Published:Updated:

சிசு பாலினத்தை கண்டறிய வேண்டும் என்பது யோசனை மட்டுமே: மேனகா காந்தி

விகடன் விமர்சனக்குழு
சிசு பாலினத்தை கண்டறிய வேண்டும் என்பது யோசனை மட்டுமே: மேனகா காந்தி
சிசு பாலினத்தை கண்டறிய வேண்டும் என்பது யோசனை மட்டுமே: மேனகா காந்தி
சிசு பாலினத்தை கண்டறிய வேண்டும் என்பது யோசனை மட்டுமே: மேனகா காந்தி

புதுடெல்லி: கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என அறிந்துகொள்ள அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று நான் கூறியது யோசனை மட்டுமே, அமைச்சரவையின் பரிந்துரை அல்ல என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்து உள்ளார்.

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, ''பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கு, சிசுவின் பாலினத்தைப் பெற்றோர் கண்டறியும் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை தெரிந்துகொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய உரிமை" என்று கூறி இருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  சமூக ஆர்வலர்கள், இணைய வாசகர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ''நான் கூறியது எனது சொந்தக் கருத்து, அமைச்சரவை பரிந்துரை அல்ல" என்று மேனகா காந்தி நேற்று கூறினார். மேலும், மேனகா காந்தியின் கருத்து அவரது சொந்த கருத்து என்றும் மத்திய அமைச்சரவையில் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிசுவின் பாலினத்தைப் பெற்றோர் தெரிந்து கொள்ளலாம் என்று சிலர் கூறுகின்றனர். இதுதொடர்பாக, விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது.

அதனால், ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து பதிவு செய்வதால், குழந்தையின் பிறப்பு வரை கண்காணிக்க முடியும். இதனால், சிசு கொல்லப்படுவது தடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.