Published:Updated:

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

இசையுலகில் ஒரு கலகக்காரர்!
இசையுலகில் ஒரு கலகக்காரர்!

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

ல்கத்தாவில் நடந்த அந்த பெரும் கச்சேரிக்கு இசை ஆர்வலர்கள் திரண்டுவந்திருந்தனர் அன்று. காரணம் அவர்கள் விரும்பத்துக்குரிய கலைஞரின் பக்கவாத்திய இசை அன்று அரங்கேறியதே. கஞ்சிரா ஒலி மேடையில் ஒலிக்கத்துவங்கி முடியும் வரை பார்வையாளர்கள் வரிசையில் நிசப்தம். கச்சேரி முடிந்த மறுநிமிடம் அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது அங்கு.

பார்வையாளர்களை தன் கச்சேரியால் கட்டிப்போட்ட அந்த கலைஞனுக்கு... மன்னிக்கவும் சிறுவனுக்கு வயது 7.

7 வயதில் இசையுலகில் பிரபலம் அடைந்த  மழலைமேதை வேறு யாருமல்ல, பின்னாளில் வீணையின் மேல் காதல் கொண்டு 'வீணை என்றால் பாலசந்தர்', 'பாலசந்தர் என்றால் வீணை' என பெரும்புகழ்பெற்ற 'வீணை' எஸ்.பாலசந்தர். அவரது பிறந்தநாள் இன்று.

1927 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் சுந்தரம் ஐயர்- செல்லம்மாள் தம்பதிக்கு 5 வது குழந்தையாக பிறந்தவர் பாலசந்தர். வழக்கறிஞரான சுந்தரத்திற்கு தொழில்மீதான நாட்டத்தை விட இசையின் மீதும் இசைக் கலைஞர்கள் மீதும் ஆர்வம் அதிகம். இத்தனைக்கும் இசையில் ஞானம் பெற்றவரல்ல அவர். மாலை நேரமானால் மயிலாப்பூர் வீட்டில் ஏதாவது ராக ஆலாபனை இசைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அல்லது இசையை குறித்த தர்க்கம் ஓடிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் புகழ்பெற்ற கலைஞர்களை அப்போது அங்கு காணமுடியும்.

செல்லம்மாளுக்கு இது பிடிக்கவில்லையென்றாலும் கணவரின் ஆசைக்கு அவர் குறுக்கே நின்றதில்லை.  ஆனால் அதுதான் சிறுவன் பாலசந்தர் இசையுலகில் நுழைய காரணமானது.

எப்போதும் இசைக்கலைஞர்கள் தன் வீட்டில் புழங்கியதால் இயல்பாகவே சிறுவன் பாலசந்தருக்கு இசைக்கருவிகள் தொடர்பு உருவாகி எந்நேரமும் ஏதாவது ஒன்றை இசைக்கும் முயற்சியில் இருப்பான். இதனால் குறுகிய காலத்தில் பாலசந்தருக்கு சிதார், கஞ்சிரா, ஹார்மோனியம் ஆகியவை பரிச்சயம் ஆனது. கிட்டதட்ட தன் 6 வயதில் யாருடைய உதவியுமின்றி அத்தனை கருவிகளையும் சர்வசாதாரணமாக கையாள ஆரம்பித்தான்.

1932 ஆம் ஆண்டு பிரபல வங்க இயக்குனர் சாந்தாராம் சிறிய பட்ஜெட் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டார். நண்பர் மூலம் சுந்தரத்திற்கு இது தெரியவர அது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுந்தரத்தின் மூத்த மகன் ராஜம் மற்றும் அவரது மகள்கள் அதில் நடிப்பதாக முடிவானது. சீதா கல்யாணம் என்ற அந்த படத்தில் சுந்தரமும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். மொத்த குடும்பமே படத்தில் நடித்ததால் படப்பிடிப்பு தளத்திற்கு சிறுவன் பாலசந்தரும் செல்லவேண்டியதானது.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

ஒருநாள் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஓங்கி குரல் எடுத்து அழ ஆரம்பித்தான். அழுகைக்கு காரணம் கேட்டபோது தானும் நடிக்கவேண்டும் என்றான். சிரித்தபடி உனக்கு என்னதெரியும் என்றார் சாந்தாராம். தெரிந்ததையெல்லாம் சொன்னான் சிறுவன் பாலசந்தர். சரி ராவணனின் சபையில் கஞ்சிரா வாசி என்று பத்தோடு ஒன்றாக சிறுவன் அமரவைக்கப்பட்டான். ஆனால் ஆச்சரியம். படம் வெளியானது.

படத்தில் மழலை மாறாத சிறுவன் பாலசந்தர் நளினமாக தேர்ந்த கலைஞனைப்போல் கஞ்சிராவை வாசித்ததற்காகவே திரும்ப திரும்ப வந்தனர் ரசிகர்கள். பத்திரிக்கைகள் விமர்சத்தில் சிறுவனை உச்சிமுகர்ந்தது. படத்தின் முடிவில் தபேலா செட் ஒன்றை தந்து வாழ்த்தினார் சாந்தாராம்.

பாலசந்தர் என்ற இசைக்கலைஞன் பிறந்தான். சீதா கல்யாணத்திற்குப்பின் பாலசந்தருக்கு நடிப்பில் ஆர்வமில்லை. அதற்கு வாய்ப்பும் அமையவில்லை. தொடர்ந்து கஞ்சிரா கச்சேரி நிகழ்த்த ஆரம்பித்தான். இந்தியாவின் பல இடங்களிலும் சிறுவன் பாலசந்தர் கச்சேரி நடந்தது.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

இடையிடையே சிறுவன் பாலசந்தருக்கு பட வாய்ப்புகளும் வந்தன. பாலயோகினி, ரிஷ்ய சிருங்கர், ராதாகல்யாணம், பக்தநாரதர், ஆராய்ச்சி மணி போன்றவை அக்காலகட்டத்தில் அவர் நடித்த படங்கள். 1942 ல் பாலசந்தருக்கு ஆல் இந்தியா ரோடியோவில் பணி கிடைத்தது.  அந்த காலகட்டத்தில்தான் இசைக் கருவிகளில் தான் இதுவரை கையாண்டிருக்காத பல கருவிகளை பாலசந்தர் கற்றார்.

வீணை என்றால் பாலசந்தர் பாலசந்தர் என்றால் வீணை என்று பிற்காலத்தில் கர்வப்பட்ட 'வீணை பாலசந்தர்' பிறந்த இடமும் அதுதான். தான் கற்ற இசைக்கருவிகளிலேயே பாலசந்தர் விரும்பி நேசித்த வாத்தியம் வீணைதான். அக்காலத்தில் உறங்கும் நேரம் தவிர மற்றநேரங்களில் வீணையுடன் இருப்பார் என்பார்கள். வீணையை அவர் கற்க யாரையும் அவர் குருவாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

வீணையில் அவர் யாருடைய பாணியையும் பின்பற்றவில்லை.  கொஞ்சகாலம் பக்கவாத்தியமாக புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர்களின் கச்சேரிகளில் பங்கேற்ற பாலசந்தர் தனது மேதைமை பக்கவாத்தியத்தில் அமுக்கப்படுவதாக உணர்ந்தார். விளைவு இனி பக்கவாத்தியமாக வாசிப்பதில்லை என முடிவெடுத்தார்.  யாருடைய பாணியும் இன்றி தனியாக வீணை கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார். வீணையில் அவர் மேற்கொண்ட பரிட்சார்த்த முயற்சிகள் அவரை அதற்கு முழுத்தகுதியுடையதாக்கியது.

கச்சேரிகளின் நடுவே அவருக்கு சினிமா வாய்ப்புகளும் வரத்துவங்கின. அரைகுறை மனதுடன் சினிமா வாய்ப்புகளை அவர் ஒப்புக்கொண்டாலும் அதிலும் அவர் தனி முத்திரை பதித்தார். 1948 ல் இது நிஜமா மூலம் மீண்டும் அவரது சினிமா பிரவேசம் நிகழ்ந்தது. இந்தப்படத்தில் இசையமைத்ததுடன் நடிக்கவும் செய்தார். படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார்.

யாரிடமும் நேரிடையாக பயிற்சி பெற்றிராத பாலசந்தர் துணிந்து இயக்குனர் பணியை ஏற்றார். அவரது இயக்கத்தில் முதல் படமாக 'என் கணவர்' வெளியானது. 1951 ல் தேவகி படம். படத்தின் வெற்றிகளால் பாலசந்தர் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை ரசிகர்கள் அவருக்கு வழங்கினர். எஸ்.பி என சிலாகிக்கப்பட்டார் ரசிகர்களால். 1951 ல் ராஜாம்பாள் படத்தில் வில்லன் வேடத்தில் அற்புதமாக நடித்தார் பாலசந்தர். 1951 ல் கைதி திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளிவந்தது. அடுத்த ஆண்டு ஜிபிடரின் 'ராணி'. இதில் பாலசந்தருக்கு கதாநாயகன் வேடம். ஜோடி பானுமதி.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

தான் பங்கேற்ற எந்த துறையிலும் தனக்கென ஒரு பாணியை கையாண்ட பாலசந்தர், திரையுலகை தனக்கான தனித்துவமாக கருதாததால் அதில் எந்த பொறுப்பையும் ஏற்று அதில் வெற்றி கண்டார். அதனால்தான் ஜெமினி கணேசன்- வைஜெயந்திமாலா இணைந்து நடித்து 1954 ல் ஏவிஎம் தயாரிப்பில் வெளியான பெண் படத்தில் நகைச்சுவை வேடம் ஏற்க முடிந்தது.

அதே ஆண்டு பாலசந்தரின் மாஸ்டர் பீஸ் என்று இன்றுவரை சொல்லப்படுகிற 'அந்த நாள்' வெளிவந்தது. ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் பாலசந்தர் மேற்கொண்ட பரிக்ஷார்த்த முயற்சி வெற்றிகரமான ஒரு தயாரிப்பாளருக்கு தற்கொலை முயற்சிதான். ஆம் தமிழ்த்திரையுலகில் பாடல்கள் இல்லாமல் வெளியான முதல் திரைப்படம் 'அந்தநாள்'. படத்தின் இயக்குனர் பாலசந்தர்.  தம் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கும் ஏ.வி.மெய்யப்பட்ட செட்டியாருக்கு பாடல்கள் வேண்டாம் என்று இயக்குனர் சொல்லியிருந்தால் என்னகோபம் வந்திருக்கவேண்டும். ஆனால் அதிசயம் நடந்தது. பாலசந்தரின் எண்ணத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஏ.வி.எம். காரணம் பாலசந்தரின் திறமை மீது அவர் கொண்ட அபார நம்பிக்கை.  

தமிழ்த்திரையுலகில் இன்றுவரை வெளியான சாதனைத் திரைப்படங்களின் வரிசையில் முக்கிய இடம்பெற்ற படம். 

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

தன் திறமைக்கு நாடு உரிய அங்கீகாரம் தராத ஆத்திரத்தில் ரேடியோ இன்ஜினியரான ராஜன் (சிவாஜி) எதிரி சுட்டுக் கொல்கிறாள். இந்த கொலையை இரண்டு சி.ஐ.டி இன்ஸ்பெக்டர்கள், விசாரிக்கும் பாணியில் கதை நகரும். சிஐடி இன்ஸ்பெக்டர்களின் விசாரணைக்குள்ளாகும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்தம் பாணியில் கொலையைப்பற்றிய தகவலை அளிப்பது அன்றைய தமிழ்த்துறைக்கு புதிது.

விசாரிக்கப் படும் ஒவ்வொருவர் மூலமாகவும், கதை மெல்ல மெல்ல அவிழும். கதை, முன்னும் பின்னுமாக நகர்ந்தாலும், குழப்பமே ஏற்படாமல் நகர்த்திச் செல்வார் பாலசந்தர். படம் துவங்கியதுமே கதாநாயகன் சாகடிக்கப்படுவது என்பது பாலசந்தரின் துணிச்சலுக்கு ஓர் உதாரணம்.

அடுத்தடுத்து சில படங்களில் தலைகாட்டினார் பாலசந்தர். இருப்பினும் அந்நாளில் திரைப்படத்துறையில் ஏற்பட்டிருந்த மாற்றத்தால் கலைஞர்களுக்கு சுதந்திரமான சிந்தனைக்கு சில தடை இருந்தது. தனித்துவம் மிக்க கலைஞரான பாலசந்தருக்கு இது எரிச்சலைத் தந்தது. இதனால் பல படங்களை இவர் இழக்கும் நிலை வந்தது. விளைவு, எஸ்.பி கிரியேஷன்ஸ் என்ற அவரது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் உருவானது. இந்த பேனரில் அவனா இவன் வெளியானது. சிறந்த த்ரில்லர் படம் அது. அடுத்தது பொம்மை. பொம்மை படம் தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று.

பொம்மை திரைப்படம் வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. வியாபாரத்தின் நான்கு பங்குதாரர்களில், மூன்று பேர், முதலாமவனைக் கொலை செய்ய சதி செய்கின்றனர். அதற்காக, ஒரு பொம்மைக்குள் வெடி குண்டு வைத்து அவன் பயணிக்கும் விமானத்தில் வைக்க திட்டமிடுகின்றனர். அந்த பொம்மை, பலரிடம் கை மாறிச் சென்று, இறுதியில் வில்லன்களே மாட்டிக் கொள்ளுவதுதான் கதை.

