Published:Updated:

அப்துல் கலாம் கையால் விருது வாங்கியவருக்கு இப்போது தேவை ஒரு பஸ் பாஸ்!

அப்துல் கலாம் கையால் விருது வாங்கியவருக்கு இப்போது தேவை ஒரு பஸ் பாஸ்!
அப்துல் கலாம் கையால் விருது வாங்கியவருக்கு இப்போது தேவை ஒரு பஸ் பாஸ்!

அப்துல் கலாம் கையால் விருது வாங்கியவருக்கு இப்போது தேவை ஒரு பஸ் பாஸ்!

'அடுத்தது யார்... எந்த சாலையோரத்தில் அவர்கள் வாழ்விடம்...?’ என்ற கேள்வியோடு ஓடிக் கொண்டே இருக்கிறார்  மணிமாறன். 

நான்கு முறை  அப்துல் கலாம் கைகளால் விருது, ஒருமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதா கைகளால் விருது, சமீபத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கைகளால் விருதுடன் பெற்ற லட்ச ரூபாய் ரொக்கம்... 

இவையெல்லாம் மாறனின் சமூக சேவைகளுக்கான  அரசுத்துறை அங்கீகாரம். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இன்னும்... இன்னும் என ஓடிக் கொண்டே இருக்கிறார் இளைஞர் மணிமாறன்!

அப்துல் கலாம் கையால் விருது வாங்கியவருக்கு இப்போது தேவை ஒரு பஸ் பாஸ்!

" எப்போது, இளைப்பாறுவதாக எண்ணம்? உங்களுக்கென்று எந்த ஆசைகளும் தேவைகளும் இல்லையா...?" என மணிமாறனை அவரோடு ஓடிக்கொண்டே ஒரு பாய்ன்ட்டில் பிடித்து கேள்வியை முன்வைத்தோம்.

’’இதெல்லாம் ஒண்ணுமேயில்லைங்கய்யா... இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதுக்குத்தான் இப்படி நிற்காம ஓடிக்கிட்டே இருக்கேன்... இப்ப  ஓரளவுக்கு வேளச்சேரியை முடிச்சுட்டேன். அப்படியே காஞ்சிபுரம் வந்திருக்கேன். ஆரணி, அப்புறம் திருவண்ணாமலை மல்லவாடின்னு போயிட்டு அங்கிருந்து கடலூருக்கு போயிடுவேன். என்ன கவலையா இருக்குன்னா கைநீட்டி கேக்கிறவங்ககிட்ட இல்லேன்னு சொல்லிடக்கூடிய சூழ்நிலை வந்திடக்கூடாதேங்கறதுதான்!’’

’’உங்கள் சேவைகளுக்கான பயனாளிகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சேவைக்கான செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?’’ 


 ’’அய்யா, சாலையோரத்துல கேட்பாரற்று கிடக்கிற மனிதர்கள்தான் என் கண்ணில் தெரிகிற மனிதர்கள். அதிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு, புண்களில் சீழ் வடிந்து கொண்டிருக்கும் மனிதர்களை  சராசரி மனிதர்கள் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் அப்படியானவர்கள் மீது நான் கவனம் செலுத்துகிறேன். அவர்களைத் தொட்டு, அந்தப் புண்களை பஞ்சினால் துடைத்து சோப்பு போட்டு கழுவி... அதன் பின் அவர்களுக்கான உணவை என் கைகளால் புகட்டும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர்களுக்கு பாய், போர்வை போன்றவைகளையும் கொடுத்து அரவணைத்துக் கொள்வதில்தான் வாழ்க்கையின் சந்தோஷமே இருக்குங்கய்யா.

அய்யா, அப்புறம் என்னமோ கேட்டீங்களே.. ஆங்... அந்த பண்ட் எப்படிங்கறதுதானே ? யாருகிட்டேயும் கை நீட்டி டொனேஷன் அது, இதுன்னு கேட்கறதில்லைய்யா.. தொண்டு நிறுவனங்கற பேருல நிறைய பேருங்க தப்புத் தப்பா கிளம்பிட்டாங்களா... நம்மளையும் அதில சேர்த்திடக் கூடாதேங்கறதால கையே நீட்டறதில்லே. ஊர்ல பனியன், ஷர்ட் கிளாத்துங்களை வாங்கியெடுத்து மும்பை, டெல்லின்னு எக்ஸ்போர்ட் பண்ணிக்கிட்டு வர்றேன். அந்த லாபத்தை இதில் கொண்டு வந்து போட்டுடறேன்..

’’இளைஞர்களின் கனவு நாயகன் கலாம் கைகளால் பலமுறை விருது வாங்கி இருக்கிறீர்கள்.. அந்த தருணங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..."

