சென்னை: வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்கு, மழை வெள்ள பாதிப்பு போன்றவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 120 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 5,464 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது

இந்த கருத்துக் கணிப்பில், தமிழகத்தின் முக்கிய பிரச்னையாக அரசுத் துறைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் என 36 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மது பிரச்னை என 23.4 சதவிகிதம் பேரும், குடிநீர் பிரச்னை என்று 14.2 சதவிகிதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென 25.7 சதவிகிதம் பேரும், அமல்படுத்தவது சாத்தியமில்லை என 51.9 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த கருத்துக் கணிப்பில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு 37.7 சதவீத மக்களும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 35.7 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4 சதவீத பேரும், பா.ம.க. கூட்டணிக்கு 2.2 சதவீத மக்களும் ஆதரவளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கு பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிடித்த முதலமைச்சர் யார்? என்ற கேள்விக்கு 46.5 சதவீதம் பேர் காமராஜரை சுட்டிக் காட்டியுள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக எம்.ஜி.ஆருக்கு 27.9 சத வீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கருணாநிதிக்கு 8.7 சதவீதம் பேரும், அண்ணாவுக்கு 7.1 சதவீதம் பேரும், ஜெயலலிதாவுக்கு 4.4 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பு குறித்து பேராசிரியர் ராஜநாயகம் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
நமக்கு நாமே பயணத்தின் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி உள்ளது என்று 38 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு சம அளவில் மக்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், தி.மு.க.வுக்கே ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது" என்றார்.