இந்த படத்தில் ஒரு புதுமையை செய்தார் பாலசந்தர். படத்தின் அத்தனை டெக்னீஷியன்களையும் திரையில் தோன்றி ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.  படத்தின் உச்சகட்ட காட்சிக்கு முன்பு திரையில் ஷார்ட்ஸ் உடன் தோன்றும் நாகரீக பாலசந்தர் ஒவ்வொருகலைஞரையும் பெயர் சொல்லி அறிமுகம் செய்வார். இளம்வயது சுசீலா,ஜானகி, ஜேசுதாஸ் என பின்னாளில் புகழடைந்த இளம் கலைஞர்களை பார்க்கலாம்.

ஒரு த்ரில்லர்  படத்தின் பரபரப்பான காட்சிகளுக்கிடையே ரசிகர்களிடையே சாவகாசமாக பேசும் இந்த துணிச்சலுக்கு பெயர்தான் பாலசந்தர். நடு இரவில் திரைப்படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாலசந்தரின் பாணி என்ற வாசகம் திரையுலகில் பயன்படுத்தப்பட்டது.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

வெற்றிகரமான இயக்குனராக இருந்த ஒரு நாள் பாலசந்தருக்கு ஒருநாள் தான் சினிமாவில் தொடர்ந்து இயங்கவேண்டுமா என்ற சிந்தனை எழுந்தது. சினிமா, வீணை என இரட்டை குதிரை சவாரியில் இரண்டிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத வெற்றிகளை அள்ளிக்குவித்துக்கொண்டிருந்தார் அப்போது அவர். ஆனால் அவரின் முதல் காதல் இசையின்மீதுதான்.  நடு இரவில் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தான் திரையுலகிலிருந்து விலகப்போவதாக அறிவித்தார். 'வீணைதான் இனி என் வாழ்க்கை' என்றும் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ந்தது.

விலகலுக்கான காரணங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.  60 களின் மத்தியில் ஒரே சிந்தனையாக சினிமாவுக்கு முழக்கு போட்ட பாலசந்தர் அதன்பின் மருந்துக்கும் அதை பற்றி சிந்திக்கவில்லை.

அவரது முடிவில் நண்பர்களுக்கு மட்டும் ஆச்சர்யம் இல்லை. காரணம் சினிமாவை தன்னை நிறுபிக்கும் களமாக அவர் என்றும் கருதவில்லை. சினிமாவிலும் தான் இருந்தேன் என்பது மட்டும்தான் எதிர்காலத்தின் தன்னைப்பற்றிய குறிப்பாக இருக்கவேண்டும் என கருதினார். அதன்பின் அவரது இறப்புவரை வீணைதான் அவரது வாழ்க்கை என்றானது.

70 களில் பரபரப்பான வீணை வித்வானாக பல நாடுகளை சுற்றிவந்தார் பாலசந்தர். வீணை வித்வானாக அல்லாமல் வீணையின் காதலனாக அவர் இருந்தார். அதன் உச்சமாக தன் கச்சேரிகளுக்கு பக்க வாத்தியமாக தம்புராவை தவிர வேறு எதையும் அனுமதிக்கவில்லை. கச்சேரிகளின்போது குறுக்கீடு எதுவும் இருந்தால் எரிச்சலடைவார். விமர்சனம் எழுந்தாலும் ஆத்திரப்படுவார்.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

தன் திறமையை வேறுயாரும் அளவிட அனுமதிக்காத மனிதர் அவர். இதனாலேயே அவருக்கும் பிரபல இசை விமர்சகர் சுப்புடுவுக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தமாக இருந்தது அந்நாளில். தம் கச்சேரியை விமர்சித்த ஒரு இதழுக்கு அவர் எழுதிய காரசார கடிதம் அந்நாளில் பரபரப்பு ஏற்படுத்திய ஒன்று.

