Published:Updated:

'கனன்று கொண்டிருக்கும் எகிப்திய பெண்கள்!'

'கனன்று கொண்டிருக்கும் எகிப்திய பெண்கள்!'
'கனன்று கொண்டிருக்கும் எகிப்திய பெண்கள்!'

(எகிப்தின் தஹ்ரீர் சதுக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு, அதில் எகிப்திய ராணுவப் படையால் தாக்குதலுக்கு உள்ளான பெண் பத்திரிகையாளர் மோனா எல்டாஹாவி தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றி முதன் முறையாக உலகுக்குத் தெரியப்படுத்தினார். அவர் தனது அனுபவத்தை 'The women of Egypt are a red line' என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதினார். 'தி கார்டியன்' நாளிதழில் வெளியான அந்தக் கட்டுரையை 'தி ஹிண்டு' நாளிதழ் மறுபதிப்பு செய்திருக்கிறது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கமே இது.)

'கனன்று கொண்டிருக்கும் எகிப்திய பெண்கள்!'

ன்னிடம் பாலியல் ரீதியாக முறை தவறி நடந்து கொள்ள முயற்சித்தவனுக்கு ஒரு குத்துவிட்டேன் என்பதுதான் கலவரங்களை ஒடுக்கும் போலீஸார் என்னைச் சுற்றி வளைக்கும் வரை என் நினைவில் கடைசியாக இருந்த ஒன்று. பறந்து வரும் தோட்டாக்களில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடத்தை நீங்கள் தேடும் போது உங்களைக் கைது செய்வார்கள் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? எனக்கும் அவனுக்கும் இடையில் ஒருவன் வந்து நின்று கொண்டு அவனைப் பாதுகாத்தான். அதனால் நான் சினம் கொண்டு பின்னடைந்து கொண்டே இருந்தேன். மூன்றாவதாக ஒருவன் என் இன்னொரு கையில் இருந்த ஸ்மார்ட் போனைப் பறிக்க முயற்சித்தான். மேக்ட் பட்டர் எனும் என் நண்பனையும் என்னையும் அவன்தான் பாதுகாப்புக் கருதி காலியான கடை ஒன்றின் உள்ளே இழுத்தான். பிடித்த என் கரங்களையும் அவன் விடுவதாக இல்லை.

அது நவம்பர் மாதம். மேக்ட்டும் நானும் தஹ்ரீர் சதுக்கத்தில் இருந்து முகமது மஹ்மூத் வீதிக்கு வந்தோம். சில நாட்களுக்கு முன்பு தஹ்ரீர் சதுக்கத்துக்குள் வன்முறையாக காவலர்கள் மற்றும் ராணுவத்தினர் உள் நுழைந்ததைப் பின்தொடர்ந்து, அந்த வீதியில்தான் எதிர்ப்பாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்தது. என்னுடைய தூரத்து உறவினர் உட்பட ஏறக்குறைய 40 பேர் செத்துப் போனார்கள். 3,000 பேர் காயமுற்றார்கள்.

மேக்ட் என்னை வெளியே இழுக்க முயற்சி செய்தான். "சேட்டை செய்தவனை குத்தியது போதும், போன் போனால் போகட்டும் விடு". இப்போது எங்கள் இருவருக்கும் தெளிவாகியது. முகமது மஹ்மூத் வீதியில் எதிர்ப்பாளர்களுக்கிடையே நாங்கள் சந்தித்த அந்த நபர்கள் தான் எங்களைப் பிடித்திருக்கிறார்கள். அவர்கள், சில மீட்டர்கள் தள்ளி நின்றிருந்த பாதுகாப்புப் படையினரோடு பணியாற்றுபவர்கள். அவர்களுடைய வேலை, போலீஸார் வரும் வரை எங்களைப் பிடித்து வைத்திருப்பதுதான்.

அவர்கள் வந்த போது, அந்தக் காலியான கடையில் நான் மட்டும்தான் இருந்தேன். மேக்ட் எப்படியோ தப்பிவிட்டான் என்று நினைத்தேன். ஆனால் பிற்பாடு அந்தக் கடையின் அருகே... தான் தாக்கப்பட்டதையும் என்னைத் தாக்க போலீஸார் நெருங்கியதையும் சொன்னான். "உன் தலையைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு நீ புத்திசாலியாக இருந்தாய்" என்றான். அவனுக்கு முகத்தில் தையல் போடப்பட்டிருந்தது. இப்போதும் அவனுக்கு தலையிலும் நெஞ்சிலும் சிராய்ப்புகள் இருக்கின்றன.

என் வலது கையும் இடது கையும் முறிந்து போனது. எகிப்திய பாதுகாப்புப் படைகளின் முரட்டுத்தனம் எப்போதும் கோரமானதாக, எதேச்சையானதாக, சமயங்களில் கவித்துவமானதாக இருக்கும். ஆரம்பத்தில் என்னுடைய அனுபவம் எதேச்சையானதாகத்தான் நினைத்தேன். ஆனால் மிகப்பெரிய மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர், 'உன்னை அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கிறது. அதனால் தான் அந்தக் காலியான கடைக்கு போலீஸாரை விட்டு உன் கையை உடைத்திருப்பதன் மூலம் அவர்களின் கோபத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்' என்றார். பஷார் அல் அஸ்ஸாத்தின் விசுவாசிகள் சிரியாவின் புகழ்பெற்ற கார்டூனிஸ்ட் அலி ஃபர்சாத்தின் கைகளை மிதித்து நசுக்கினார்கள். தங்களின் எதிரிகளின் வேலைக்கு ஏற்றது போல் காயங்களை உண்டாக்குபவர்களாக இருக்கிறார்கள் நம் சர்வாதிகாரிகள்.

என் கைகள், கால்கள் மற்றும் என் உச்சந்தலை ஆகிய இடங்களில் நான் பெற்ற தடியடிகளின் (அதற்குப் பின் தொடர்ந்த வாரத்தில், ஒவ்வொரு நாளும் புதிய சிராய்ப்புகளை நான் கண்டு வந்தேன்) போதும் என் மனதில் இரண்டு விஷயங்கள் முன் நின்றன. வலியும், என் ஸ்மார்ட் போனும்தான் அவை.

அவர்களின் கொடூரமான தாக்குதல் என்னைப் பின்வாங்கச் செய்தது. இந்தப் பெண்ணியவாதியை அவ்வளவு கடினமாகத் தாக்கமாட்டார்கள் என்று நான் நினைத்தது தவறு என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நான் வெறுமனே பெண் மட்டும் அல்ல. என்னுடைய உடலே தஹ்ரீர் சதுக்கமானது. ஹோசினி முபாரக்கின் படையைக் கோபம் கொள்ள வைத்த அந்தப் புரட்சிக்கு எதிராகப் பழிவாங்கும் சமயமாக அது இருந்தது. அது இப்போதும் தொடர்கிறது. தஹ்ரீர் சதுக்கத்தில் ஒரு பெண் தாக்கப்படுவதையும் அவளின் உள்ளாடை வரை படை வீரர்களால் உடைகள் களையப்பட்டதையும் எடுத்துக்காட்டும் அந்த வலி மிகுந்த புகைப்படத்தை நாம் கண்டிருக்கிறோம். நான்கு அல்லது ஐந்து போலீஸார் என்னை அடித்து யாரும் இல்லாத இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட போது என்னுடைய கைப்பேசி கீழே விழுந்துவிட்டது. "என்னுடைய போன், அது எனக்கு வேண்டும்," என்றேன்.

