Published:Updated:

கனிமொழி...

காட்டிக் கொடுத்தவரும் காலில் விழுந்தவரும்!ப.திருமாவேலன்

கனிமொழி...

காட்டிக் கொடுத்தவரும் காலில் விழுந்தவரும்!ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

சென்னை சி.ஐ.டி. காலனியில் இருந்து டெல்லி சி.பி.ஐ. கஸ்டடிக்கு இடம் பெயர்ந்துள்ளார் கனிமொழி! மே 6-ம் நாள் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நின்ற கனிமொழி, 'நான் நிரபராதி’ என்றார். 14-ம் தேதி, 'கனிமொழிக்கு முன் ஜாமீன் கிடைக்குமா?’ அல்லது 'சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா?’ என்று தெரியும். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் மறுநாள் கனிமொழி இருக்கப்போவது சென்னையிலா, சிறையிலா? அனல் தகிக்கும் காட்சிகளில் சில இங்கே...

 'என் மகளைக் காப்பாத்த எனக்குத் தெரியும்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

னிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதில் இருந்தே, துடித்துக்கொண்டு இருக்கிறார் ராஜாத்தி அம்மாள். கலைஞர் டி.வி-யில் 60 சதவிகிதப் பங்குகளை வைத்து இருந்த தயாளு அம்மாளின் பெயர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வரிசையில் வராமல், சாட்சிகளில் ஒன்றாக மாறிப்போனது இவரது கோபத்தை இன்னும் தூண்டியது. ''அவங்களைக் காப்பாத்திட்டு என் மகளைக் கைவிட்டுட்டீங்க!'' என்று காரணங்களை அடுக்கி ராஜாத்தி கதறியபோது, கருணாநிதியால் பதில் சொல்ல

கனிமொழி...

முடியவில்லை. ''பிரதமர்கிட்ட பேசுங்க... சோனியாகிட்ட சொல்லுங்க...'' என்று அவர் சொன்னபோது, ''எல்லாமே கை மீறிப் போயிடுச்சு. அவங்க நம்ம பேச்சைக் கேட்க மாட்டாங்க'' என்றுதான் கருணாநிதியால் சொல்ல முடிந்தது. தி.மு.க-வின் உயர்நிலை செயற்குழுவை கருணாநிதி கூட்டியபோதுகூட ராஜாத்தியைத் திருப்திப்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் பிறகுதான் 'என் மகளைக் காப்பாத்த எனக்குத் தெரியும்’ என்று ராஜாத்தி சொன்னதாகச் சொல்கிறார்கள். அவர் டெல்லி கிளம்பும் முன் சொன்ன வார்த்தைகள் இவை.

''நான் அந்த வீட்டுக்கே போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது!'' என்று கருணாநிதியே மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நிலைமை தீவிரமாகிவிட்டது. கனிமொழி டெல்லி புறப்பட்டபோதும், அதே நாள் மாலையில் ராஜாத்தி புறப்பட்ட போதும் கருணாநிதி உண்மையில் கலங்கித்தான் போனார். அவரது இத்தனை ஆண்டு வாழ்க் கையில் சந்தித்த மிக மோசமான நாள் அந்த 'மே-4’ ஆகத்தான் இருக்கும். இவரே போன் செய்ய... அவர்களில் ஒருவர் எடுக்கவில்லை. ''என்னை யாருமே நம்பலையா?'' என்று சொல்லி வெம்பிப்போனாராம் கருணாநிதி.

ராஜாத்தியும் கனிமொழியும் இல்லாத அந்த வீட்டுக்குள் நுழையும்போது, மனசுக்குள் 'வெறுமை’ மட்டுமே நிறைந்து இருக்கும்!

''எங்கள் குடும்பத்தில் பிரச்னை இல்லை!''

கனிமொழி...

ஆ.ராசாவைக் கைது செய்தது முதலே, ''இதுல நிச்சயமா என்னையும் மாட்டி விடுவாங்க!'' என்று கனி மொழியே சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால், குற்றப் பத்திரிகையில் தன் பெயரைச் சேர்ப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. ''தந்தையாக இருந்து எனக்காக நீங்கள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. தலைவராக என்ன முடிவு எடுத்தாலும் ஏற்பேன்!'' என்று அண்ணா அறிவாலயத்தில் பலரும் இருக்க கருணாநிதியிடம் கனிமொழி சொன்னார். தன்னைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை கருணாநிதி எடுக்க முடியாத அளவுக்கு சதி வலை பின்னப்பட்டுவிட்டதை உணர்ந்ததால் தான், கனிமொழி அப்படிச் சொன்னார்.

ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் தயாநிதி மாறன் என்றால் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததுதான். ராஜாத்தி, கனிமொழியுடன் நெருக்கம் காட்டி வந்த அழகிரியும் விலக ஆரம் பித்தார். அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கும் தடை போட்டார் அழகிரி. ஸ்டாலினோ, வெளிப்படையாகப் பேச மாட்டார். கருணாநிதி சொல்வதற்கு எல்லாம் தலையாட்டிவிட்டு, அதற்கு மாறாக மனசுக்குள் நினைப்பவர் ஸ்டாலின். கனிமொழியின் வளர்ச்சி பிடிக்காதவர்,  கருணாநிதியின் மூத்த மகள் செல்வி. இவர்கள் அனைவருமே தங்கள் தாய் தயாளு அம்மாளுக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்பதில் காட்டிய அக்கறையை, கனிமொழி விஷயத்தில் காட்டவில்லை. அதுபற்றி, கனிமொழியும் கவலைப்படவில்லை. டெல்லி சென்ற அவரிடம், ''இந்த விவகாரம் காரணமாக உங்கள் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா?'' என்று ஒரு நிருபர் கேட்டார். ''எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று மையமாகப் பதில் அளித்தார் கனிமொழி.

கருணாநிதியின் குடும்பம் மீண்டும் பிளவுபட்டு இருப்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது!

காட்டிக் கொடுத்தவரும் காலில் விழுந்தவரும்!

கனிமொழி...

மார்ச் மாதம் குற்றப் பத்திரிகை வாங்க வந்த ஆ.ராசா, கறுத்துப்போய் ஆளும் மெலிந்து கசங்கிய சட்டையில் வந்ததாக டெல்லி நிருபர்கள் சொன்னார் கள். ஆனால், மே 6-ம் தேதி ஆ.ராசா அப்படி இல்லை. கவலையற்ற முகத்துடன் கொஞ்சம் புஷ்டியாகக் காணப்பட்டார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அன்றுதான் கனிமொழியும் ஆ.ராசாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். மீடியாவுக்குப் பயந்து, முன்னதாகவே தனது கணவர் அரவிந்தனுடன் வந்துவிட்ட கனிமொழி... ஆ.ராசாவின் வருகைக்காகக் காத்திருந்தார். வந்ததும் அவரது முகத்தைப் பார்த்தார். இருவருமே லேசாகச் சிரித்துக்கொண்டார்கள். இந்த பார்வைப் பரிமாற்றத்துக்குப் பிறகு, பேசிய கனிமொழி யின் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி... ஆ.ராசாவை  வார்த்தைகளால் குத்தியது எதிர்பாராத திருப்பம்!

''ஸ்பெக்ட்ரம் வழக்கின் சதிக் குற்றச்சாட்டுக்கு ஆ.ராசாதான் பொறுப்பு. கனிமொழிக்கு எந்தப் பங்கும் இல்லை. டைனமிக்ஸ் குரூப் நிறுவனத்தில் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ஆ.ராசா மூலமாகப் பணப்பரிமாற்றம் நடந்ததாகநாம் யூகித்தாலும், எந்த ஓர் ஆவணத்திலும் கனி மொழி கையெழுத்து இடவில்லை. ஆ.ராசா வின் தூண்டுதலின் பேரில், கலைஞர் டி.வி-க்குப் பணப் பரிமாற்றம் நடந்து இருந் தாலும், கனிமொழி செய்த குற்றம் என்ன? அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே!'' என்று போனது ராம்ஜெத்மலானியின் வாதம்.

''ராசா குற்றவாளி என்று நீதிமன்றம் சொல்லட்டும்'' என்று சொன்னவர் கருணாநிதி. ஆனால், அதை கனிமொழியின் வக்கீல் சொன்னபோது ஆ.ராசா என்ன நினைத்து இருப்பார்? அதனால்தான், மதிய உணவு இடைவேளையில் ராசாவைச் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தார் கனிமொழி. பரஸ்பர நட்பு விசாரிப்புகளுக்குப் பிறகு, ''நான் யாருக்கும் எந்தத் துரோகமும் பண்ண மாட்டேன்'' என்று ஆ.ராசா சொன்னதாகச் சொல்கிறார்கள். ''ராம்ஜெத்மலானியின் வாதத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!'' என்று ஆ.ராசாவுக்கு கருணாநிதி சார்பில் ஆறுதல் சொல்லப்பட்டு உள்ளதாம்.

