Published:Updated:

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி: கடலூரில் முதல்வர் உறுதி

Vikatan Correspondent
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி: கடலூரில் முதல்வர் உறுதி
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி: கடலூரில் முதல்வர் உறுதி
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி: கடலூரில் முதல்வர் உறுதி

சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அரசு உதவிகளை வழங்கும் என கடலூரில் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்னையில் இருந்து கடலூர் புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் உள்ள ஐ.என்.எஸ். மைதானத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் கடலூர் புறப்பட்டார்.

கடலூர் மாவட்டத்துக்குச் சென்றதும் ஹெலிகாப்டரில் தாழ்வாகப் பறந்து, புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

கடலூரில் உள்ள அண்ணா ஸ்டேடியத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது. அதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா, கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி, புயல் நிவாரணப் பணிகளை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டு உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

புயல் நிவாரணப் பணிகள் பற்றியும், மாவட்டத்தின் தற்போதைய நிலை, மக்களின் பிரச்னைகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்டோருக்கு நேரில் உதவி...

பின்னர், கடலூரில் உள்ள சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகளை முதல்வர் வழங்கினார்.

தானே புயலால் உயிரிழந்த 39 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயை அவர் வழங்கினார். உயிரிழந்த கால்நடைகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும், புயலில் நாசமான முந்திரி பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 9000 ரூபாய் வீதமும் வழங்கினார்.

இன்றைய நிகழ்ச்சியில் 6000 பேருக்கு மொத்தம் 2 கோடியே 86 லட்சம் ரூபாய் அளவிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களிடையே முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், "புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணமும், உதவிகளும் வழங்கப்படும். இது உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் அரசு. நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.