Published:Updated:

கரும்பு டன்னுக்கு ரூ. 100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது: கருணாநிதி

Vikatan Correspondent
கரும்பு டன்னுக்கு ரூ. 100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது: கருணாநிதி
கரும்பு டன்னுக்கு ரூ. 100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது: கருணாநிதி

சென்னை, ஜன. 7: திமுக ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரும்பு டன்னுக்கு ரூ. 100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது: கருணாநிதி

கரும்புக்கான ஆதார விலை முதல் கட்டமாக ரூ. 2,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்காகவே முதல் கட்டமாக ரூ. 2,100 என அறிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில், கரும்பு உற்பத்தி 475.5 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்படும் என்றும், ஒரு லட்சம் ஹெக்டேரில் கரும்பு பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 342.5 லட்சம் டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி நடப்பாண்டில் 400 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜெயலலிதா இப்போது தெரிவித்துள்ளார்.2009 திமுக ஆட்சியில் டன்னுக்கு ரூ. 1,437.50 வழங்கியபோது டன்னுக்கு ரூ. 2,500 வழங்க வேண்டும் என அவர் அறிக்கை வெளியிட்டார்.

2001-06 அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நிர்ணயித்த விலையை மட்டுமே வழங்கியதை விவசாயிகள் மறக்க மாட்டார்கள். திமுக ஆட்சியில் 2006-07-ல் டன்னுக்கு ரூ. 1,024-ம், 2007-08-ல் ரூ. 1,034-ம், 2009-10-ல் ரூ. 1,650-ம், 2010-11-ல் ரூ. 2,000-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மத்திய அரசு நிர்ணயம் செய்ததைவிட ரூ. 350 வரை கூடுதலாக திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்போது அதிமுக ஆட்சியில் டன்னுக்கு ரூ. 100 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ. 2,500 கூட வழங்காமல் தனியார் உரிமையாளர்களுக்கு சாதகமாக விலை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். டன்னுக்கு ரூ. 3,000 வழங்காவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு ஜெயலலிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.