Published:Updated:

வால் பிடிக்கும் விக்கிரமராஜா..

கொள்ளை அடித்த வெள்ளையன்

வால் பிடிக்கும் விக்கிரமராஜா..

கொள்ளை அடித்த வெள்ளையன்

Published:Updated:

ரண்டு கோஷ்டி​களாகப் பிரிந்து நிற்கும் வணிகர் சங்கத்தினர் ஆளுக்கொரு மாநாடு நடத்தி, சென்னைக் கடைகளுக்கு மே 5-ம்தேதி முழு விடுமுறை கொடுத்துவிட்டார்கள். அரசியல் கட்சிகளை விஞ்சும் வண்ணம் மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளிக்கிறார்கள்! 

தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலை​வர் வெள்ளையன் மீசையை முறுக்கியபடி அனல் வார்த்தை​களைக் கக்குகிறார்...

வால் பிடிக்கும் விக்கிரமராஜா..

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மத்தியிலும் மாநிலத்திலும் காட்டாட்சி நடக்கிறது. வணிகர்​களிடமும் மக்களிடமும் கொள்ளை

##~##
அடிக்கிறார்கள். ஆட்சி​யாளர்கள் ஒத்துழைப்புடன் சிறு மற்றும் சில்லறை வணிகர்களை அழித்து, அதர்ம வணிகத்தில் ஈடுபடுகிறார்கள் பெரு முதலாளிகள். அதிகப்படியான விளம்பரங்கள் மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தின் நுகர்வை மக்களிடம் திணிக்கிறார்கள். எங்களைப்போன்ற சில்லறை வணிகர்கள், இந்த அரசுக்கு அருவெறுப்பாகத் தெரிகிறார்கள். தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவையை உருவாக்க நாங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. சங்கம் உருவாக்கும்போது நாங்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, அன்று ஆட்சியில் இருந்தவர்கள் ரவுடிகளை ஏவி, பலரைக் கொலை செய்தார்கள். பலர் உடைமைகளை இழந்தனர். அரும் பாடுபட்டு வளர்த்த இந்தப் பேரவையை, கடந்த 1996 - 2001 தி.மு.க. ஆட்சியின்போது உடைத்து ரசித்தார் கருணாநிதி. அப்போது என்.ஆர்.தனபாலன் எங்களுக்கு எதிராக நடத்திய போட்டி மாநாட்டில் கலந்துகொண்டு எங்களை அழிக்கப் பார்த்தார். அது நடக்கவில்லை என்றவுடன், ஆட்சியின் கடைசிக் காலங்களில் மீண்டும் எங்களுக்கே ஆதரவு தெரிவித்தார். நாங்களும் அவரை நம்பி வள்ளுவர் கோட்டத்தில் பாராட்டு விழா எடுத்தோம். அதன் பின்பும், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை; துரோகமே இழைத்தார்!

இந்த ஆட்சியிலும் ஏகப்பட்ட இடையூறுகள். அப்படியும் வணிகர்​கள் ஒற்றுமையைக் குலைக்க முடியவில்லை. கடந்த ஆண்டு மாநாட்டின்போது, எங்கள் சங்கத்திலேயே சிலர் சபலப்பட்டார்கள். குறிப்பாக, விக்கிர​மராஜா. அவர், 'தேர்தலின்போது அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்!’ என்றார். ஆனால், வணிகர் பேரவையின் மீது கட்சி சாயம் பூசிவிடக் கூடாது; பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பேரவையில் இருக்கிறார்கள் என்பதற்காக, அதனை நான் மறுத்துவிட்டேன். ஆனால் ஏனோ, அவரால் அ.தி.மு.க. பக்கம் போக முடியவில்லை. அனிதா ராதாகிருஷ்ணன் மூலம் துணை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 'வெள்ளையன், தி.மு.க. அரசு எதிர்ப்பாளர்’ என்று போட்டுக் கொடுத்தார். அதை ரசித்த ஸ்டாலின், பேரவையை உடைக்க உதவி செய்து ஊக்குவித்தார்.

இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இதைத் தவிர, தி.மு.க. அரசு வேறு ஒன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. சில்லறை வணிகத்தை அந்நிய முதலாளிகள் கைப்பற்றியதைக் குறித்துக் கவலைகொள்ளவில்லை. உணவுப் பொருள் உற்பத்தி, தன்னிறைவு அடைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு முயற்சிக்கவில்லை.

இப்போதும் விக்கிரமராஜா நடத்தும் போட்டி மாநாடு, வணிகர்களுக்கு நன்மை தராது என்பது எல்லோருக்குமே தெரியும். ஆட்சியாளர்கள் துரோகம் இழைக்கிறார்கள் என்று தெரிந்தும், அவர்கள் பின்னால் வால் பிடிப்பது வணிகர்களுக்குச் செய்யும் துரோகம்தானே. அதை நிரூபிக்கும் வகையில்தான், அவர்கள் நடத்திய மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் சில தலைகள் கலந்துகொள்கின்றன.

நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன். எங்கள் பேர​வைக்கு அரசியல் சாயம் பூசிவிட முடியாது. நாங்கள் எப்போதும் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க மாட்டோம். வணிகர்களுக்கு நன்மை செய்யும் ஆட்சி​யாளர்​களுக்கு, எங்கள் ஆதரவு இருக்கும். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களுக்கு நன்மை செய்ய மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். வரும் 13-ம் தேதிக்குப் பிறகு அந்த போட்டி சங்கத்தினர் காணாமல் போய்விடுவார்கள்...'' என்றார்.

''வெள்ளையன் தேவை இல்லாமல் எங்கள் அமைப்பின் மீது அரசியல் சாயம் பூசுகிறார்!'' என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா. ''நல்லது செய்யும் ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம்... அவ்வளவுதான். நாங்களும் வாக்காளர்கள்தான். எந்தக் காலத்திலும் வாக்கு கேட்பவர்களாக மாற மாட்டோம். பழைய பெயரில் அவர்கள் அமைப்பு நடத்தியபோது, அலுவலகமே அவர்களுக்குக் கிடையாது. கணக்குப் புத்தகம் கூட கிடையாது. வணிகர்களின் பணத்தை பல ஆண்டுகளாகக் கொள்ளை அடித்த வெள்ளையனுக்கு, எங்களைப்பற்றிப் பேச யோக்கியதை கிடையாது...'' என சூடாகப் பதில் சொல்கிறார் விக்கிரமராஜா!

மோதல் எங்கே போய் முடியுமோ?

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படம்: த.கதிரவன்