Published:Updated:

கவுன்சிலர்கள் உட்பட 6 பேர் கட்சியிலிருந்து நீக்கம்! - குடியாத்தம் திமுக-வில் என்ன நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முரசொலியில் வெளியான அறிவிப்பு
முரசொலியில் வெளியான அறிவிப்பு

ஒன்றியத் தலைவர் பதவிக்கு ஆதரித்தால், துணைத் தலைவர் பதவியைத் தருவதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். அதன்படி, தி.மு.க மாவட்டச் செயலாளரின் உறவினர் சத்யானந்தத்துக்கு அ.தி.மு.க சுயேச்சை கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக அணைக்கட்டு பாபு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். துணைத் தலைவர் பதவி காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதை தி.மு.க-வினர் விரும்பவில்லை. தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் கொட்டிவருகிறார்கள். அதேபோல், வேலூர் மாவட்டத்திலிருக்கும் ஏழு ஒன்றியத் தலைவர் பதவிகளையும் தி.மு.க-வே கைப்பற்றியிருக்கிறது. இதில், குடியாத்தம் ஒன்றியத்தில் தி.மு.க., அ.தி.மு.க கூட்டணி அமைத்து தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஒன்றியத்தில் 31 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க கூட்டணி-19, அ.தி.மு.க கூட்டணி-7, சுயேச்சை-3, பா.ம.க-2. ஒன்றியத் தலைவர் பதவிக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் நந்தகுமாரின் உறவினர் சத்யானந்தம் ஓர் அணியாகவும், அனங்காநல்லூரைச் சேர்ந்த தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார் மற்றோர் அணியாகவும் களமிறங்கினர்.

தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமார்
தி.மு.க மாவட்டச் செயலாளர் நந்தகுமார்

நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், மாவட்டச் செயலாளரின் உறவினர் சத்யானந்தத்துக்கு எதிராக 15 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். ஆனாலும், அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவுடன் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஒன்றியத் தலைவர் பதவியைப் பிடித்தார் தி.மு.க-வின் சத்யானந்தம். இந்த நிலையில், எதிர்த்து வாக்களிக்கக் காரணமாக இருந்த தி.மு.க-வின் மற்றோர் அணியின் நிர்வாகிகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கவுன்சிலரான எதிரணி வேட்பாளர் ரஞ்சித்குமார், அவரின் தந்தை சக்கரவர்த்தி, குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) கள்ளூர் ரவி, குடியாத்தம் தெற்கு ஒன்றியச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றியத் துணைச் செயலாளர் மனோஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகிய ஆறு பேரும்தான் `முரசொலி’யில் கட்டம் கட்டப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் வெளியாகியுள்ளது.

உள்விவரம் அறிந்த குடியாத்தம் தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``ஒன்றியத் தலைவர் பதவிக்கு இருமுனைப் போட்டி நிலவியது. கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமாரும், அவரின் தந்தை சக்கரவர்த்தியும் பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஆதரவாளர்கள்தான். மத்திய கூட்டுறவுத் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுவின் முன்னாள் துணைத் தலைவராகவும் சக்கரவர்த்தி பதவி வகித்துள்ளார். இந்த முறை தனது மகனை ஒன்றியத் தலைவராக்குவதற்காக முயன்றார். குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பிலிருந்த கள்ளூர் ரவியும் ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துவிட்டார். கள்ளூர் ரவி வெற்றிபெற்றிருந்தால், ஒன்றியத் தலைவர் பதவிக்கு அவரும் முயற்சி எடுத்திருப்பார். கள்ளூர் ரவி குடியாத்தம் எம்.எல்.ஏ அமலுவின் கணவருடைய உடன் பிறந்த அண்ணன். கள்ளூர் ரவி பின்னணியுடன் தி.மு.க கவுன்சிலர்கள் சிலர் ரஞ்சித்குமாரை ஆதரித்தனர்.

முரசொலியில் வெளியான அறிவிப்பு
முரசொலியில் வெளியான அறிவிப்பு

மாவட்டச் செயலாளரின் உறவினர் சத்யானந்ததுக்கு தி.மு.க கவுன்சிலர்களின் முழு ஆதரவும் கிடைக்கவில்லை. இதனால், அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்களின் ஆதரவையும் நாடினார் சத்யானந்தம். ஒன்றியத் தலைவர் பதவிக்கு ஆதரித்தால், துணைத் தலைவர் பதவியைத் தருவதாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். அதன்படி, சத்யானந்தத்துக்கு அ.தி.மு.க., சுயேச்சை கவுன்சிலர்கள் வாக்களித்தனர். எதிரணியைவிட கூடுதலாக ஒரு வாக்கு கிடைத்ததால் சத்யானந்தம் ஒன்றியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுயேச்சை கவுன்சிலர் அருண்முரளி துணைத் தலைவராக வெற்றிபெற்றார். துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலை தி.மு.க-வைச் சேர்ந்த ரஞ்சித்குமார் உட்பட 12 கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். மாவட்டச் செயலாளர் தரப்புடனான மோதல் விவகாரத்தில்தான் ஒன்றிய கவுன்சிலர் ரஞ்சித்குமார், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஆறு பேரும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு