Published:Updated:

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!
ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை  வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், ஸ்ரீஹரன் என்கிற முருகன், சுதேந்திரராஜா என்கிற சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும்  விடுதலை செய்வதற்கு முடிவு எடுத்திருக்கும் தமிழக அரசு, அது குறித்து மத்திய அரசிடம்  கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது.

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் தமிழக அரசியலில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால்  தமிழக அரசின் இந்த கடிதம்,  தேர்தல் ஆதாய நடவடிக்கையாக இருக்குமோ என்று, அ.தி.மு.க.வினர் தவிர அனைவரும் சந்தேகிக்கிறார்கள். அதில் வியப்பேதுமில்லை. அரசியல் காரணங்களுக்காக இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில்,  முந்தைய காலக்கட்டத்தில் ஜெயலலிதா எடுத்திருக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தேர்தல் நேர நடவடிக்கையாகத்தான் அமைந்திருந்தன என்பதை புறந்தள்ளிவிட முடியாது.

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

''விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலை குற்றவாளிகளை முதலமைச்சர் கருணாநிதி மரண தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சுகள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அவர் இதையெல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன்" என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது  2008-ம் ஆண்டு,  அக்டோபர் மாதம் 23ம் தேதி பேசியவர்தான் ஜெயலலிதா. அந்த வகையில் தற்போதைய கடிதம் எழுதப்பட்ட நேரத்தையும் தேர்தல் நடவடிக்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதில் தவறேதும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா அல்லது மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற வழக்கில், சி.பி.ஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் முன் அனுமதி பெற்றே குற்றவாளிகளை விடுவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய  அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 161 வழிவகுக்கிறது. இதைப் பயன்படுத்தி, யாரையும் கேட்காமல் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அதனை செய்யாமல், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 435-வது பிரிவின் கீழ் விடுதலை செய்யும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், ஜெயலலிதா என்ன நினைக்கிறார் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே எழுதப்பட்ட கடிதங்களின் மீது மத்திய அரசின் தற்போதைய நிலை என்னவென்று மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டிருப்பதை பார்த்தால்,  இதில் மறைமுக அரசியல் ஒளிந்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலரை கடிதம் எழுத வைத்திருப்பதன் மூலம், முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாகவே ராஜீவ் காந்தி கொலை வழக்கை சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தி இருக்கிறாரோ என்றும் யோசிக்க வைக்கிறது.

தமிழக அரசின் கடிதத்தை எப்படி பார்க்கலாம்?


தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கூற முடியும். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிக்கு யார் நம்முடன் சேருவார் என்று தவித்து வரும் அக்கட்சிக்கு தமிழக அரசின் கடிதம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. ஒன்று, கடிதத்தின் மீது தற்போதைக்கு முடிவு எடுக்காமல் தள்ளிப் போடலாம் அல்லது விடுவிக்க முடியும் அல்லது  இயலாது என்று எதையாவது கூற வேண்டிய நெருக்கடி. எந்த முடிவாக இருந்தாலும், அது சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க.விற்கும், அதில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கும் பலத்த எதிர்ப்பை உருவாக்கும். மத்திய அரசு சாதகமான முடிவு எடுக்குமேயானால், அதன் முழு பலனும் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்குமா என்றால் கிடைக்காது. எல்லாம் என்னால்தான், எனது அரசால்தான் என்று ஜெயலலிதா அறிக்கைவிட்டே, முழு பலனையும் அறுவடை செய்துவிடுவார்.

அதேநேரத்தில், பாதகமான முடிவு எடுத்தால், பாரதிய ஜனதாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. காரணம், அவர்கள் ஒன்றும் தற்போதைய சூழலில் தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவது இல்லை. என்றாலும், வளர்ந்து வரும் பாரதிய ஜனதாவுக்கு தமிழர்களிடையே  கசப்புணர்வையும், ஒருவித வெறுப்புணர்வையும் ஏற்படுத்த உதவியாக இருக்கும். தே.மு.தி.க இதோ வந்துவிடும், அதோ வந்துவிடும் என்று கூறியும், பா.ம.க.வை எப்படியும் தன்வசப்படுத்தி விடலாம் என்று கணக்குப் போட்டு வரும் பா.ஜ.க.வுக்கு, தமிழக அரசின் கடிதம் பேரிடியாக அமைந்திருப்பதை மறுப்பதிற்கில்லை.