அடுத்த நாள், ராஜாத்தி அம்மாளும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். ராஜாத்தியைப் பார்த்ததும் எழுந்து... அவரின் காலைத் தொட்டு ராசா வணங்கினாராம். மரியாதை நிமித்தமா... வக்கீல் வாதம் ஏற்படுத்திய கலக்கமா? தெரியவில்லை!

மே 11, 12, 13, 14, 15, 16...

கனிமொழி...

''கனிமொழி விஷயத்தில் மே 14-ம் தேதி தீர்ப்பு சொல்வேன்'' என்று நீதிபதி ஓ.பி.சைனி சொன்னதைக் கேட்டதுமே... 'தமிழகத் தேர்தலைப் பார்த்துத்தான் தீர்ப்பு சொல்லப்போகிறாரா?’ என்று பெரும்பாலோர் கருத்து சொன்னார்கள். ஆனால், உண்மைக் காரணம் அது அல்ல.

6, 7 தேதிகளில் விவாதம் நடந்தது. 12-ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி சொன்னார். 12, 13 தேதிகளில் அமலாக்கப் பிரிவு சம்மன் இருப்பதால், ஆஜராக முடியாது என்று கனிமொழி தரப்பில் சொல்லி... 16-ம் தேதி தீர்ப்பு வழங்குங்கள் என்றார்கள். ஆனால், அதை ஏற்காத சி.பி.ஐ. வக்கீல் யு.யு.லலித் 11-ம் தேதி தீர்ப்பு அளியுங்கள் என்றார். உடனேயே இரண்டு பேருக்கும் பொதுவாக 14-ம் தேதியைக் குறித்தார் நீதிபதி சைனி. எனவே, நீதிபதி, தமிழகத் தேர்தலை மனதில் வைத்து இந்தத் தேதியைக் குறிக்கவில்லை என்று தெரிகிறது. அதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்றும் நீதிபதி சொன்னது, கனிமொழி மீதான குற்றச்சாட்டு சாதாரணமானது அல்ல என்பதையும் உணர்த்துகிறது.

'9, 10 தேதிகளில் சென்னை சென்று எங்களது ஆடிட்டரைக் கலந்துஆலோசிக்க வேண்டும்’ என்று கனிமொழி தரப்பு கேட்டுக்கொண்டபோது, நீதிமன்றம் காட்டிய கறார் தன்மை கவனிக்கத்தக்கது!

செம்மொழியான தமிழ் மொழியும் சி.பி.ஐ. வாசலில் கனிமொழியும்!

கனிமொழி...

ருணாநிதி தனது வாழ்நாள் சாதனையாகச் சொல்வது தமிழுக்குத் தரப்பட்டுள்ள செம்மொழி மரியாதையைத்தான். அதற்குப் பிறகு, ஆண்டுதோறும் மத்திய அரசு சார் பில் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங் கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் தரப்படவில்லை. ஆனால், அதை மொத்தமாக மே 6-ம் தேதி கொடுக்கலாம் என்று முடிவு எடுத்த 'வில்லங்கமான ஆள்’ யார் என்று தெரியவில்லை!

கனிமொழி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நின்று கொண்டு இருந்த நேரத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பரிசை வழங்கிக்கொண்டு இருந்தார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல். ராசாவுக்கு அடுத்து தொலைத் தொடர்புத் துறையைக் கைப்பற்றிய கபில்சிபல் உடன் இருந்தார். ஆனால், அந்த இடத்தில் உண்மையில் இருந்துஇருக்க வேண்டிய கருணாநிதி... சென்னையில் உட்கார்ந்து உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதிக்கொண்டு இருந்தார்.

'டெல்லி நீதிமன்றத்தில் என் இளைய மகள் கனிமொழி நிறுத்தப்பட்டு உள்ள இந்த நேரத் தில் இதை எழுதுகிறேன்’ என்று செம்மொழி அந்தஸ்துக்கு எடுத்த முயற்சிகளை பக்கம் பக்கமாகப் பட்டியலிட்ட கருணாநிதி, 'எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல, காலமும் இட மும்தான் போதவில்லை’ என்று முடித்து மு.க. என்று கையெழுத்துப் போட்டார்.

அவர் கவலைகளை எடுத்துச் சொல்ல காலமும் இல்லை... இடமும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism