது இது. சகிப்பின்மை குறித்து அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு மறைமுகமாகப் பதில் சொல்லியுள்ளார் உள்துறை அமைச்சர். வல்லபாய் படேலை காந்திக்கும் நேருவுக்கும் எதிராக நிறுத்தி, தேசபக்தி விளையாட்டைத் தொடங்கிய பா.ஜ.க, இப்போது அம்பேத்கரையும் அமீர்கானையும் எதிரெதிராக நிறுத்தி தேசபக்தி குறித்த கருத்துருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறது.

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

தேசம் என்பது என்ன? எல்லைக்கோடுகளா, தேசியக் கொடி, தேசியக்கீதம் போன்ற சின்னங்களா, கிரிக்கெட்டில் இந்தியா ஜெயிக்கும்போதோ அல்லது பாகிஸ்தான் தோற்கும்போதோ எழும் ஆரவாரமா? இல்லை. தேசம் என்பது வெவ்வேறு கலாசாரப் பின்னணியைக் கொண்ட பல்வேறு மக்கள் குழுக்கள், தங்களுக்கான தனித்துவ அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டே, எல்லோரும் இசைவாக வாழ்வதற்கு ஏற்ற நிலப்பரப்பு. அத்தகைய சமூக அமைதியும் நல்லிணக்கமும் சீர்குலையும்போது, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வலிகளைப் பதிவு செய்தாலோ, மற்றவர்கள் அதைச் சுட்டிக்காட்டினாலோ அது தேசத்தின்மீது இழைக்கப்பட்ட அவமானமாகக் கட்டமைக்கப்படுகிறது. அதுதான் அமீர்கானுக்கு எதிராக எழுந்த கூச்சல்கள்.

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரியை ’WE, THE NATION’ என்று எழுதவேண்டும் என்று மற்றவர்கள் வலியுறுத்தியபோது, ’WE, THE PEOPLE OF INDIA’ என்று எழுதவேண்டும் என்று வலியுறுத்தி வெற்றி கண்டவர் அம்பேத்கர். ஆக, அம்பேத்கரைப் பொறுத்தவரை ’தேசம்’ என்பது மக்கள்தான். இன்றைய பா.ஜ.க.வோ அமீர்கான் எதிர்ப்பாளர்களோ வலியுறுத்துவதைப்போல தேசம் என்பது சின்னங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலப்பரப்பு மட்டுமே என்று அம்பேத்கர் நினைக்கவில்லை.

‘’முழு அரசுரிமை படைத்த சுதந்திர இந்தியா, முற்றிலும் வேறுபட்டதொரு புதுமையான இந்தியாவாக, உலகமே வியந்து போற்றும் இந்தியாவாக இருக்க வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினருக்குத் தொண்டூழியம் புரியும் ஓர் அடிமைத்தனமான வகுப்பினர் இல்லாதிருக்கும் ஒரு புதுமையான இந்தியா பூத்து மலர வேண்டுமானால், ஆதிக்க வகுப்பினர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆற்றலை மட்டுப்படுத்தக் கூடிய, இது சம்பந்தமாக முறையான பாதுகாப்புகளை அளிக்கக்கூடிய, ஆதிக்க வகுப்பினரின் கொள்ளைக்காரத்தனமான அதிகார வெறிக்கு “லகான்’ போடக்கூடிய ஓர் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்” - அம்பேத்கர் தொகுப்பு’ : 9 பக்கம் : 230.