ஜெயா ஏன் ஜெயிக்கிறார்? - ஒரே ஒரு கடிதம்... அத்தனை கட்சிகளுக்கும் 'செக்'!

மற்றொன்று, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கும் இந்த கடிதம் மூலம் ஜெயலலிதா 'செக்' வைத்திருக்கிறார் என்றே பார்க்க வேண்டும். இவர்கள் 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. இப்போது 7 பேரின் விடுதலைக்கு ஜெயலலிதா அரசு கடிதம் எழுதி இருப்பதன் மூலம் அதிமுக பயனடைந்துவிடுமோ என்ற பதை பதைப்பில், தன் பங்கிற்கு திமுகவும் அவர்களை விடுவிக்க கோரிக்கை விடுத்திருக்கிறது. காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இப்போது திமுக என்ன செய்யும்?  ஏற்கனவே, இலங்கைத் தமிழர் விவகாரத்தால், படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸின் எதிர்ப்பை,  தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக திருப்பிவிட ‌தமிழர் அமைப்புகளும், ஆளும் அ.தி.மு.க.வும் பயன்படுத்திக் கொள்ளும். இதை உணர்ந்துதான், தமிழக அரசின் கடிதம் எழுதப்பட்டதும், ஒரு சில மணி நேரத்தில், 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது ஒருபுறமிருக்க, 7 பேரின் விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வைகோ, திருமாவளவனோடு கைக்கோர்த்திருக்கும் இடதுசாரி கட்சிகள், தங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை. மாறாக, இது தமிழக அரசின் அரசியல் நடவடிக்கை என்று பொத்தாம் பொதுவாக வைகோ, திருமாவளன் ஆகியோர் கூறியிருக்கிறார்கள். பிள்ளையையும் கிள்ளிவிட்டு. தொட்டிலையும் ஆட்டணும் என்பதுதான் இடது சாரிகளின் நோக்கம்.  இதே கம்யூனிஸ்ட் கட்சிகள்தான், 7 பேரையும் விடுவிக்க முடிவு எடுத்து சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியோடு  வெளியேறிய கதையும் நடந்தது உண்டு.  இவர்களுக்கு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் என்ன கொள்கை இருக்கிறது ? என்று மக்கள் நலக் கூட்டணியை பார்த்து தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா கேள்வி கேட்கலாம்.  இப்படி இந்த கடிதம் மூலம் மத்திய அரசு, பா.ஜ.க, தி.மு.க, காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி என அனைத்துக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய 'செக்' வைத்திருக்கிறார் ஜெயலலிதா.

இதுதவிர தமிழக அரசின் முடிவு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி, பாரதிய ஜனதா அரசு பக்கம் பந்தை தள்ளிவிட்டிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, 3 மாத காலமாக அமைதியாக இருந்துவிட்டு தற்போது அரசு திடீரென முடிவு எடுத்திருப்பது ஏன் ? என்றும் வினவியிருக்கிறார். (கடந்த ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.) இதேகேள்விதான் நடுநிலையாளர்களிடமும் எழுந்திருக்கிறது.

தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கை,  தேர்தல் கால நடவடிக்கைதான் என்ற  எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.  எது எப்படியோ ஜெயலலிதாவின் இந்த கடிதத்தையடுத்து உள்துறை அமைச்சகம் 7 தமிழர்களின் விடுதலை செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. ஜெயாவின் இந்த நடவடிக்கை தேர்தல் கால நடவடிக்கையாக இருந்தால் கூட,  கால் நூற்றாண்டு காலத்தை, இளமை பருவத்தை சிறை கொட்டடியில் இழந்திருக்கும் 7 தமிழர்களும் விடுவிக்கப்படுவார்களேயான‌ல், அது மகிழ்ச்சிக்குரியதே.

-ஜி.எஸ்.பாலமுருகன்

( மயிலாடுதுறை)


 

அடுத்த கட்டுரைக்கு