Published:Updated:

மக்களை பழிவாங்க காந்தி குடும்பம் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: மோடி

Vikatan Correspondent
மக்களை பழிவாங்க காந்தி குடும்பம் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: மோடி
மக்களை பழிவாங்க காந்தி குடும்பம் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: மோடி
மக்களை பழிவாங்க காந்தி குடும்பம் நாடாளுமன்றத்தை முடக்குகிறது: மோடி

மொரான்: தேர்தல் தோல்விக்கு, மக்களை பழிவாங்குவதற்காக நாடாளுமன்றத்தை முடக்குவதாக சோனியா, ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

அசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள மொரான் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ''காந்தி குடும்பத்தினர் (சோனியாவும், ராகுல் காந்தி) மட்டும் நாட்டில் எதிர்மறை அரசியலை நடத்துகின்றனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தவிர வேறு கட்சிகளின் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்கள் மோடிக்கு எதிராக செயல்பட்டாலும் கூட நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெற வேண்டும் எனவும் விரும்புகிறார்கள்.

ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து, 400 பேரில் இருந்து 40 பேராக குறைந்து போனவர்கள் மோடியை பணியாற்றவிடாமல் தடுக்கின்றனர். அவர்கள் நாடாளுமன்ற மேல்-சபையில் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளனர்.

அந்த சதித்திட்டத்தில் தொடர்ந்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். தேர்தலில் அடைந்த தோல்விக்காக மக்களை பழிவாங்குவதற்காகவே அவர்கள் இதைச் செய்கின்றனர். தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள போனஸ் உச்சவரம்பு அதிகரிப்பு சட்ட மசோதா, பிரம்மபுத்திராவில் போக்குவரத்து தொடர்பான மசோதா போன்ற பல முக்கியமான மசோதாக்களை அந்த குடும்பம் நிறைவேற்றவிடாமல் தடுக்கிறது.

இதுபோல எதிர்மறை மற்றும் முட்டுக்கட்டை போடும் அரசியலில் யாராவது ஈடுபடுவார்களேயானால் இது அவர்களுக்கும் பயன் அளிக்காது, நாட்டுக்கும் நன்மை கிடைக்காது. மாநிலத்தில் பல கட்சிகள் ஆட்சி அமைக்க நீங்கள் ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அசாமின் கனவுகள் நனவாக வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒருவாய்ப்பு அளியுங்கள். அசாமில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்க்கை தரத்தில் நிச்சயம் நல்ல மாற்றம் ஏற்படும்" என்றார்.