Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

இ.சிகாமணி, அத்தனூர்

ராவணன் - ராஜபக்ஷே ஒப்பிடுக? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்

எதிர்த்து நிற்பவன் கடவுளே ஆனாலும்... தனித்து நின்று போராடியவன் ராவணன். ஆனால், அப்பாவி​களைக் கொல்வதற்கு ஐந்து நாட்டு ராணுவங்களை அழைத்தவர் ராஜபக்ஷே!

தன்னை விரும்பாத பெண்ணைக்கூட, தொடாமல் தூக்கியவன் ராவணன். ஆனால், பாலியல் பலாத்காரம் செய்வதற்காகவே படை நடத்துபவர் ராஜபக்ஷே!

எத்தனை படைகள் வந்தபோதும் கலங்காமல் நேருக்கு நேர் எதிர்கொண்டவன் ராவணன். ஆனால், ராஜபக்ஷேவின் வீரத்தைத்தான் லண்டனில் பார்த்​தோமே!

அண்ணன் தவறு செய்கிறான் என்பதை உணர்த்திய தம்பிமார் விபீஷணனும் கும்பகர்ணனும்; ஆனால், அண்ணனின் எல்லாக் கொடூரங்களுக்கும் எண்ணெய் வார்த்தவர்கள் கோத்தபய ராஜபக்ஷேவும் பசில் ராஜபக்ஷேவும்!

ராவணன், சிவபக்தன். தனது கை நரம்புகளால் சாமவேதம் பாடி சிவபெருமானை மகிழ்வித்தவன். ஆனால், அகிம்சை போதித்த புத்தனையே, கண்ணீர் விடவைத்தவர் ராஜபக்ஷே!

சொந்த தேசத்து மக்களை ராவணன் துன்புறுத்தியது இல்லை; ராஜபக்ஷே செய்வது, அதை மட்டுமே!

ராவணனை முழுமையாக அறிய, அ.ச.ஞான​சம்பந்தனின் 'ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்’ படியுங்​கள். ராஜபக்ஷேவை அறிய... ஐ.நா. அறிக்கையே போதும்! 

கே.வெங்கட், விழுப்புரம்-2

ஆந்தையார் என்ன செய்துகொண்டு இருக்கிறார்?

உங்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்! 

எல்.உக்கிரபாண்டியன், மதுரை-2

கழுகார் பதில்கள்

கருணாநிதியிடம் தங்களுக்குப் பிடித்தது?

தமிழ்தான்! 'சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை, என் தம்பி கருணாநிதி, தனது தமிழ் வளத்தால், சொல் திறத்தால், நாடகமாக்கித் தருவது பொருத்தமானதே’ என்று அண்ணாவால் பாராட்டப்பட்ட 'சிலப்பதிகார நாடகக் காப்பியம்’ புத்தகம் வாங்கிப் படிப்பவர் எவரும், கருணாநிதியின் தமிழைக் காதலிக்காமல் இருக்க முடியாது! 

முத்தரசன், சென்னை-11

  எங்கள் பகுதியில் இளைஞர்கள் சிலர் இணைந்து ஓர் அமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம். செய்யலாமா?

நிச்சயமாக! ஆனால், எதற்காக இந்த அமைப்பு என்பதில் தெளிவாக இருங்கள். 'எந்த இனத்தில் இளைஞர்களின் இதயம் எஃகைப்போல உறுதியாக இருக்கிறதோ, அந்த இனத்துக்கு வாள் தேவை இல்லை’ என்பது இக்பாலின் வாக்கு!

 குமரேசன், திண்டிவனம்

##~##

மருத்துவர் ராமதாஸுக்கு அம்பேத்கர் விருதை திருமாவளவன் வழங்கி உள்ளாரே?

சமூக சீர்திருத்தவாதிகளுக்குத்தான் அந்தப் பட்டம் போய்ச் சேரவேண்டும். தருவதற்கும் பெறுவதற்கும், அரசியல்வாதிகள் இங்கே அருகதை ஆனவர்கள் அல்ல!

