Published:Updated:

செய்திச் சுருக்கம்: ஜனவரி 04, 2012

Vikatan Correspondent
செய்திச் சுருக்கம்: ஜனவரி 04, 2012
செய்திச் சுருக்கம்: ஜனவரி 04, 2012

கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை ‌ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

பின்னர் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில், புயலால் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், "புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணமும், உதவிகளும் வழங்கப்படும். எனவே, அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும்," என்றார்.

புயல் நிவாரணப் பணிகள் பற்றியும், மாவட்டத்தின் தற்போதைய நிலை, மக்களின் பிரச்னைகள் குறித்தும் கடலூர் மாவட்ட கலெக்டர் அமுதவல்லி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

*

சிறுவாணி நீர் பங்கீடு ஒப்பந்தத்தைப் போலவே, முல்லைப் பெரியாறில் புதிய அணையின் நிர்வாகத்துக்கு தமிழகம், கேரளா மற்றும் மத்திய அரசு ஆகிய மூன்று தரப்புகளையும் உள்ளடக்கிய கூட்டுக் குழு அமைக்கவும், அதன்படி செயல்படவும் தயாராக இருக்கிறோம் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.

*

தூத்துக்குடியில் சேதுலட்சுமி என்ற பெண் டாக்டர் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

*

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி புதன்கிழமை பார்வையிட்டார்.

புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, கடலூர் பகுதிகளுக்கு திமுக அறக்கட்டளை சார்பாக 50 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், தமிழகத்துக்கு தேவையான நிதியுதவியை வழங்குமாறு மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

*


ராமேஸ்வரம் பகுதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணமல் போன 4 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

*

வெளிநாட்டு இந்திய தொழிலாளர்களுக்கு காப்பீடு மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

*

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் ராணுவத்தினருக்கு தற்போது வழங்கப்படும் தொகுப்பூதியத்தை 1500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

*

நுகர்வோர் நலன் கருதி, தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை கட்டாயமாக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

*

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பழங்குடி இனப் பெண்கள் 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

*

தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பதிவான புகாரை தொடர்ந்து, உத்தரபிரதேச முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாபுசிங் குஷ்வாகா வீடு உள்பட 60 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

*

மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 56 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தது. நிஃப்டி 15 புள்ளிகள் சரிந்திருந்தது.

*

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,582 ரூபாயாக இருந்தது.

*

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

*

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில், 4 விக்கெட் இழப்புக்கு 482 ரன்கள் குவித்திருந்தது.

தற்போது, ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் முன்னிலையில் உள்ளதால், அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு மிகுதியாகவுள்ளது.

*