அப்துல் கலாம் அய்யாக்கிட்டே 2006, 2008, 2010 மற்றும் 2012- ம் ஆண்டுகளில் சிறந்த தொண்டுக்கான சமூக சேவகர் அவார்டை வாங்கிட்டு வந்திருக்கேன்.  ஒவ்வொரு முறையும்  கலாம் அய்யாவை சந்திக்க சென்ற போதெல்லாம்,  அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, "சாப்பிட்டீங்களா.. இப்ப ஏதாவது சாப்பிடறீங்களா ?" என்பதுதான்.

அப்துல் கலாம் கையால் விருது வாங்கியவருக்கு இப்போது தேவை ஒரு பஸ் பாஸ்!

ஒன்றரை மணி நேரத்துக்கு குறையாமல் என்னிடம் மட்டுமே பேசுவார். நலம் விசாரிப்பார், குடும்பத்தை பற்றிக் மறக்காமல் விசாரிப்பார். எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னிடம் கேள் என்பார். ஆனா, இப்போ அவர் இல்லையே!  (கண் கலங்குகிறார்). 

ஒருமுறை கலாம் அய்யாகிட்டே விருது வாங்கப் போயிருந்த போது, 'தனிமரம்கறது எப்போதுமே தோப்பாகாது.. நீங்க செய்து கொண்டிருப்பதற்கு பெயர் சர்வீஸ் அல்ல.. கடமை. சர்வீசுக்கு வரணும்னா ஒரு கட்டமைப்பை உருவாக்கி இதை இளைஞர்கள் கைகளுக்கு கொண்டு போகணும், அதுதான் சர்வீஸ்'  என்று ஸ்ட்ராங்காகவும் அதே நேரத்தில் மென்மையாகவும் எடுத்துச் சொன்னார். அதன் பின்னர்தான் 2008-ல் திருவண்ணா மலையில் 'உலக மக்கள் சேவை மையம்' என்ற தொண்டு நிறுவனம் தொடங்கினோம்.. ரிப்பன் வெட்டியது கலாம் அய்யா!’’

’’மற்றவர்களுக்காகவே வாழணும்னு எப்படி முடிவெடுத்தீங்க?”    

’’ஒரே காரணம் மதர் தெரசா. தொழுநோயாளிகளை அவர் தொட்டு, மருந்து போட்டு  கருணையுடன் அவர்களை முத்தமிட்டுச் சென்றதை நினைத்து நினைத்தே நான் இப்படி மாறிப்போனேன். என் ரோல் மாடலும் அம்மா தெரசாதான். அதையே நான் செய்து அந்த பணியில் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டுமென்று நினைத்தேன். அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.  தொழுநோயாளிகளை கண்டெடுத்து மருந்திட்டு, பின் ஹோமில் அவர்களை சேர்த்து விடுகிறேன். அவர்களின் உணவு, உடைகளுக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அவர்களில் யாராவது இறந்து போய்விட்டால் அவர்களின் உடல்களை நானே வாங்கி அடக்கம் செய்யும் வேலையையும் செய்து விடுகிறேன்!”

’’உங்களுக்குனு ஏதேனும் தேவை இருக்கா?”

’’ ஒண்ணுமில்லைங்கய்யா..  ஒரு விபத்து நடக்குதுன்னா, அந்த ஸ்பாட்டுக்குப் போய் உடனே உதவ முடியலை. 'சமூக சேவகர்னு அரசாங்கம் உன்னை அங்கீகாரம் பண்ணி இருக்கா?ன்னு போலீஸ்ல கேள்வி கேட்டு, அந்த நேரத்துக்கான என் அவசர உதவியை  செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள். இந்த  தமிழக முதல்வரால், இந்த அரசால் சமூக சேவகர்னு நான் விருது பெற்றுள்ளேன்.  அதையே எனக்கான அடையாள அட்டையாக வழங்கி விட்டால் என் பணியை இன்னும் வேகப்படுத்த முடியும். அதேபோல், பேரூந்து பயண செலவுகளுக்காக மட்டுமே மாதத்தில் எனக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த அரசு எனக்கு பேரூந்துகளில் பயணிக்க ஸ்பெஷல் கோட்டாவில் இலவச பஸ் பாஸ் வழங்கிட வேண்டும். எனக்கென்று இருக்கிற எதிர்பார்ப்பு இப்போதைக்கு இது மட்டும்தான்!’’

’’வயசு முப்பதை தொட்டிருச்சே... கல்யாணம் எப்போ?”


 ‘’அய்யா... இந்த ஓட்டத்துக்கு நடுவுல தூங்கவே நேரம் இல்லை. இதுல கல்யாணமா...? அதுக்கெல்லாம் நேரம் இல்லைய்யா!”

- ந.பா.சேதுராமன்

அடுத்த கட்டுரைக்கு