Published:Updated:

அணை பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த தயார்: உம்மன்சாண்டி அறிவிப்பு

Vikatan Correspondent
அணை பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த தயார்:  உம்மன்சாண்டி அறிவிப்பு
அணை பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த தயார்: உம்மன்சாண்டி அறிவிப்பு

திருவனந்தபுரம், ஜன.8:  முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி அறிவித்து உள்ளார்.

அணை பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த தயார்:  உம்மன்சாண்டி அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக நேற்று திருவனந்தபுரத்தில் தமிழக பத்திரிகையாளர்களுடன் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி 2 மணி நேரம் கலந்துரையாடினார். அப்போது  கூறியதாவது:-

முல்லைப் பெரியாறு பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள கேரள அரசு தயாராக உள்ளது. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருசில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அவை தடுத்து நிறுத்தப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது. 116 ஆண்டுகள் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டி கேரள மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று கூறப்படும் புகாரை மறுக்கிறேன். தமிழ்நாட்டில் 5 மாவட்ட மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறில் இருந்து தற்போது வழங்கப்படும் அதே அளவு தண்ணீரை எந்த விதத்திலும், எந்த நேரத்திலும் குறைவின்றி வழங்க கேரள அரசு உறுதி அளிக்கிறது. `கேரளாவுக்கு பாதுகாப்பு; தமிழகத்துக்கு தண்ணீர்' என்ற அடிப்படையில் புதிய அணை கட்ட கேரளா விரும்புகிறது.

புதிய அணை கட்டப்பட்டால் உரிய தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம். புதிய அணை கட்டப்பட்ட பிறகு தான் தற்போது உள்ள அணை செயல்படாத நிலை ஏற்படும். எனவே ஒரு நாள் கூட இடைவெளி இல்லாமல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை அளிக்கிறேன். இது தொடர்பாக எந்த உத்தரவாதம் அளிக்கவும், ஒப்பந்தம் செய்து கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இரு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் அல்லது மத்திய அரசை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தமும் செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக கேரள சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றவும், சுப்ரீம் கோர்ட்டில் வாக்குறுதி அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரளாவின் உரிமையை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

1979-ம் ஆண்டு முதல் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான கேரளாவின் கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். அதிகாரிகள் மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட எங்களது கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம்-கேரள மக்களிடையே தொடர்ந்து நல்லுறவு நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதனால்தான் தமிழ்நாட்டின் சம்மதத்துடன் புதிய அணை கட்ட விரும்புகிறோம்.

கடந்த ஆண்டில் மட்டும் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் 26 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 4 முறை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால், 5 மாவட்டங்களில் வசிக்கும் 50 லட்சம் மக்களின் பாதுகாப்பை கருதி கேரளா புதிய அணை கட்ட விரும்புகிறது. ரூர்க்கி ஐ.ஐ.டி. நிபுணர்களும் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது அல்ல என்று கூறி இருக்கிறார்கள்.

ஒருவேளை முல்லைப்பெரியாறு அணை உடைந்தாலும் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணை தாங்கிக்கொள்ளும் என்ற தமிழகத்தின் வாதம் அடிப்படை இல்லாததும், தேவை இல்லாததும் ஆகும். இடுக்கி அணையை நாங்கள் கட்டும் போது முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் முழுவதையும் இந்த அணை தாங்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் அதை வடிவமைத்து கட்டவில்லை. மேலும் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் இடுக்கி அணையை சென்று அடைய ஆகும் நேரம் குறித்து பல்வேறு கணித மதிப்பீடுகள் கூறப்படுகின்றன. ஆனால் அணை உடைந்து வெளியேறும் தண்ணீரின் வேகம் எந்த கணித மதிப்பீட்டுக்குள்ளும் அடங்காது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளவும், பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலும், அதன்பிறகு மந்திரிகள் மட்டத்திலும் பேசலாம். பின்னர் இரு மாநில முதலமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்த யோசனையை கேரளா ஏற்றுக்கொண்டது. ஆனால் தமிழ்நாடு இந்த யோசனையை ஏற்க மறுத்து விட்டது.

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால் 5 ஆண்டுகளில் புதிய அணை கட்டி முடிக்கப்படும். எந்த ஒரு பிரச்சினை ஆனாலும் தமிழ்நாட்டுடன் நல்லுறவுடன் இருக்கவே கேரளா விரும்புகிறது. முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அந்த சம்பத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அய்யப்ப பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களின் வசதிக்காக வாகன நிறுத்த மையம், தகவல் மையம், தங்கும் விடுதிகள் போன்றவை அமைக்க சபரிமலை நிலைக்கல்லில் தென் மாநிலங்களுக்கு தலா 5 ஹெக்டேர் வீதம் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.