அரசியலமைப்புச் சட்டம் அமைக்கப்படுவதற்கு முன்பு அம்பேத்கர் தெரிவித்த கருத்து இது. எல்லோருக்கும் சமநீதியையும் சமவாய்ப்பையும் வழங்கக்கூடிய ஒரு தேசத்தையே அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அமீர்கான் இந்தியாவின் சகிப்பின்மை குறித்து இப்போதுதான் கருத்து தெரிவித்து, கண்டனங்களைச் சந்தித்திருக்கிறார். ஆனால் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் பேசியதும் எழுதியதும்  பெரும்பான்மை இந்தியர்களான சாதி இந்துக்களின் சகிப்பின்மை பற்றித்தான். வேதகாலத்திலிருந்து தான் வாழ்ந்த சமகாலம் வரை எப்படி சகிப்பின்மை படிப்படியாகக் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது, அதுவே விதிகளின் தொகுப்பாக உருவாக்கப்பட்டு நிறுவனமயமாக்கப்பட்டது என்பதையும் அம்பேத்கர் வலியுறுத்தினார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமையில் இருந்தவர்கள் இந்த சகிப்பின்மையைக் கடைப்பிடித்த, மிகச்சிறுபான்மையினரான ஆதிக்கச் சாதியினர்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காந்தியின் தலைமைக்குப் பின்புதான் விடுதலைப் போராட்டத்தில் வெகுமக்களின் பங்களிப்பு வந்தது. அப்போதும் சாதி இந்துக்களின் சகிப்பின்மை தொடர்ந்ததையே அம்பேத்கர் சுட்டிக்காட்டி நிறுவினார். அதனால் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அவமானங்களைச் சந்தித்தார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சகிப்பின்மையைக் கண்டுகொள்ளாத, அவர்களுக்குச் சமநீதி வழங்குவதில் அக்கறை காட்டாத தேசிய விடுதலை இயக்கமா, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளா என்று வந்தபோது, அவர் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பக்கமே நின்றார். அதனாலேயே அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்று இகழப்பட்டார். அம்பேத்கரைத் தேச விரோதி என்றது அன்றைய காங்கிரஸ். இன்று அம்பேத்கரைத் தேசபக்தராகக் கட்டமைத்து அமீர்கானைத் தேசவிரோதி என்கிறது பாரதிய ஜனதா. வரலாற்றின் சுவாரஸ்யம்தான்!

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

ராஜ்நாத்சிங் மட்டுமல்ல, மோடியும்கூட ‘’அம்பேத்கர் ஒரு தலித்தாக இருந்து அவமானங்களைச் சந்தித்தபோதும் அது அவர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரதிபலிக்கவில்லை” என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இந்தக் கூற்றே அடிப்படையில் தவறானது. தான் அவமானப்படுத்தப்பட்டதால் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தில் வெறுப்பைப் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவர் அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கிய பல்வேறு ஜனநாயகக்கூறுகள், அவரது பாதிக்கப்பட்ட அனுபவங்களில் இருந்தும், சமத்துவத்தை வலியுறுத்தும் அவரது வேட்கையிலிருந்துமே உருவாயின. அரசியலமைப்புச் சட்டம் என்பதை முற்றுமுழுதாக அம்பேத்கர் மட்டுமே உருவாக்கவில்லை.

இந்திய அரசியல் சட்டம் அவருக்கு முழுநிறைவு அளித்த ஒன்றும் இல்லை என்பதை அவரே பதிவு செய்திருக்கிறார். ஆனாலும் ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் போன்றோருக்கான உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் அம்பேத்கர்தான். நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோதும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்தே சிந்தித்து ‘இந்து சட்டத்தொகுப்பு மசோதா’வைக் கொண்டார். சனாதனிகளின் எதிர்ப்பால் 'இந்துசட்டத்தொகுப்பு மசோதா' வை அவரால் நிறைவேற்ற முடியாமல்போனபோது அமைச்சரவையிலிருந்து விலகினார். அப்போது அவர் பேசிய உரையை, அமீர்கானை எதிர்த்து வெற்றுக்கூச்சல் போடுபவர்கள் அவசியம் படிக்கவேண்டும்.

சரி, அமீர்கான் “சகிப்பின்மை அதிகரித்துவிட்டது. வேறுநாட்டுக்குப் போய்விடலாமா என்று என் மனைவி கேட்கிறார்” என்றுதான் சொன்னார். ஆனால் அம்பேத்கர் என்ன சொன்னார் தெரியுமா?

அம்பேத்கர் தேசபக்தர், அமீர்கான் தேச விரோதியா? - பா.ஜ.கவுக்கு ஒரு கேள்வி!

”எனக்குத் தாய்நாடு உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்குத் தாய்நாடு இல்லை. நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்?” - அம்பேத்கர்.

இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் (பாரதிய ஜனதா கட்டமைக்கும்) ‘தேசபக்தரா’.... அமீர்கான் தேச விரோதியா? என்று!

கடைசியாக ஒன்று, அம்பேத்கர் நாட்டை விட்டு வெளியேறவில்லைதான். ஆனால் ராஜ்நாத்சிங்கும், மோடியும், சங்பரிவாரும் தூக்கிப்பிடிக்கும் இந்து மதத்திலிருந்து அவர் வெளியேறினார். அதற்கான காரணங்கள் என்ன, அதற்கான நியாயங்கள் இன்றளவும் இருக்கிறதா, இல்லையா என்று பாரதிய ஜனதா எப்போதாவது பரிசீலித்திருக்கிறதா?

- ரீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு