Published:Updated:

'கோ'குல இந்திரா, சசிகலா 'புஷ்'பா; அதிமுகவில் அடுத்த அதிரடி!

 'கோ'குல இந்திரா, சசிகலா 'புஷ்'பா; அதிமுகவில் அடுத்த அதிரடி!
'கோ'குல இந்திரா, சசிகலா 'புஷ்'பா; அதிமுகவில் அடுத்த அதிரடி!

சென்னை; அதிமுக மகளிரணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திராவை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. முன்னதாக அதிமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து அவரை ஜெயலலிதா விடுவித்துள்ளார்.

அதிமுகவில் யாருக்கு எப்போது பதவி கிடைக்கும் யார் எப்போது பதவியிலிருந்து கிழட்டிவிடப்படுவர் என்பது அந்த கட்சியின் பொதுச்செயலாருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கட்சியின் முக்கியஸ்தர்களில் இருந்து கடைக்கோடி தொண்டன் வரையில் ஏதோ ஒரு நேரத்தில் அந்த சத்திய சோதனையை சந்தித்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளரான நாஞ்சில் சம்பத் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டி தொடர்பாக தம் பதவியை இழந்தார்.

நாஞ்சில் சம்பத் அதை ஜீரணிப்பதற்கு முன்பு கட்சியின் அடுத்த அதிரடியை அரங்கேற்றியிருக்கிறார் ஜெயலலிதா. கட்சியின் கழக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் கோகுல இந்திராவை 'விடுவித்த' அவர் கட்சியின் மகளிரணி செயலாளராக அவரை நியமித்திருக்கிறார்.

 'கோ'குல இந்திரா, சசிகலா 'புஷ்'பா; அதிமுகவில் அடுத்த அதிரடி!

ஏற்கனவே அப்பதவியில் இருந்த மக்களவை எம்.பி சசிகலா புஷ்பாவை அப்பதவியிலிருந்து அதிரடியாக விடுவித்திருக்கிறார். கோகுல இந்திராவுக்கு மாற்று பதவியளித்த ஜெயலலிதா சசிகலா புஷ்பாவை காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டு கட்சியின் முக்கிய பதவிகளில் ஒன்றான அப்பதவி நிரப்பப்படாத நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது பலவித யுகங்களுக்கு வழிவிட்டிருக்கிறது.

யாருக்கு ஏற்றம் யாருக்கு இறக்கம் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரலாம். அதற்கு முன் தெரியவேண்டுமானால் நீங்கள் ஜெயலலிதாவாக இருக்கவேண்டும்.