'யார் அதிகத் துணிச்சல் காட்டுவது? தன்னந்தனியாக நின்று போராடும் சமூக சீர்திருத்தவாதியா? ஆதரவாளர் பெரும்பாலோர் அளிக்கும் கவசத்துடன் போராடும் அரசியல் தேச பக்தரா? சமூக சீர்திருத்தவாதிதான் மாமனிதர் என்பதில் சந்தேகம் இல்லை!’ என்று சொன்னவர் அம்பேத்கர். சட்டசபைப் பதவிகளை யாரும் யாருடனும் சேர்ந்து கைப்பற்றலாம். ஆனால், அம்பேத்கர் சுடரை எல்லோரும் ஏந்திவிட முடியாது! 

மூ.சற்குணம், காங்கேயம்

விடுமுறையில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஜாஃபர் சேட், டி.ஜி.பி. அலுவலகத்துக்குள் சென்று ரகசியக் கூட்டம் நடத்தியதாகச் சொல்கிறார்களே... உண்மையா?

ஜாஃபர் சேட், டி.ஜி.பி. அலுவலகம் சென்றுள்ளார். போலீஸ் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரின் அறைக்குச் சென்று உட்கார்ந்தார். கீழ்மட்ட உளவுத்துறை மனிதர்களை அழைத்துப் பேச ஆரம்பித்தார். இந்தத் தகவல், மேல் அதிகாரிகள் இருவரின் கவனத்துக்கு உடனே போனது. அவர்கள், அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்து, அமைதியான முறையில், 'இது சரியில்லையே’ என்று சொன்னார்களாம். ஜாஃபர் உடனே வெளியே சென்றுவிட்டாராம். போலீஸ் வட்டாரம் உறுதிப்படுத்துவது இந்த அளவில் மட்டும்தான்!

 தங்கப்பாண்டியன், சாத்தூர்

  எங்கள் இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உண்மையில், தன்னை தெய்வமாக நினைப்பவர்களை எம்.ஜி.ஆர். விரும்பவே இல்லை.

'என்னைத் தெய்வமாக்காதீர்கள் என்பதுதான் எனது முதல் வேண்டுகோள். நானும் சாதாரண மனிதன்​தான். என்னிடமும் நிறையக் குறைகள் இருக்கும். என்னை அந்த அளவுக்கு உயர்த்தாதீர்கள்’ என்றவர் எம்.ஜி.ஆர்.!

 அப்துல்லா, காயல்பட்டினம்

தமிழகத்தில் மின்சாரத் தட்டுப்பாடு கழுத்தை நெரிக்கும்போது, இலங்கைக்கு மின்சாரம் தரப்போகிறதாமே இந்தியா?

கனிமொழிக்காக டெல்லி வரை செல்லும் நம் தமிழக அமைச்சர்கள், இதற்காகவும் வாய் திறந்து எதிர்ப்புத் தெரிவித்தால், இந்திய அரசு திட்டத்தை நிறைவேற்றத் தயங்கும். ஆனால், ஒருவர் கடிதம் எழுதுவார். இன்னொருவர் அறிக்கைவிடுவார். இதில், இருவருக்குமே அக்கறை இல்லை என்பதுதான் நிஜம்.

 வெள்ளத்துரை, தாழையூத்து

கிரிக்கெட் வீரர் டோனி மதுபான விளம்பரங்களில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதே பா.ம.க.?

முதலில் மதுபானக் கடைகள் நடத்தும் கூட்டாளி​யைக் கண்டிக்கச் சொல்லுங்கள், பிறகு பொழுதுபோக்காளரை எதிர்க்கலாம்!

 பாவை, தஞ்சாவூர்

  கவிஞர் கனிமொழியை நினைத்தால்?

அவர் எழுதிய கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது!

என்ன சொல்லி என்ன

என்ன எழுதி என்ன

நான் சொல்ல வருவதைத் தவிர

எல்லாம் புரிகிறது உனக்கு.

_ இது ஏதோ சி.பி.ஐ-யைப் பார்த்து கனிமொழி பாடுவதைப் போலவே தெரிகிறது!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி

  'எனது  சுயசரிதை வெளியிடப்பட்டால் என் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படும்’ என்று ஜெயலலிதா கூறுவது புரியவில்லையே?

நற்பெயர் கெடும்  அளவுக்கு சுயசரிதை இருக்கிறது என்பது இதன் பொருள்!