Published:Updated:

எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மறுஆய்வு மனு!

Vikatan Correspondent
எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மறுஆய்வு மனு!
எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மறுஆய்வு மனு!
எரிவாயு குழாய் பதிக்க அனுமதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேமுதிக மறுஆய்வு மனு!

புதுடெல்லி: தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தே.மு.தி.க. சார்பில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களுருக்கு தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரி வாயு கொண்டு செல்ல கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசின் கெயில் நிறுவனம் திட்டமிட்டது.

ஆனால் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு இந்த திட்டத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தடை விதித்தது. இதனை எதிர்த்து கெயில் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கில்,  சில தினங்களுக்கு முன் தமிழக விவசாயிகள் நிலத்துக்கு 40 சதவீத இழப்பீடு வழங்கவும், கெயில் நிறுவனம் எரி வாயு கொண்டு செல்ல விவசாய நிலங்களில் குழாய் பதிக்க எந்த தடையும் இல்லையென்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தே.மு.தி.க. சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. வி.எஸ்.சந்திரகுமார் மற்றும் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் ஆகியோர் சார்பில் தே.மு.தி.க. வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி நேற்று (6-ம் தேதி) உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''நாங்கள் பாதிக்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த விவசாய குடும்பங்களை சேர்ந்தவர்கள். எரிவாயு குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் திட்டத்துக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு விவசாயிகளுக்கு நீதியை மறுப்பதாக உள்ளது.

இந்த தீர்ப்பு தமிழகத்தில் விவசாயிகள் இடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த தீர்ப்பை அமல்படுத்துவதால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்படும். இந்த நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு விவசாயிகள் தரப்பில் உள்ள நியாயம் சரியாக விசாரிக்கப்படவில்லை. இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால் நீதி பிறழ்ந்துபோகும் துரதிருஷ்டமான நிலை ஏற்படும்.

இந்த ஆபத்தான எரிவாயு குழாய்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்வது தான் பாதுகாப்பாக அமையும். எனவே, விவசாயிகளுக்கு முற்றிலும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்'' எனக் கூறியுள்ளனர்.