கச்சேரிகளுக்கு செல்லும்போது வீணையை யாரிடமும் தரமாட்டார் பாலசந்தர். பயணத்தின்போது அது தன் பார்வையிலே இருக்கவேண்டும். விமானத்தில் பயணிக்கும்போது வீணையை பாதுகாப்பாக வைக்க சிறப்பு அனுமதி பெற்றிருந்தார் அவர். வீணையில் அவர் உருவாக்கிய பரிக்ஷார்த்த முயற்சிகளுக்கு இசை ரசிகர்கள் தங்கள் பாராட்டுக்களை அள்ளிக்கொடுத்தனர். தன் விரல்களால் வீணையில் அவர் நிகழ்த்தும் சாகசங்களால் வியப்பின் உச்சிக்கு சென்றனர் ரசிகர்கள். அவரின் 45 ராக தொடர் கச்சேரிக்கு அலைபோல திரண்டுவருவர் ரசிகர்கள். அவர் தன்னை நிறுபித்துக்கொள்ள முயற்சிகளில் இது ஒன்று.

இசைக்கலைஞர் என்றாலும் வீணை பாலசந்தரின் தோற்றம் கொஞ்சமும் அப்படியிருக்காது. மேலைநாட்டு பாணியில் உடைகளும் அதற்கான மேனரிஸங்களுடன் அவர் இருப்பார்.   செய்யும் வேலையில் நேர்த்தி, யாருக்கும் வளைந்துகொடுக்காத தன்மை, எதிலும் சமரசம் செய்துகொள்ளாத உறுதி, தவறுகளை சாதாரணமாக கடந்துசென்றுவிடாத சுபாவம் இதனுடன் அசாத்திய திறமை இவற்றினால் பாலசந்தர் தம் இசைவாழ்வில் பல சங்கடங்களை சந்தித்தார். 

இசையுலகில் நிகழும் ஒழங்கீனங்களை ஒரு மூத்த கலைஞராக ஆதங்கத்துடன் எதிர்ப்பார். தவறுகளை சர்வசாதாரணமாக கடந்துசென்றுவிடாத அவரது சுபாவம் பின்னாளில் அவரது உடல்நலிவிற்கு காரணமானது. கலகக்காரன் என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத்தந்தது.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

தனக்கான உரிய அங்கீகாரம் மறுக்கப்படும்போதெல்லாம் சினந்தெழுவது பாலசந்தரின் குணம். 'வலிந்து பாராட்டுக்களை பெறுகிறார்' , 'அங்கீகாரத்திற்காக அலைகிறார் பாலசந்தர்' என்று இதை இட்டுக்கட்டிப் பேசினர் அவரைப்பிடிக்காதவர்கள்.

தன் மனதில் தவறென்று படுவதை துணிச்லுடன் எதிர்த்த பாலசந்தரின் வாழ்வில் பாலமுரளிகிருஷ்ணா வுடனான யுத்தம் இசையுலகில் பிரசித்தம். அந்த ஆண்டு (1978)மியுசிக் அகாடமி வெளியிட்ட ஆண்டுமலர் அந்த பரபரப்பிற்கு வித்திட்டது. அகாடமியின் அந்த வருடத்திற்கான  சங்கீத கலாநிதி விருதுபெற்ற பாலமுரளி கிருஷ்ணா குறித்த கட்டுரை ஒன்று அதில் வெளியாகியிருந்தது. அதில் சில குறிப்பிட்ட ராகங்களை அவர் கண்டுபிடித்ததாக எழுதப்பட்டிருந்தது.

கொதித்தார் பாலசந்தர். காரணம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ராகங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை. இதுகுறித்து மியுசிக் அகாடமிக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதிய பாலசந்தர் அதற்கு ஆதாரங்களையும் இணைத்திருந்தார்.

இசையுலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெளிப்படையாக அவருக்கு ஆதரவு கொடுத்து பாலமுரளி யின் நட்பை இழக்க விரும்பாத பலர் 'ஏன் இவருக்கு இந்த வேலை என அறிவுரைகளை மட்டுமே பாலசந்தருக்கு வழங்கினர். ஆனால் கொஞ்சமும் பின்வாங்காத பாலசந்தர் ஒரு கை பார்த்துவிடுவதென விடாப்பிடியாக நின்றார். அந்த நாளில் பத்திரிக்கைகளின் பரபரப்புக்கு தீனி போடுபவராக இருந்தார். பாலசந்தருக்கு ஆதரவு தந்தவர்கள் வெளிப்படையாக அவரை ஆதரிக்க தயங்கினர். அப்போது வளர்ந்துவந்த கலைஞரான பாலமுரளிகிருஷ்ணாவிற்கு சில மூத்த கலைஞர்களின் ஆதரவு இருந்தது. சொற்போர் பத்திரிக்கைகள் வாயிலாக வெளிப்படையான யுத்தமானது.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

பாலசந்தர் இதுகுறித்து நிபுணத்துவம் பெற்ற குழுவினரால் விசாரணை செய்யப்படவேண்டும் என்றார். பல மாதங்கள் நீடித்த இந்தபோர் 'ஒரு ராகத்தை பிரபலப்படுத்துவது என்பது அந்த ராகத்தை படைத்ததாக உரிமை கொண்டாடமுடியாது' என்ற மியுசிக் அகாடமி நியமித்த குழுவின் அறிக்கையால் ஒருவாறு முடிவுக்கு வந்தது. பாலசந்தர் அடக்கத்துடன் இந்த வெற்றியை ஏற்றுக்கொண்டார்.

