
தொடக்கத்திலிருந்தே அறிவாலயத்தின் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வருத்தம் இருந்தது.
சிறகுகளைப் படபடத்தபடி என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, சூடாக வடையைத் தட்டில் நிரப்பிவிட்டு, நமது கவர் ஸ்டோரியை நீட்டினோம். வடையை மென்றபடியே கட்டுரையை எடைபோட்டவர், “கச்சிதம். ஜெயா ப்ளஸ் சேனலைத் தவிர மற்ற சேனல்களில் சசிகலா நேரலையை ‘கட்’ செய்யச் சொல்லிவிட்டார்களாமே... கேபிள் டி.வி தரப்பிலும் சொல்லிக் கடும் நெருக்கடியைக் கொடுத்ததால், மதியத்துக்கு மேல் அரசு கேபிள் டி.வி-யில் பல இடங்களில் அந்த சேனலையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆட்சியாளர்களிடம் அந்த அளவுக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல... தி.மு.க கூட்டணியிலும் சீட் பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளால் பீதி ஹெவியாகத்தான் இருக்கிறது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.
“தொடக்கத்திலிருந்தே அறிவாலயத்தின் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு வருத்தம் இருந்தது. தங்களைக் கூட்டணிக்குள் வைத்துக்கொண்டே ஆரம்பத்தில் பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, மனு ஸ்மிருதி விவகாரத்தின்போது தனக்கு ஆதரவாக உடனடியாக ரியாக்ட் செய்யாதது, உதயசூரியன் சின்னத்தில் வி.சி.க வேட்பாளர்களைப் போட்டியிடச் சொன்னது என்று அவர் சந்தித்த சங்கடங்கள் ஏராளம். பா.ம.க-வைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்தில், ‘உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் தயார்’ என்று திருமாவே சொல்லும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது தி.மு.க. இப்போது, ