Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

கூடங்குளம்  

ஒரு கொலைக் களம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''ஆழமான நம்பிக்கையோடு சொல்லப்படும் 'இல்லை’, பிறரை மகிழ்விப்பதற்காகவோ அல்லது பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காகவோ சொல்லப்படும் 'ஆமாம்’ என்பதைவிட மேலானது!''

- மகாத்மா காந்தி

மத்திய சுற்றுச்சூழல் மற்றும்வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் சமீபத்திய நாடகம் கூடங்குளத்தில் அரங்கேற்றப்​பட்டது!

'கூடங்குளம் விரிவாக்கத் திட்டமான 3, 4, 5, 6 உலைகள் கடற்கரை ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறுவதால், அனுமதி தர இயலாது!’ என மத்திய அரசின் குழு முடிவு எடுத்தது. எனவே, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 'கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரை​முறைகள் மறுபரிசீலனை செய்யப்படும்’ என அறிவித்தார். வேடிக்கை என்ன என்றால், முதல் இரண்டு உலைகள் பற்றி, அவர் கண்டுகொள்ளவே இல்லை. இந்த இரட்டை வேடப் போக்கும், இரட்டை நாக்குப் பேச்சும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டியது.

கூடங்குளம் திட்டத்தில் உள்ள நான்கு பிரச்னைகளை கடந்த கட்டுரையில் சொன்னேன். ஐந்தாவதாக... கூடங்குளம் அணு மின் நிலையங்களின் நல்ல தண்ணீர் தேவை பற்றிய சர்ச்சை. ஜனவரி 5, 2002-ம் தேதியிட்ட 'தினமலர்’ நாளிதழில் வெளியிடப்பட்ட முழுப் பக்க விளம்பரம், '65 கி.மீ தூரத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படும்’ எனச் சொல்கிறது. கூடங்குளம் அணு மின் திட்ட முன்னாள் இயக்குநர் எஸ்.கே.அகர்வால், 'நியூக்ளியர் இன்ஜினீயரிங் அன்ட் டிஸைன்’ எனும் இதழில் 2006-ம் ஆண்டு வெளியிட்ட கட்டுரையின் 835-வது பக்கத்தில் பேச்சிப்பாறை தண்ணீர் எடுக்கப்படும் என்று குறிப்பிடுகிறார். கூடங்குளம் 3, 4, 5, 6 உலைகளுக்கான 'நீரி’ எனும் அமைப்பின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையில் (பக்கங்கள் 2.35, 2.36) பேச்சிப்பாறை அணைத் தண்ணீர் நாள் ஒன்றுக்கு 19,200 கன மீட்டர் எடுக்கப்படும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது.

அணு ஆட்டம்!

குமரி மாவட்ட விவசாயிகள் போர்க் கொடி தூக்கியதும், 'பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர் எடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை!’ என்று 'தினகரன்’ நாளிதழில் 28.3.2007 அன்று வெளியான முழுப் பக்க விளம்பரம் சொல்லியது. ஆனால், 1.6.2007 அன்று 'தி ஹிந்து’ பத்திரிகையில் வந்த நான்கு பக்க விளம்பரம், பேச்சிப் பாறை பற்றிப் பேசவே இல்லை. குமரி மாவட்டத்தைச் சுற்றி நிலத்தடிக் குழாய்கள் பதிக்கப்படுவது அனைவருக்குமே தெரியும்.

ஆறாவது... கூடங்குளம் அணு மின் நிலையக் கட்டுமானப் பணிகள். 'தினகரன்’ (17.6.2004) நாளிதழில் எஸ்.கே.அகர்வால், ''முதல் உலைகளுக்கான பணிகள் 2007 டிசம்பர் மாதத்தில் முடியும் என்று திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும். அதுபோல் 2-வது உலை அமைக்கும் பணிகள் 2008-ல் முடிப்பதாக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும்!'' என்றார். ஆனால், இன்று வரை இது நடக்கவில்லை.

ஏழாவது... இந்தக் காலதாமதம் காரணமாக எழும் பண விரயம், நஷ்டங்கள், ஊழல்கள்பற்றி சிந்தித்துப் பாருங்கள். அணு மின் நிலையக் கட்டடங்களின் தரம், கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதுமான திருவிளையாடல்கள், உள்ளூர் கான்ட்ராக்டர்களின் கைங்கரியங்கள், ரஷ்யாவில் இருந்து தாறுமாறாகவும், தலைகீழாகவும் வரும் உதிரி பாகங்கள், நிர்வாகக் குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிறைப் புரட்டிப் போடும் தகவல்கள் அனுதினமும் வந்துகொண்டே இருக்கின்றன.  ஒரே ஒரு

அணு ஆட்டம்!

நிகழ்வினைச் சொல்கிறேன். 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வருகை தந்தார். அணு சக்தித் துறை உயர் அதிகாரிகளோடு நின்றுகொண்டு இருந்தபோது, கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் 'பொத்’தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு..?