சொன்னது மட்டும் அல்லாமல் கீழே தவழ்ந்து சென்று அதைக் கைப்பற்றவும் முயன்றேன். எனக்குள் இருக்கும் டிவிட்டர்ஹாலிக் குணம் அல்ல என்னை அந்தக் கைபேசியை நோக்கிச் செலுத்தியது... உயிர்பிழைத்த தாகம் தான்! முதல் மூன்று அல்லது நான்கு மணி நேர சிறை அடைப்பில், அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடும்... யார் அறியாமலும் செய்யக் கூடும் என்பதை அறிந்து கொண்டேன். அந்தச் சமயம், அதிசயத்துக்கு நெருக்கமாக ஒன்று நிகழ்ந்தது. நான் அமைச்சகத்தில் இருந்த போது, ஒரு செயற்பாட்டாளர் எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தற்காலிகப் போராட்ட நிறுத்தம் ஏற்படுத்துவது பற்றிய விவாதத்திற்கு ஸ்மார்ட் போனுடன் வந்திருந்தார். அவர் எனக்கு ட்விட்டர் பயன்படுத்த உதவியதும், "தாக்கப்பட்டு சிறைபட்டிருக்கிறேன் உள்துறை அமைச்சகத்தில்" என்று செய்தி அனுப்பினேன். அதன் பிறகு அவரின் போன் பேட்டரி போய்விட்டது.

பலர் அதே வாரத்தில் சிறைபிடிக்கப்பட்டார்கள். நான் போலீஸ் நிலையத்துக்கோ அல்லது சிறைச்சாலைக்கோ கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். ஆனால் சில காரணங்களுக்காக நான் உள்துறை அமைச்சகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு ராணுவ நுண்ணறிவுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு சுமார் 12 மணி நேரங்கள் அங்கே வைக்கப்பட்டிருந்தேன். எனக்குப் பாலியல் தொந்தரவு சில நிமிடங்களுக்கே கொடுக்கப்பட்டது என்றாலும், என் உள்ளச் சிராய்ப்பு அப்போதுதான் நிகழ்ந்தது போன்று இருந்தது.

ஆரஞ்சு வண்ண நள்ளிரவில் வீசிய காற்று, தெரு விளக்குகளின் காக்டெயில் வெளிச்சங்கள், அருகில் தீயில் எரிந்து கொண்டிருந்த பள்ளி,  ஆக்ஸிஜனை விட கண்ணீர் வரவழைக்கும் புகையை அதிகமாகக் கொண்டிருந்த காற்று, கறுப்பு ஹெல்மட் அணிந்த கலவரம் ஒடுக்கும் போலீஸ் ஆகியவை ஒவ்வொரு நாளும் என் எண்ணங்களில் வந்து போய்க் கொண்டிருந்தன. ஆனாலும் எனக்கு நிகழ்ந்ததில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டதாகவே உணர்ந்தேன். ஒரு பத்திரிகையாளரின் கைகள் எகிப்திய போலீஸாரால் முறிக்கப்பட்ட செய்திகளை நான் வாசித்தேன். ஆனால் அவற்றை, கட்டுப்போட்ட என் கைகளுடன் நான் பொருத்திப் பார்க்கவில்லை. கைகளில் ஏற்பட்ட எலும்பு முறிவும், சீழ் வடிதலும் குணமாக எப்படியும் ஒரு வருடம் ஆகும். அது வரை என் இடது கையில் இருக்கும் ஒற்றை விரல் மட்டுமே உதவியாக இருக்கும். டச்பேட் உபயோகிப்பதற்குப் போதுமானதாக அது இருக்கிறது எனக்கு.

ஆனால் என்னைப் பலாத்காரம் செய்த அந்தக் கைகள்... எனக்குத் தெரியும். சில சமயம் அந்தக் கைகள் பசிவெறியுடன் என் உடலைப் பிடுங்குவதாகவே தோன்றும். ஓர் இடத்தில் நான் விழுந்தேன். அவர்களின் பூட்ஸ் உயரத்திற்கு என் பார்வையை உயர்த்தி, எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்: "எழு இல்லை எனில், நீ இறந்து போவாய்". அவர்கள் என்னை உள்துறை அமைச்சகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அந்த மனிதர்கள் வெறுமை படர்ந்த உடையில், தஹ்ரீர் சதுக்கத்தில் சிவிலியன்களான நாங்கள் கண்ணீர் புகையில் இருந்து தப்பிக்க அணிந்த அதே அறுவை சிகிச்சை முகமூடிகளை அணிந்திருந்தார்கள். கிட்டத்தட்ட நான் கத்தினேன், "நீங்கள் நண்பர்களா அல்லது எதிரிகளா?". வெற்றுப் பார்வையும், என் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான மௌனமும்தான் எனக்கான பதில்களாக இருந்தன.

