Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 7: >>> 03.11.93

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 7: >>> 03.11.93

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

டந்த 26-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு, சென்னைக் கடற்கரையில்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளஅண்ணா சமாதியில் தி.மு.க-வின் எட்டு மாவட்டச் செயலாளர்களுடன் மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டுப் புறப்பட்டார் வை.கோ​பால்​சாமி! 

தி.மு.க. தலைமைக்கு முழு வீச்சாக ஒரு பதிலடி தர, வை.கோ. தேர்ந்தெடுத்த இடம் - குடவாசல்!

வை.கோ-வின் தீவிர ஆதரவாளரான இடிமழை உதயன் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வில் குடவாசலுக்கு ஒரு தனி முக்கியத்துவம்!

8.9.93 அன்று குடவாசலில் நடத்தவிருந்த பொதுக் கூட்டம், கட்சியில் ஏற்பட்ட திடீர்க் குழப்பத்தால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வை.கோ. பழிவாங்கப்படுவதைக் கண்டித்து, தண்டபாணி, இடிமழை உதயன் ஆகிய தொண்டர்கள் தீக்குளித்தார்கள். அதைத் தொடர்ந்துதான் ரத்தான கூட்டம் முன்னிலும் ஆவேசமாக மீண்டும் நடந்தது!

அஷ்ட திக்குப் பாலகர்களாய் எட்டு மாவட்டச் செயலாளர்கள் க்ரீன் சிக்னல் காட்ட​வே, குடவாசல் பொதுக்கூட்ட மேடை போராட்டக் களமாகியது!

திருச்சி செல்வராஜ், நெல்லை லட்சு​மணன், குமரி ரத்தினராஜ், மதுரை பொன்.முத்து, தென்ஆற்காடு செஞ்சி ராமச்சந்திரன், பெரியார் மாவட்ட கணேசமூர்த்தி, கீழத் தஞ்சை மீனாட்சி சுந்தரம், கோவை கண்ணப்பன் என எட்டு மாவட்டச் செயலாளர்களும்... எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் சந்திரசேகரன், திருச்சி மலர் மன்னன், புதுவை முன்னாள் அமைச்சர் சிவகுமார் எனப் பிரமுகர்களும் ஏறி நிற்க, மேடை களை கட்டியது!

''கழகத்தின் போர் வாள்... வருங்காலத் தமிழக முதல்வர் வை.கோ.!'' என்று ஆரவாரக் கோஷங்களுக்கு நடுவே,  மேடை ஏறினார் வை.கோபால்சாமி.

மதுரை மாவட்டம் சார்பில் பேச வந்த பொன். முத்துராமலிங்கம், மைக் முன்பாக வந்தபோது தொண்டர்கள் மத்தியில் ஒரே பரபரப்பு...

''வாலிபப் பட்டாளத்தின் தளபதி வை.கோ., இனி எனது வழிகாட்டி. மதுரையில் இதற்கு முன்னுரை எழுதப்பட்டுவிட்டது. குடவாசலில் இன்னொரு அத்தியாயம். 'சதியை முறியடித்துக் கூட்டம் நடத்தியே தீருவேன்’ என்று முழங்கிய மீனாட்சி சுந்தரத்துக்குத் தலை வணங்குகிறேன். தி.மு.க-வில் வை.கோ. எனும் வானம்பாடியின் சிறகுகள் வெட்டப்​பட்டன. அந்த லட்சிய வானம்​பாடியைத் தமிழகத்தில் சுதந்திரமாகச் சுற்றி வர அனுமதியுங்கள்.

பழசு இன்றும் புதுசு

இப்போது தி.மு.க. தலைமை, எரிமலையைச் சந்தித்திருக்கிறது. மகத்​தான சக்தியான வை.கோ-வை அழிக்கத் தீட்டப்பட்ட திட்டம், பொடிப் பொடியாக்​கப்பட்டு விட்டது. ஊர்ஜிதம் செய்யாத ஒரு செய்தியை, பொதுக் குழுவைக் கூட்டாமல், பொதுச் செயலாளர் ஊரில் இல்லாத சமயத்தில், (இந்த இடத்தில் நிறுத்தி, 'இருந்தால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது?’ என்று பொன்.முத்து சொன்னதும் கூட்டத்தில் சிரிப்பலை.), மத்திய அரசு தந்த ஃபோர்ஜரி அறிக்கையைப் பத்திரிகைகளுக்குத் தந்துள்ளார் கலைஞர். எத்தனையோ முறை கலைஞரின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிய கோபால்சாமி, இன்று கொலைகாரப் பட்டம் சுமத்தப்பட்டு இருக்கிறார். நேரடிப் பேச்சுவார்த்தை என்பது, புண்ணுக்குப் புனுகு தடவுகிற மாதிரிதான். எங்களுக்குத் தேவை அறுவை சிகிச்சை. அதற்கு, பொதுக் குழுவைத்தான் கூட்ட வேண்டும்.

வை.கோ. தனி மனிதர் அல்ல! அவர் ஒரு இயக்கம். அவர் ஒரு நிறுவனம். அவர் கேட்கிற கோரிக்கையை நிராகரிக்கச் சட்டம் தேவைப்படுகிறது. தி.மு.க-வில் கட்டுப்பாடு மிகுந்த தொண்டர்களாக இருந்தோம். கட்டுப்பாட்டை மீறியது தலைமைக் கழகம்தான். வை.கோ. தலைமையில் இது ஒரு போராட்டம்... கலாசாரப் புரட்சி!'' என்று ஆவேசமாகப் பேசி முடித்தார் பொன்.முத்துராமலிங்கம்.

தொடர்ந்து, கோவை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்ச​ருமான கண்ணப்பன், கோவை கொங்குத் தமிழில் பேசப் பேச... கூட்டம் கூடவே சேர்ந்து ஆரவாரம் செய்தது!

''சின்ன வயசில் இருந்து நான் பல பதவிகளை வகிச்சிருக்கேன். இப்போ இருக்கிற மாவட்டச் செயலாளர் பதவி, நான் கோவைக்குப் போய்ச் சேருவதற்குள் இருக்கிறதோ... இல்லையோ?

நாற்பது வருஷத்துக்கும் மேல் பண்ணையாட்களைப்போல, கை கட்டி உழைத்தோம். அதற்குப் பரிசாக, ஏதோ விடுதலைப் புலிகளைப் பார்ப்​பதைப்போல எங்களைப் பார்த்த​£ர்கள். இரக்கம் இன்றி அநீதி இழைக்கப்​படுகிறது!'' - என கண்ணப்பன் பேசும்போதே,  மே​டையில் விசும்பல் ஒலி. அனைவரது கவனமும் திரும்ப, உணர்ச்சி மேலீட்டில் வை.கோ. தன் முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருந்தார்! பதறியபடி மேடையில் இருந்தவர்கள் சமாதானப்​படுத்த... தொண்டர்கள் மத்தியில் இருந்தும் சமாதானக் குரல்கள்!

கண்ணப்பன் தன் பேச்சைத் தொடர்ந்தார்... ''கோயம்புத்தூரில் மாநாடு நடந்துட்டு இருக்கு, மதியம் - பசி நேரம்... எல்லாரும் சாப்பிடப் போயிட்டாங்க தலைவர் உட்பட! ஆனா, சாப்பாட்டு நேரத்துல வை.கோபால்சாமியைப் பேசச் சொல்லிவிட்டார்கள். மணிக்கணக்காப் பேசினார் வை.கோ.! சாப்பிடப் போன கும்பல்கூடக் கையை உதறிக்கிட்டு வந்து பேச்சைக் கேட்க ஆரம்பிச்சது. பிறகு, கோவை சூரியா ஹோட்டலுக்குக் கலைஞர் வரச் சொன்னதா முரசொலிமாறன் என்னை அழைத்துப்போனார்.

அங்கு ஒரு சோபாவில் எனக்கு இடது புறம் கலைஞர், வலது புறம் மாறன்! 'கோபால்சாமி ரொம்பப் பயங்கரமான காரியத்தைக் கடந்த காலத்துல செஞ்சதால, '91-ல் தி.மு.க. ஆட்சியை, சந்திரசேகர் கலைச்சுட்டார்’னு கலைஞர் சொன்னார். நான் திகைச்சு நின்னுட்டேன்.

இந்த விஷயத்தை, கோவை மாநாடு முடிந்ததும் வை.கோ-விடம் கேட்டேன். கலைஞர் உத்தரவின் பேரில்தான் இலங்கைக்கு ஒரு தகவலை அனுப்பியதாகச் சொன்னார். தமிழ்நாட்டுல வை.கோ-வுக்குத் துண்டு, மாலை போட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கட்சி நீக்கம் செய்யப்பட்டார்கள். எனக்குக் கட்சிப் பிரச்னை எதுவானாலும் கவலை இல்லை. நான், வை.கோ. பக்கம் நிற்கிறேன். அவரிடம் நீதி, நேர்மை, நியாயம் இருப்பதால், துணை நிற்கிறேன்!'' என்று தனது உணர்ச்சி உரையை முடித்தார் கண்ணப்பன்.

எல்.கணேசன் மைக் முன்பு வந்து நின்றபோது இரவு மணி, 1.20...

''இதுவரை கலைஞரின் போர்வாள் வை.கோ.! இன்று இரவு முதல் இவர்... தமிழினத்தின் போர்வாள். இது சம்பிரதாயக் கூட்டம் அல்ல... சரித்திரக் கூட்டம். இது அரசியல் திருப்பத்தின் துவக்கம். வீழ்ச்சியடைவதற்கு முன்னால் தோன்றும் பலவீனம், கலைஞருக்கு வந்துவிட்டது. கடந்த தேர்தலில் தி.மு.க. வெட்கக்கேடான தோல்வியைத் தழுவியதற்குத் தலைமைதான் காரணம். வை.கோ. அல்ல!

தமிழினத் தலைவர் கலைஞரைக் கொன்றுவிட்டால், வை.கோ. உயிரோடு நடமாட முடியுமா? சொல்வோர் சொன்னாலும், இதை நம்பத்தான் முடிகிறதா? விடுதலைப் புலி என்ற உணர்வை வை.கோ-வுக்கு ஊட்டிய கலைஞரே இப்படிக் கூறலாமா? கலைஞரே, என்ன சாதுரியம் செய்கிறீர்கள்? என்ன சாமர்த்தியம் பண்ணுகிறீர்கள்? சாதுரியமும் சாமர்த்தியமும் உண்மை இல்லை என்று தெரிந்தால், அது நொறுங்கிப் போய்விடும்.

'உடன்பிறப்பே’ என்றபோது ஓடி வந்தோமே... எங்களுக்குக் காட்டும் நன்றி இதுதானா?'' (எல்.கணேசன் பேச்சைத் தொடர முடியாமல் உடைந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டார்! தழுதழுத்தபடி தொடர்ந்து பேசினார்...)

''தலைவரே! நீங்க எட்டடி பாய்ஞ்சா, நாங்க பதினாறு அடி பாய்வோம். இது என்ன அ.தி.மு.க-ன்னு நெனைச்சுட்டீங்களா? விட மாட்டோம்... தி.மு.க. நாற்பது லட்சம் தொண்டர்களின் சொத்து. அதைப் பங்கு போட யாருக்கும் உரிமை இல்லை!'' என, ஏகப்பட்ட கைதட்டல்களை வாங்கிக்கொண்டு போய் உட்கார்ந்தார் கணேசன்!

திரண்டு இருந்த மனிதக் கடலைப் பார்த்துவிட்டு, ''இங்கு என்ன பேசுவது? எதைப் பேசுவது? இப்படி ஒரு சூழலில் இங்கு நான் பேசுவேன் என்று இதுவரை கனவிலும் நினைத்தது இல்லை...'' என்றபடி, உணர்ச்சிப்பூர்வமாகப் பேச ஆரம்பித்தார் வை.கோ.!

''ஒரு முறை கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு என்னைக் கட்டிக்கொண்டு, 'அண்ணா வழியில் எனக்குப் பிறகு கட்சியை உன்னால்தான் வழி நடத்த முடியும்’ என்றார். அவரே இப்போது, நான் போட்டித் தலைவராக முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டை வீசியிருக்கிறார். என்னால் கழகம் மாசுபட்டுவிட்டது என்றால், தூக்கி எறிய வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு... கோபால்சாமி வருத்தம் தெரிவிக்க வேண்டுமாம்! எதற்கு? கோபால்சாமி, விடுதலைப் புலிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டுமாம்! எதற்கு?

