Published:Updated:

ஜெ.முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும்: இளங்கோவன்

விகடன் விமர்சனக்குழு
ஜெ.முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும்: இளங்கோவன்
ஜெ.முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும்: இளங்கோவன்
ஜெ.முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும்: இளங்கோவன்

சென்னை: சென்னையின் வெள்ள பாதிப்புக்கு முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள  தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், இதற்கு பொறுப்பு ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தப்பட  வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

இது தொடர்பாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் நவம்பர் 17–ம் தேதி 18,000 கனஅடி நீரும், டிசம்பர் 2–ம் தேதி 29,000 கனஅடி நீரும் திடீரென முன்னறிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் திறந்துவிடப்பட்ட காரணத்தால் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதற்கும், உடமைகளை இழப்பதற்கும் முதல்–அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகத்தில் எந்த அணையையும் திறப்பதும், மூடுவதும் முதலமைச்சர் ஆணையின் அடிப்படையில் அதிகார குவியல் காரணமாக நடக்கிறபோது செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பதற்கு கீழ்நிலையில் அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

அடையாறு, கூவம் ஆகிய ஆறுகள் கடந்த நான்கரை ஆண்டுகாலமாக தூர்வாரப்படாத காரணத்தால் வெள்ளப்பெருக்கை கடல் முகத்துவாரங்களில் உள்வாங்கி, அனுப்ப முடியாமல் திரும்பவும் வெள்ள நீர் குடியிருப்புகளை தாக்குகிற அவலநிலை ஏற்பட்டதற்கு யார் பொறுப்பு?

தமிழகத்தில் 600–க்கும் மேற்பட்டவர்கள் வெள்ள பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டதோடு, ஏழை எளிய, நடுத்தர மக்கள் தொழிற்சாலைகள் என அனைத்து தரப்பினருடைய இழப்பு லட்சக்கணக்கான கோடி ரூபாயை எட்டியிருக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த போரூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. அவற்றை இளங்கோவன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘‘முன் எச்சரிக்கை நடவடிக்கை இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால்தான் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. தண்ணீர் திறக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பே முன் அறிவிப்பு எதுவும் விடப்படவில்லை. அரசு அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததால் தான் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜெயலலிதா முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியை கொண்டு வரவேண்டும்.

மத்திய அரசு தற்போது வழங்கிய நிதி போதாது. முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்" என்று கூறினார்.