Published:Updated:

பா.ஜ.க. அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது: சரத்பவார் குற்றச்சாட்டு!

விகடன் விமர்சனக்குழு
பா.ஜ.க. அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது: சரத்பவார் குற்றச்சாட்டு!
பா.ஜ.க. அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது: சரத்பவார் குற்றச்சாட்டு!
பா.ஜ.க. அரசு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது: சரத்பவார் குற்றச்சாட்டு!

மும்பை: பா.ஜ.க. அரசு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது என்று சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டடம் புதுப்பிக்கும் பணியும், மும்பை கலினா பகுதியில் அரசு கட்டடம் கட்டும் பணியும் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்தங்களை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் சகன் புஜ்பால் தனக்கு வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கி கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக மத்திய அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி, இந்த ஊழலில் தொடர்புடைய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சகன் புஜ்பால், அவரது மகன் பங்கஜ் புஜ்பால் எம்.எல்.ஏ., மற்றும் அவரது நெருங்கிய உறவினரும், முன்னாள் எம்.பி.யும் ஆன சமீர் புஜ்பால் ஆகியோருக்கு சொந்தமான வளாகங்களில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சமீர் புஜ்பால் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால், அவரை அதிரடியாக கைது செய்து அழைத்து சென்றனர்.

இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவார் செய்தியாளர்களிடம் கூறும்போது, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசை தவிர்த்து, பிற அரசையும் நான் பார்த்திருக்கிறேன். 1995-ம் ஆண்டில் சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் செயல்பாடுகளை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறேன்.

ஆனால், ஜனநாயக நாட்டில், கடந்த 40 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை நான் பார்த்ததே கிடையாது. சமீர் புஜ்பாலை கைது செய்ததன் மூலம் பா.ஜ.க. அரசு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது.  இந்த விஷயத்தில், சகன் புஜ்பால் எடுத்ததாக கூறப்படும் முடிவுகள் அனைத்தும், அப்போதைய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவுகள் தான்.

ஒரே குற்றச்சாட்டை 3 ஏஜென்சிகள் விசாரிப்பது, இதுநாள் வரை நடக்காத ஒன்று. விசாரணைக்கு சகன் புஜ்பால் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும்விடுபட்டு ‘குற்றமற்றவர்’ என்ற பெயருடன் அவர் வெளியே வர வேண்டும். யாராவது எங்களுக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

எத்தனை பேர் மீது வேண்டுமானாலும், அவர்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தட்டும். நாளைக்கு என்னுடைய பெயரை கூட அவர்கள் குறிப்பிடலாம். இதற்கு எல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம். தொடர்ந்து மக்களின் நலனுக்காக பாடுபடுவோம்" என்றார்.