சுப்பிரமணியன் சுவாமி என்னை, 'தி.மு.க-வின் புற்று நோய்’ என்று அறிக்கை கொடுத்தபோது, நாஞ்சிலார் மட்டுமே மறுப்புக் கொடுத்தார்.''

இந்த சப்ஜெக்ட்டைப்பற்றி பேசும்போதே, கண்கள் கலங்க ஆரம்பித்தன வை.கோ-வுக்கு!

''அரசியலில் உணர்ச்சிவசப்படுதல் நல்லது அல்ல... கண்ணீர் விடுவதும் கோழைத்தனம்...'' என்று ஆரம்பத்தில் பேசியவர், மேடையில் அழுவதைப் பார்த்ததும் கூட்டத்தினர் நிஜமாகவே பரபரப்பாகிவிட்டார்கள்!

''நான் அழுவதால் கோழை அல்ல...'' என்று மறுபடியும் பேச்சின் வேகத்தை முடுக்கிக்கொண்டார் வை.கோ. ''என்னைக் கொலைகாரன் என்று அறிக்கை தந்த பிறகுதான், உண்மை புரிந்தது. மாறனும் ஸ்டாலினும் அழகிரியும்தான் எனக்கு எதிராக சதி செய்ததாக இந்த நிமிடம் வரை தவறாக நினைத்துக்கொண்டு இருந்தேன். இப்போது புரிகிறது... அவர்கள் பாவம்! கொலைகாரன் என்று சொன்னால்தான் கோபாலசாமியை அழிக்க முடியும் என்ற ஆழமான சிந்தனை, கருணாநிதியைத் தவிர யாருக்குமே வராது. ஆற்றல் நிறைந்த எனது தலைவரின் உள்ளத்தில்தான் வருகிறது. இதை நீங்கள் செய்யலாமா தலைவரே...?!'' என்று வை.கோ. பேசப் பேச, கூட்டத்தினரின் உணர்ச்சி வேகமும் எகிறிக்கொண்டு இருந்தது!

''தலைவர் அவர்களே! உங்களிடம் வித்தை கற்றவன் நான். சிஷ்யனை அழிக்க நினைக்கிறபோது... அந்த வித்தை பலிக்காது. என்னை அழிக்க முயல்வதால்தான், பேச்சு, எழுத்து எல்லாம், உங்களுக்கு வர மாட்டேன் என்கிறது. தமிழ் மகள் வர மறுக்கிறாள். பதினான்கு வயது முதல் உங்கள் எழுத்தில் இடறல் ஏற்பட்டது கிடையாது. உங்கள் விசுவாசமான தம்பியை ஒழிக்கத் திட்டமிட்டவுடன், உங்கள் எழுத்தும் உங்களுக்கு வஞ்சகம் செய்கிறது. பேச்சும் துணை நிற்கவில்லை. அடுக்கடுக்கான வாதங்களை எடுத்துவைக்கும் உங்கள் ஆற்றல், இப்போது எங்கே?

என்னைக் கொலைகாரன் என்று சொன்னபோது, கலைஞருடைய அடிப்​படைத் தொண்டன் என்கிற தகுதியையும் நான் இழந்துவிட்டேன். இனிமேல் பேசிப் புண்​ணியம் இல்லை!'' என  வை.கோ. சொன்னது... 'அடுத்து, செயலில் இறங்குவேன்!’ என்ற அர்த்தத்தில்தான் என்று தொண்டர்களுக்குப் புரிந்தது!

கடைசி நேரச் செய்தி :

நவம்பர் 1-ம் தேதி கலைஞர் சுற்றுப் பயணம் முடித்து, சென்னைக்குத் திரும்​புகிறார். 'வை.கோ-வைக் கட்சியை​விட்டு நீக்கும் நடவடிக்கை எடுக்கலாம். அந்தத் தீர்மானத்தை முன்மொழியப்போவது வீரபாண்டியாராக இருக்கும்’ என்பது வை.கோ. வட்டாரத் தகவல்!

- நமது நிருபர்கள்