Published:Updated:

விஜயகாந்தின் டெல்லி பயணம் திடீர் ரத்து ஏன்...? திசை திரும்பும் தமிழக அரசியல்!

Vikatan Correspondent
விஜயகாந்தின் டெல்லி பயணம் திடீர் ரத்து ஏன்...? திசை திரும்பும் தமிழக அரசியல்!
விஜயகாந்தின் டெல்லி பயணம் திடீர் ரத்து ஏன்...? திசை திரும்பும் தமிழக அரசியல்!

மிழக சட்டமன்றத் தேர்தலில் யார், யாரோடு கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்ற மில்லியன் டாலர்

விஜயகாந்தின் டெல்லி பயணம் திடீர் ரத்து ஏன்...? திசை திரும்பும் தமிழக அரசியல்!

கேள்வி தமிழ்நாட்டு அரசியலை கடந்த சில நாட்களாக டாப் கியரில் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

வெளிப்படையாக சொல்லா விட்டாலும் கேப்டன் எங்களோடுதான் என்று தி.மு.க.வினர் ஒரு பக்கம் காத்துக் கிடக்க, இன்னொரு பக்கம் மக்கள் நலக் கூட்டணியும் கேப்டனை தங்களுடன் வந்து விடும்படி பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடத்திப் பார்த்து விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறது.

இது இப்படியிருக்க, பிப்ரவரி 6-ம் தேதி  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் டெல்லிக்குப் போய் அமித்ஷாவை சந்திக்கிறார் என்றும், அப்போது  கூட்டணி பற்றி  அறிவித்து விடுவார் என்றும் 5-ம் தேதி மாலை வரை யூகமாகவும், ஸ்ட்ராங் 'டோஸ்' ஆகவும் பரவிய செய்திகளை கேப்டன் தரப்பு இந்த நிமிடம் வரை மறுக்கவில்லை. முன்னர் ஒருமுறை கேப்டனின் கூட்டணி தொடர்பான செய்திகள் இதேப்போன்று ஊடகங்களில் வெளியானபோது தே.மு.தி.க. தலைமையிலிருந்து அதை மறுத்து அறிக்கை கொடுக்கப்பட்டது. இம்முறை அப்படி எதையும் தே.மு.தி.க. செய்யவில்லை என்பதால், பா.ஜ.க. கூட்டணிக்கு கேப்டன் பச்சைக்கொடி காட்டி விட்டார் என்று பேசப்படுகிற சூழல் உருவானது. ஆனால், நிஜ நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்  தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டார் விஜயகாந்த்.

தே.மு.தி.க. மற்றும் பா.ஜ.க. கூடாரத்தில் நடப்பது என்ன ?

"பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதாக இருந்தால், அந்தக் கூட்டணிக்கு தமிழகத்தில் இன்னொரு வலுவான கட்சித் தலைமையின் துணை தேவை. அந்த தலைமை என்பது தி.மு.க.வாகத்தான் இருக்கமுடியும்" என்று தே.மு.தி.க. தரப்பில், பா.ஜ.க.விடம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறதாம். தி.மு.க.வை பொறுத்தவரை,  யார் கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே அறிவித்துவிட்டார் என்பதால் அங்கிருந்து எந்த பிரச்னையும் இல்லை.

இந்நிலையில்தான் வெளிப்படையாகவே இதே யோசனையை பா.ஜனதாவின் சுப்ரமணியன் சுவாமி தற்போது முன்வைத்து வருகிறார். ஆனால் இது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலை அல்ல என்று பா.ஜனதா மேலிடம் மறுத்துள்ளபோதிலும், அந்த ரூட்டில் போனால் சரிப்படுமா? என்ற யோசனையை தமிழக பா.ஜனதா தலைவர்களிடம் கேட்டு அவர்களது கருத்தை கேட்க திட்டமிட்டுள்ளதாம் பா.ஜனதா மேலிடம். 

தே.மு.தி.க.வைப் பொறுத்தவரை இந்த கூட்டணியில் பா.ஜ.க.வோ, தி.மு.க.வோ தங்களை மரியாதைக் குறைவாக நடத்த மாட்டார்கள் என்பதோடு, உரிய சீட்டுகளை, கொடுத்த வாக்குத் தவறாமல் கேட்டு வாங்கி விட முடியும் என்று உறுதியாக நம்புகிறார்கள்.  எனவே இந்த புதிய கூட்டணி ஃபார்முலாவுக்கு பா.ஜனதா மேலிடத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சிக்னல் கிடைத்த பின்னர் டெல்லி போவதே நல்லது என விஜயகாந்த் கருதுகிறார். இதன் காரணமாகத்தான் அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் மனவோட்டத்தை நடிகர் நெப்போலியன்தான் டெல்லியில் பா.ஜ.க. லீடர்களிடம் எடுத்துச் சொல்லி, 'கூட்டணி பாலம்' அமைக்க ரூட் போட்டு வருகிறாராம். ஆனால், தி.மு.க.வுடன் இதே போன்றதொரு 'ரூட்' போட தம்மால் முடியாது என்ற நிலையில்தான் நெப்போலியன், தன் பழைய சகாவான சரத்குமார் மூலம் அறிவாலயத்துக்கு தூது விட்டிருக்கிறார். அதன் பிரதிபலிப்புதான் சமத்துவ மக்கள் கட்சியின் சட்டசபை பலம் ,  ஒரேநாள் இரவில்  ஒரே ஒரு  எம்.எல். ஏ. கொண்ட கட்சியாக கரைந்து போனது என்றும் கூறுகிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை இந்த நிமிடம் வரையில் வலுவாக எதிர்த்துக் கொண்டிருக்கும் பா.ம.க., அதே வேகத்துடன் ஒரு போதும் பா.ஜ.க.வை எதிர்க்கவில்லை. அதே சமயம் தி.மு.க., பாஜ.க., தே.மு.தி.க. என்ற அணி இந்த தேர்தலில் கைகோர்ப்பது உறுதியாகி வருவதாக பா.ம.க. தரப்புக்கு தகவல் வந்திருப்பதால், தைலாபுரம் டாக்டர் கோபக்கனல் காட்டுகிறாராம். அந்தக் கோபத்தை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள 'கார்டன்' காற்று வீசத் தொடங்கியிருக்கிறதாம்!

எல்லா நிகழ்ச்சிகளும் கடைசிநேர மாறுதலுக்கு உட்பட்டவை என்பது போல நிமிடத்துக்கு நிமிடம் கூட்டணிகளில் விரிசலும், விரிசலை ஒட்ட வைக்கும் பந்தங்களும் இனி அடிக்கடி நிகழும். அதை அப்போதெல்லாம் அப்டேட் செய்து கொள்வோம்!

- ந.பா.சேதுராமன்