எட்டாவது... கூடங்குளம் பகுதியில் இதுவரை எழுந்திருக்கும் இடர்களும், பேரிடர்களும் கவனிக்கத்தக்​கவை. 2003 பிப்ரவரி 9-ம் தேதி, இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நில நடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19-ம் தேதி மாலை 6.50 மணிக்கு, கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சு கிராமம், அழகப்பபுரம், மைலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும் கூரைகளிலும், கீறல்களும் விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21-ம் தேதி, கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வியல் கழகத்துக்கும், புவியியல் நிறுவனத்துக்கும் சென்று விசாரித்தேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுமுறையில் இருக்கிறார்கள் என்றும், பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் டெல்லிக்கு அறிக்கை அனுப்பி இருப்பதாகவும் சொன்னார்கள். வேதனையும் விரக்தியுமே மிஞ்சின.

2004 டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சுனாமி, கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுத்தியதாகக் கேள்விப்பட்டேன். மத்திய, மாநில அரசுகள் சுனாமி என்ற வார்த்தையையே நாங்கள் கேள்விப்பட்டது இல்லை என்று சொல்லிக்கொண்டு இருந்த நிலையில், கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம், 'சுனாமிக்கும் சேர்த்தே திட்டமிட்டு இருக்கிறோம்’ என்று கதை அளந்தது.

இந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்கள் கழித்து, 2007 பிப்ரவரி மாதம் தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, 'கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி வசிப்பவர்களுக்கு இலவசக் குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார் (தினகரன் 10.2.2007).  'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்று அவர் சொல்ல, குலை நடுங்க ஆரம்பித்தது மக்களுக்கு!

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால் இந்திய அணு மின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம்ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட் எனும் ரஷ்ய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ரஷ்யா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துகள் நிகழ்ந்தால், நஷ்ட ஈடு கேட்கும் உரிமை வேண்டும் என இந்தியா கேட்க, 'அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணு மின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என ரஷ்யா காலை வாரியது. 2008-ம் ஆண்டு ரகசியமாகக் கையெழுத்து இடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது ஷரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறதே என்று கேட்கிறது ரஷ்யா. விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் டெல்லி திகைத்து நின்றாலும், உருளப்போவது உங்கள் தலையும், என் தலையும், ஊரார் தலையும்தான்.

இந்த ரஷ்ய இழப்பீடு குறித்த குழப்பம் ஒன்பதாவது முக்கியமான அம்சமாக இருக்கும் நிலையில், பத்தாவது ரஷ்ய அணுத் தொழில்நுட்பத்தைப் பார்க்கலாம்.

வி.வி.ஈ.ஆர். 1000 அணு உலைக் கலன் (Reactor Vessel) மிகப் பெரியது. இதன் உள்ளே இருக்கும் மையம் அல்லது உள் (core) எப்போதும், எல்லா நிலையிலும் குளிர்விக்கப்பட வேண்டும். அதில் தடைகள் ஏற்படும்போது, புகுஷிமாவில் நடந்ததுபோன்ற வெடிப்புகள் உள்ளடக்கங்களுக்குள் (containment)நிகழலாம். வி.வி.ஈ.ஆர். 1000 அணு உலைக் கலனின் ஒருமைப்பாடு கேள்விக்குரியது. பாதுகாப்புக்கான தானியங்கி மூடும் அமைப்பு, நம்பகத்தன்மை உடையது அல்ல. நீராவி ஜனனிகள் (Steam generators)  மற்றும் பரந்து விரிந்துகிடக்கும் நீராவிக் குழாய்களில் எழும் பிரச்னைகள் கட்டுப்பாட்டு அமைப்புகளையும், மின் வழங்கலையும், முக்கியமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, இதை நம்புவது ஆபத்து என்பதே பல விஞ்ஞானிகளின் ஒட்டுமொத்தக் கருத்து.

இறுதியாக, உலைகளைக் குளிர்வித்த சூடான கதிர் வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பகத்தி (Desalination)ஆலைகளில் இருந்து வெளி வரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி ஊட்டச் சத்துமிக்க கடல் உணவையும் விஷமாக்கப்போகிறோம். உணவுப் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். மீனவர்களின், விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் பாதிக்கப்படும். விபத்துகளோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும், அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர் வீச்சு நச்சுப் பொருட்களை உண்டு... பருகி... சுவாசித்து... தொட்டு அணுஅணுவாய் சிதைந்துபோவோம். எதிர்கால தமிழ் சமூகம், 'கூடங்குளம் ஒரு கொலைக்களம்’ எனக் குற்றம் சுமத்தும்! 

அணு ஆட்டம்!

எஸ்.லிட்வின்

தனது 18-வது வயதில் வீடு, குடும்பம் தரும் பாதுகாப்பையும் இதங்களையும் துறந்து வட இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றிச் சுழன்று, பெண்கள், குழந்தைகள் மத்தியில் விழிப்பு உணர்வுக் கல்விப் பணி ஆற்றியவர் லிட்வின். 15 வருட சேவைக்குப் பின் அருட்சகோதரியாக மாறி, பெரு நாட்டிலும், திருநெல்வேலி பீடித் தொழிலில் இருக்கும் பெண்கள் மத்தியிலும், உரிமைகளுக்காக, உயர்வுக்காக உழைத்தார். 1994-ம் ஆண்டு துறவு நிலை துறந்து, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவில் இணைந்து பெண் உரிமைகளுக்காகப் பாடுபடுகிறார். புற்று நோயோடு போராடி வென்ற லிட்வின், குமரி மாவட்டத்தின் பட்டி தொட்டி​களில் எல்லாம், கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புக் கூட்டங்களையும், பிரசாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறார்!

- அதிரும்...