தன்னை ஆளாக்கிய இசைத்தாய்க்கு தான் செய்யும் கைம்மாறு என்று தன் புகழைப்பற்றியும் கவலைகொள்ளாமல் பாலசந்தர் நடத்திய இந்த போரால் பாலசந்தருக்கு இசையுலகில் அவப்பெயரே மிஞ்சியது. இதழுலகம் அவரை கலகக்காரராக சுட்டிக்காட்டியது. 

பாலகிருஷ்ணாவுடனான யுத்தம் முடிந்த அடுத்த 2 வருடங்களில் பாலசந்தர் வேறொரு போருக்கு தயாராகவேண்டியிருந்தது. இந்த முறை யுத்த களத்தில் அவருக்கு எதிராக அவர் நிறுத்திக்கொண்டது புகழ்பெற்ற சமஸ்தானத்தின் பேரரசர். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த சுவாதி திருநாள் மிக சொற்பமான கீர்த்தனைகளை மட்டுமே படைத்தவர். ஆனால் மும்மூர்த்திகளுக்கு இணையாக புகழப்பட்டார். தகுதிக்கு மீறிய புகழை திட்டமிட்டு அவர் மீது ஏற்றினர் பிரபல கலைஞர்கள்.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அவருக்குப்பின் வந்தவர்கள் திட்டமிட்டு பல ராகங்களை சுவாதி திருநாள் இயற்றியதாக ஆவணங்களை உருவாக்கினர். தன் கண்ணெதிரே நிகழும் இந்த செயலை பாலசந்தரால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. திட்டமிட்ட இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதாரங்களை திரட்டி நீதிமன்றப் படிகளில் ஏறினார்.

இந்த காலகட்டத்தில் வழக்கு காரணங்களுக்காக கச்சேரிகளை குறைத்துக்கொண்ட பாலசந்தர் ஓய்வு ஒழிச்சலின்றி ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டார். இந்த வழக்கு விவகாரங்களை அவரது நண்பர்கள் உறவினர் வட்டாரங்கள் ரசிக்கவில்லை. ஆனாலும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார் பாலசந்தர். போர்க்களத்தில் தனியொருவனாக நின்ற பாலசந்தருக்கு வீணை மட்டுமே சற்று ஆறுதல்.

இசையுலகில் ஒரு கலகக்காரர்!

இசைப்பணிக்கான நேரத்தை குறைத்துக்கொண்டு வழக்குக்காகவே நேரம் செலவிட்டார். அது அவரது உடல்நிலையை பாதித்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை திரட்டுவதற்காக 1990- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ந்தேதி பிலாய் சென்றார். தம் இசைக்கலைஞரான தம் தன் நண்பர் வீட்டில் தங்கிய அந்த இசைமேதை அன்றிரவு துாக்கத்திலேயெ மரணத்தை தழுவினார்.

வாழ்நாள் முழுவதும் சக மனிதர்களிடம் நேர்மை நேர்த்தி அன்பை எதிர்பார்த்த போர்க்குணம் கொண்ட ஒரு கலைஞன் போராட்ட களத்திலேயே தன் பயணத்தை முடித்துக்கொண்டார். இசைக்கு அவர் செய்த தொண்டு அவரது ஈகோ, மற்றும் போராட்ட குணத்தினால் மறுக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டது.

காலம் முழுவதும் இசையை நேசித்த சகமனிதர்கள் புரிந்துகொள்ளாத அவரது  குணத்தை நிச்சயம் அவர் மீட்டிய வீணை புரிந்துகொண்டு அவரது மறைவிற்கு கண்ணீர் சொறிந்திருக்கும். தன் தலைவனுக்காக அந்த வீணை மீட்டிய முகாரி ராகம் பாலசந்தரின் காதுகளுக்கு மட்டுமே கேட்டிருக்கும்.

- எஸ்.கிருபாகரன்

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு