குடியரசுத் தினத்தையொட்டி நாடு முழுவதும் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அமைப்பினர், அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். பல இளைஞர்களை மூளை சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் இயக்கத்தில் சேர்த்து வருகின்றனர்.

இப்படி இந்தியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், இங்குள்ள இளைஞர்களையும் மூளை சலவை செய்து இயக்கத்தில் ஈடுபட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத், சென்னை, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர சென்றபோது காவல்துறையினரால் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும், என்ஐஏ மற்றும் காவல்துறையினர் சேர்ந்து பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சோதனையில், கர்நாடகா, ஹைதராபாத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.