Published:Updated:

வள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

வள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்
வள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதாக கொடுத்த வாக்கை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

வள்ளலார் நினைவு இல்லம்; அரசு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 2011-ம் ஆண்டில் பதவியேற்ற அ.தி.மு.க. அரசு, கடந்த 5 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை என்பதை பொதுமக்கள் நன்றாக அறிவர். ஆனால், கடந்த முறை தமிழகத்தை ஆண்டபோது அளித்த வாக்குறுதிகளிலும் பலவற்றை ஜெயலலிதா அரசு நிறைவேற்றவில்லை. அரசின் இந்த அலட்சியத்தால் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வடலூர் இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் பொலிவிழந்து நாற்றமடிக்கும் இடமாக மாறியுள்ளது.

வள்ளலாரின் வாழ்க்கையில் வடலூர் சத்திய ஞான சபையைவிட மிகவும் முக்கியமான இடம் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் தான். அந்த பெருமை மிகு இல்லம், சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் 32/14 என்ற இலக்கத்தில் தான் உள்ளது. வள்ளலார் 2 வயது குழந்தையாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டார். அதன் பின்னர் வள்ளலார் உள்ளிட்ட குழந்தைகளுடன் இந்த வீட்டில் தான் அவரது தாயார் குடியேறினார். தமது 51 ஆண்டு கால வாழ்நாளில் 33 ஆண்டுகளை இவ்வீட்டில்தான் வள்ளலார் கழித்தார். திருவருட்பாவின் முதல் 5 திருமுறைகளை இங்கு தான் எழுதினார்; உருவ வழிபாடு கூடாது என்ற சிந்தனை அவருக்கு உதித்ததும் இங்கு தான்.

இத்தகைய சிறப்புமிக்க இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்று இராமலிங்க அடிகளாரின் வழி நடப்பவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள். சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பா.ம.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பியதன் பயனாக கடந்த 04.04.2003 அன்று தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்து பேசிய அப்போதைய அமைச்சர் செ.செம்மலை, வள்ளலார் வாழ்ந்த ஏழுகிணறு இல்லம் நினைவிடம் ஆக்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 13 ஆண்டுகள் ஆகும் நிலையில், இதை செயல்படுத்த இன்றுவரை எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

தமிழகத்தில் வள்ளலாரின் வழியை பின்பற்றி வரும் லட்சக்கணக்கான பொதுமக்களின் விருப்பமும் இதுவாகவே உள்ளது. ஆனால், தமிழக அரசு இக்கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. சிறப்பு மிக்கவர் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றி அவருக்கு பெருமை சேர்க்க கிடைத்த வாய்ப்பை கடந்த 13 ஆண்டுகளாக அரசு தட்டிக் கழித்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் எவ்வாறு போற்றப்படுகிறாரோ, அதே அளவுக்கு வள்ளலாரும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். ஆனால், பரமஹம்சர் மற்றும் அவரது சீடர் விவேகானந்தரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள இல்லங்களில் பத்தில் ஒரு பங்கு கூட வள்ளலாரின் நினைவாக அமைக்கப்படாதது வருத்தமளிக்கிறது. வள்ளலாரின் ஏழுகிணறு இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு இப்போது வரை செயல்படுத்தப்படாததால், அவருக்கு நினைவு இல்லமே இல்லாமல் போய்விடுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.

வள்ளலார் வாழ்ந்த இல்லம் இப்போது லீலாவதி என்பவரிடம் உள்ளது. வேறு சிலரிடம் வாங்கிய பணத்தை அவரால் திருப்பித் தர முடியாததால் பணம் கொடுத்தவர்கள் வள்ளலார் வாழ்ந்த  வீட்டை பல பிரிவுகளாக பிரித்து வீடுகளாகவும், அச்சகமாகவும் மாற்றியுள்ளனர். பராமரிப்பு இல்லாததால் அவ்வீடு சுகாதாரக்கேடு நிறைந்ததாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மாறிவிட்டது.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பா.ம.க. உட்பட பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில் அதை தமிழக அரசு அலட்சியம் செய்தது. அதன்விளைவு அந்த இல்லத்தை கட்டுமான நிறுவனத்தினர் வாங்கி கடந்த ஆண்டு இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்காவிட்டால் அதற்கும் இதேநிலை ஏற்படலாம். அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.