Published:Updated:

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!
8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!
8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

ன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்த போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பலர்,  எட்டாவதைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் சூட்டைக் கிளப்பிய அதே வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை மையம் கொண்டு சுழலத்துவங்கியிருக்கும் இந்த புயல், கல்வித்துறையை கதிகலங்கடித்துள்ளது இப்போது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர சான்றிதழ் பரிசோதனைகள் நடந்துவருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், போலியான ஆசிரியர் பட்டச்சான்றிதழ் மற்றும் ஆசிரிய பட்டயச் சான்றிதழ்களை கொடுத்து ஏராளமானோர் பணியில் சேர்ந்துள்ளதாக, கடந்த 2003‍ -ம் ஆண்டு இறுதியில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சான்றுகள் சரிபார்ப்பு பணிகளை கல்வித்துறை கையிலெடுத்தது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை அடுத்து, பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு போகாமல், 'ஆப்சென்ட்' ஆகினர்.

இது குறித்த முக்கிய ஆதாரத்தின் அடிப்படையில், தர்மபுரி குற்றப்பிரிவு போலீசில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. சோதனையில்,  பலர் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. ஒட்டுமொத்த கல்வித்துறையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றது. இதனால் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு போலியான சான்றிதழ்கள் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள், ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.

முன் ஜாமீன் வாங்குவதிலும், தெரிந்த ஆட்களைப் பிடித்து கைதிலிருந்த தப்பிப்பதிலும் பல போலி ஆசிரியர்கள் முனைந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை பூதாகரமாகியுள்ளது.

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

2016 ம் ஆண்டு துவக்கத்தில் மக்கள் புத்தாண்டு குதூகலத்தில் கிடக்க, போலி ஆசிரியர்கள் கலக்கத்தில் இருந்தனர். காரணம் புத்தாண்டு கொண்டாட்டப் பொழுதில் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறையின் தனிப்படைகள்,  'போலி'களை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். ரெய்டில் அடுத்தடுத்து பலர் சிக்கினர். பாலக்கோடு முனியப்பன், போச்சம்பள்ளி செந்தில்குமார், கிருஷ்ணகிரி ராஜேந்திரன், முனியப்பன் என முதல் வேட்டையிலேயே நால்வர் சிக்கினர்.
 
கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் அருள்சுந்தரம், குருபரப்பள்ளி ஆசிரியர் மாரியப்பன், அரசம்பட்டி சுதாகரன், வேலூர் குணசேகரன், மனோகரன் மற்றும் ஆத்தூரில் பணியாற்றும் ஆசிரியைகள் என சுமார் நூறு பேர் வரை, இந்த மாவட்டங்களில் போலிகளாக வகுப்பெடுத்து வந்ததை காவல்துறை கண்டுபிடித்தது. ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானதோடு, முன் ஜாமீன் கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிகிறது.

இவர்களில் பாலக்கோடு முனியப்பனும், கிருஷ்ணகிரி ராஜேந்திரனும் ஆசிரியர் பணியில் இருந்ததோடு, 'பத்தாம் வகுப்பு பெயில்' ஆன பலநூறு பேர்களை போலி ஆசிரியர் சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர்களாக்கி உள்ளனர் என்பதால், போலீசார் இவர்களிடமிருந்து விசாரணையை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

சென்னையில் இதே விவகாரத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் சிக்கி சிறை சென்றவர்,  'போலி கல்விச் சான்று' தரகர் ஏகாம்பரம். அப்போது அவரைக் கைது செய்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், போலி சான்று தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், பல ரகங்களில் இருந்த மை பாட்டில்கள், ரப்பர் ஸ்டாம்புகள், தயார் நிலையில் பெயரை மட்டும் போடாமல் வாடிக்கையாளருக்காக காத்திருந்த  ஆயிரக்கணக்கான சான்றுகள் என அனைத்தையும் 'டிஸ்பிளே" வைத்தனர்.

அத்தனையும் சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, அயனாவரம், புரசைவாக்கம், ராயபுரம், காசிமேடு, பழைய மற்றும் புது வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர் தாங்கல் பகுதிகளில் தயாரிக்கப்பட்டவை என்பதோடு, அந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் போலி ஆசிரியர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டுவரை படித்தார்கள் என்பது போல் சான்றுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் 'போலிகள்' பி.எட், பட்டய ஆசிரியர் (டிடி.எட்) போன்ற படிப்புகளை முடித்ததாக சான்றுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் காவல்துறை தீவிரம் காட்டி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இப்போது போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் தொடர்கதையாகி இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எப்படியோ இந்த கல்வியாண்டின் தொடக்கத்திற்குள் "போலி" களை களையெடுத்துவிடுவோம் என்கிறது காவல்துறை.

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

கல்வித்துறையின் மீது படிந்த இந்த களங்கம் உடனடியாக துடைக்கப்படவெண்டும் என ஆட்சி மேலிடத்திலிருந்து கடுமையான உத்தரவு காவல்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால்,  வடமாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஐந்து எஸ்.பி.களின் தலைமையில் தேடுதல் பணி நடந்துவருகிறது. தலைநகரிலும் களையெடுப்பு பணி துரிதவேகத்தில் நடைபெற்றுவருகிறது.

கல்வித்துறையை களங்கப்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில்,  நம் முன் எழும் சில கேள்விகள்...

காவல்துறை மெத்தனமான நடவடிக்கையை முந்தைய சம்பவத்தில் கடைபிடித்தது ஏன்... அன்று சிக்கிய ஏகாம்பரம் என்ன ஆனார்? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஏகாம்பரத்தின் தொடர்பில் இருந்தவர் எனறு கூறப்பட்டவரும், சந்தேகத்தில்பேரில் போலீசார் விசாரிக்கப் போனபோது விஷம் குடித்தவருமான சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் அன்றைய ஊழியர் இப்போது என்ன செய்கிறார்?

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

காவல்துறையிடம் ஏகாம்பரமும், ஏகாம்பரத்தின் கூட்டாளியான மனோகரனும் அளித்த வாக்குமூலத்தில்,  சென்னை மாநகராட்சியில் அன்று பணியில் இருந்த கல்வி மற்றும் சான்றளிப்புத் துறையின் பொறுப்பாளர்கள் மூவரை கை காட்டினார்களே,  அந்த மூவர் (மிக சமீபத்தில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்) இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் நடக்காதது ஏன்?

கட்டணக் கொள்ளை, கல்வித் தரமின்மை என்று பல விஷயங்கள் தமிழ்நாட்டை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்க,  இதில் 'போலி' களும் சேர்ந்து கொண்டால் தமிழகத்தின் கல்விச்சூழல் எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கவலை மனதை சூழ்கிறது.

வரும் ஆசிரியர் தினத்திற்குள் அத்தனை போலி ஆசிரியர்களையும் களையெடுத்து,  இந்த போலிகளை உருவாக்கும் மோசடி நெட்வொர்க் கும்பலையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையேல் தமிழகத்தில் கொண்டாடப்படுவது 'போலி ஆசிரியர்' தினமாகத்தான் இருக்கும்!

கல்வித்துறை இனிமேலாவது பாடம் கற்கவேண்டும்!

- ந.பா.சேதுராமன்