நான் பயம் கொள்ள ஆரம்பித்தேன். "அநேகமாக அவர்கள், நான் உளவு பார்த்தமைக்காக என்னைத் தண்டிக்கலாம்". இஸ்ரேலில் சில காலம் நான் வாழ்ந்திருக்கிறேன். அங்கே நான் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளராகப் பணியாற்றினேன்.

"நீங்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நான் உங்களைக் காப்பாற்றுவேன்". வெறுமை படர்ந்த உடையணிந்த மூத்த அலுவலர் ஒருவர் எனக்கு நம்பிக்கை அளித்தார். "நான் இங்கே இல்லாமல் போயிருந்தால், அவர்களிடம் இருந்து உன்னைக் காப்பாற்ற ஒருவரும் இல்லாது போயிருப்பார்கள். அங்கே அவர்களைப் பார்த்தீர்களா? அவர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?". சில அடிகள் தள்ளியிருந்த ஒரு கூட்டத்தைச் சுட்டிக்காட்டினார். அவர் எனக்குப் பாதுகாப்பு அளிப்பதாகச் சொன்னாலும் கூட, அதை அவர் செய்யவில்லை.

இதை முடிவுக்குக் கொண்டு வந்தது ராணுவத்தில் இருந்த ஒரு வயதானவர். "அவளை வெளியே கொண்டு வா". "நீங்கள் ஏன் மக்களோடு யுத்தம் செய்கிறீர்கள்?" என நான் அவர்களைக் கேட்டேன். என் கண்களை உற்றுப் பார்த்தவர், தன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை அப்படியே விழுங்கிக் கொண்டு நின்றார். அவரால் பேச இயலவில்லை. மற்றவர்கள் என்னைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்கள்: "நீ ஏன் அங்கே இருந்தாய்?" "நான் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், ஆய்வாளர்" என்றேன். உண்மையில், துணிவின் உச்சத்தைத் தொட வேண்டும் என விரும்பினேன் என்று அவர்களிடம் சொல்ல நினைத்தேன். முகமது மஹ்மூத் வீதியில் இளைஞர்கள்... அதிலும் பெரும்பான்மையாக சிறுவர்கள், அவர்களுடைய தாய்மார்கள் அந்தச் சிறுவர்களின் முன்னங்கைகளில் எண்களை எழுதி வைத்திருந்தார்கள். ஒருவேளை பாதுகாப்புப் படையினரோடு ஏற்படுகிற மோதலில் இறந்து போனால் அவர்களை அடையாளம் காண்பதற்குத்தான் அது. சிலர் தோட்டாக்களை ஏந்திக் கொண்டும், சிலர் கண்ணீர் புகைக்கு ஆட்பட்டு பார்வையை இழந்தும் உயிர் பிழைத்தார்கள். பாதுகாப்பு படையினர் எதிர்ப்பாளர்களின் தலைக்குக் குறிவைக்கவே விரும்பினார்கள்.

நான் வாழ்கின்ற நியூயார்க் நகரத்தில் இருக்கும் போதும் சரி, புரட்சி பற்றி விரிவுரையாற்ற நான் பயணங்கள் மேற்கொள்ளும் போதும் சரி... பல மாதங்களுக்கு, தஹ்ரீர் சதுக்கம் என் மனதில் உரைகல்லாக இருந்தது. ஆனால் மோட்டார் பைக்கில் வந்து எதிர்ப்பாளர்களுக்கு மருந்துகள் கொடுத்து, நினைவிழந்தவர்களைத் தூக்கிக் கொண்டு களத்தில் இருந்த மருத்துவ மையங்களுக்கு எடுத்துச் செல்வது, கண்ணீர்ப் புகையில் திணறி தப்பித்து, முகமது மஹ்மூத் களமுணையில் இருந்து தப்பித்து பல சேவைகளைச் செய்த மோட்டார் பைக் தேவதைகள் போன்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க என்னால் இயலவில்லை.

"ஒருவேளை நான் மரணித்தால், மொரோக்கன் ஜெல்லாபா அணிவிக்கப்பட்டு புதைக்கப்பட வேண்டும். என் படுக்கையின் மேல், அது தயாராக இருக்கும்", என்று ட்வீட் செய்திருந்தார் வலைப்பதிவரும் செயற்பாட்டாளருமான 'கெமிஹுத்' பெஷீர். கண்ணீர்ப் புகையை அவர் உள்வாங்கிக் கொண்டதால் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அவர் குணமாகி மீண்டும் களமுணைக்குத் திரும்பும் வரை பல இளைஞர்கள் அவரின் வீழ்ச்சியை உடைத்து அவரின் இடத்தை அவருக்காக நிரப்பினார்கள்.

நான் சிறைப்பட்டிருந்த பொழுதுகள் முழுவதும் உடைந்து போன என் கைகளுக்கு மருத்துவ வசதியைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டே இருந்தேன். என்னுடைய கைகளில் வளர்ந்து கொண்டிருக்கும் சிராய்ப்புகளை என்னைப் பிடித்து வைத்திருப்பவர்களிடம் காட்டி மன்றாடினேன். பலர் என் கை மூட்டுகளை மடக்கச் சொன்னார்கள். "பார், இவை வெறுமே சிராய்ப்புகள். உனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால் உன் கை மூட்டுகளை மடக்க முடியாது". பிறகு, நானாகவே எனக்கு ஏற்பட்ட பாலியல் தாக்குதல் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அவர்கள் தங்கள் பார்வைகளை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்கள். ஒருவரும் கேட்பதற்குத் தயாராக இல்லை.

நான் மட்டும் இதைச் சுமந்து கொண்டிருந்தால், சபிக்கப்பட்டுவிடுவேன் என்று நினைத்தேன். ஆகவே இறுதியாக யாரேனும் ஒருவர் காது கொடுத்துக் கேட்கும் வரை நான் மேலும் தொடர்ந்தேன். இறுதியாக ஒருவர் கத்தினார்: "நம்முடைய சமூகம் நோய் உடையது. உன்னை பலாத்காரம் செய்த அந்தப் போலீஸாருக்கு நாங்கள் என்ன செய்தோம் என்று உனக்குத் தெரியுமா? அவர்களுடைய கிராமங்களில் இருந்து அவர்களை வெளியேற்றி, சுத்தப்படுத்தி அவர்களின் மனதில் ஒரு சிறு கதவைத் திறந்துவிட்டிருக்கிறோம்". "அதற்காகத்தானே இந்தப் புரட்சியை நாம் மேற்கொண்டிருக்கிறோம்" என்று பதில் அளித்தேன். "ஒருவரும் அப்படி வாழக்கூடாது. உனக்கு ஏற்படுத்திய அந்தக் கொடுமையிலேயே அவர்கள் வாழ்வார்கள். அதில் இருந்து அவர்களை நீ 'காப்பாற்றுவாயா'?".

கூடவே, நான் அமெரிக்கக் குடிமகளாகவும் அறியப்பட்டிருந்தேன். கான்சுலர் பிரதிநிதியாக இருக்கவும் வேண்டப்பட்டிருந்தேன். நான் எகிப்திய அமெரிக்கப் பெண்ணாக இருப்பதால் (2000-ல் நான் அமெரிக்காவுக்குச் சென்றேன்), பெயர் தெரியாத எண்ணற்ற எகிப்தியர்கள் படும் துன்பங்களை நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னொரு புறம் நான் வேறு மாதிரியாக எதிர்பார்க்கப்பட்டிருந்தேன். "ஒரு எகிப்தியராக இருப்பதில் நீ பெருமை கொள்ளவில்லையா? உன் குடியுரிமையை இழக்கப் போகிறாயா?", என ராணுவ நுண்ணறிவுப் பிரிவு அலுவலர் என்னைக் கேட்டார். கண்கள் இருள, உடல் சோர்வடைய, எலும்பு முறிவினால் உண்டான உளைச்சலுடன் நான் பதில் சொன்னேன்: "உங்கள் எகிப்திய மக்களில் யாராவது உங்களின் கைகளை உடைத்து, பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தினால், இந்த அறையில் உங்களுக்குத் தேவைப்படுவது... நீங்கள் நம்பும் ஒருவர்தான்."

எகிப்திய பெண் ஒருத்தி தாக்கப்பட்டு, அவளின் உள்ளாடை வரை ஆடை களையப்பட்டு கடந்த வாரம் வெளியான அந்தப் புகைப்படம், 'ஆயுதப் படைகளுக்கான உச்ச மன்றத்தின்'(சுப்ரீம் கவுன்சில் ஆஃப் தி ஆர்ம்ட் ஃபோர்சஸ் - SCAF) முரட்டுத்தனத்தை மேலும் மூடிமறைக்கிறது. எகிப்தை இயக்கும் அந்த ராணுவ அமைப்பு எகிப்திய மக்கள் மீது குற்றங்களை நிகழ்த்திப் பார்க்க முயற்சிக்கிறது. ஒருவர் தாக்கப்படுவது போன்று அமைந்த எந்தப் புகைப்படங்களையும் பார்க்க எனக்குத் திராணி இல்லை. ஏனெனில், முறிக்கப்பட்ட என் கைகளில் திரும்பவும் நான் வலிகளை உணர்கின்றேன். ஒருவேளை நான் கீழே விழுந்த அதே சமயத்தில் எழாமல் போயிருந்தால், அந்தப் பெண்ணை மிதித்தது போலவே என்னையும் மிதித்திருப்பார்கள்.

நியூயார்க்கில் முதல் இரண்டு வாரங்களை அதிகமான வலி நிவாரணிகளுடன் கடத்தினேன். அது என் வலியை மரத்துப் போகச் செய்தது மட்டுமல்லாமல், என் எழுதும் திறனையும் மரத்துப் போகச் செய்தது. வாரத்திற்கு ஒரு முறை, பேரதிர்ச்சியில் இருந்து மீள உதவும் மனநல நிபுணரைச் சந்திக்கிறேன். எலும்புகள் விலகிப் போன என் இடது கையில் அதைச் சரிப்படுத்த டைடானியத் தட்டையும், ஸ்கூரூவையும் வைத்துச் சிகிச்சை அளிக்கின்ற எலும்பு முறிவு நிபுணரையும் சந்திக்கிறேன். தினமும் பிசியோதெரபியையும் மேற்கொள்கிறேன். ஆனால் இந்த வாரம் தஹ்ரீரில் நடைபெற்ற மாபெரும் பெண்கள் பேரணி என் கவனத்தை இன்னும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. அதில் பங்கேற்ற ஒரு பெண் நான் அவர்களுக்குக் கிரியா ஊக்கியாக இருப்பதாக எனக்கு எழுதியிருந்தாள். ஏனெனில், சில நாட்களுக்கு முன்புதான் எகிப்திய தொலைக்காட்சி ஒன்றில் என் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றிச் சொல்லி, இறுதியாக அழ முடிந்தது. அதெல்லாம் உயிர் பிழைத்த ஒருத்தியின் கண்ணீர்.

பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை ஓர் ஆயுத வடிவமாகவே முபாரக் அரசு பயன்படுத்துகிறது. SCAF உயர்த்திப் பிடிக்கும் அவமானமிக்க பாரம்பரியமும் இதுதான். ஆனால் இந்த வாரம் தஹ்ரீரில் பங்குகொண்ட பெண்கள் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால்: 'கனன்று கொண்டிருக்கும் எகிப்திய பெண்கள்!'. என் உடல், மனம் எனக்கு உரித்தானவை. அதுதான் புரட்சியின் இதயத்தில் ரத்தினமாக ஜொலிக்கிறது. குணமாகி மீண்டும் ஒரு முறை ஜனவரியில் எகிப்துக்குச் செல்லும் போது, SCAF - இடம் நான் திரும்பத் திரும்பச் சொல்லப் போவது அதைத்தான்!

தமிழில்: ந.வினோத்குமார்