Published:Updated:

2016ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை, 'அம்மாநாடு' என மாற்றி விடுவார்கள்: கருணாநிதி

சென்னை: 2016-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்ற பெயரை அம்மாநாடு என்று மாற்றி விடுவார்கள் என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கேள்வி-பதில் வடிவில் விடுத்துள்ள அறிக்கையில், ''அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களில் பெரும்பாலானவை அறிவிப்போடு நின்று விடும்! ஒரு சில திட்டங்கள் பெரும் விளம்பரத்தோடு ஆரம்பமாகும். அதன் ஆயுள், ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள்தான்! அந்த வரிசையில் 'அம்மா சிமெண்ட்' விநியோகமும் ஆகிவிட்டது போலும்.

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் வீறு கொண்டு அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், மின்வெட்டின் கொடுமை இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. மக்களுக்கு மின்வெட்டு மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இதற்குள் மிகப்பெரிய மின்சாரச் சூறையாடலே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு 94,400 கோடி ரூபாயை எட்டிவிட்டது. வருடம் தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே தமிழக மின் வாரியம் மட்டும்தான்!

தப்பித் தவறி 2016-ம் ஆண்டு ‪அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு என்று இப்போதுள்ள பெயரையும் மாற்றி 'அம்மாநாடு' என்று வைத்து விடுவார்கள்.

சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து அவர்கள் முதுகிலே ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவார்கள். 'ஜெயலலிதா ஸ்டிக்கர்' Made in 'அம்மாநாடு' என்று உலகப் புகழும் பெற்று விடும்'' எனக் கூறியுள்ளார்.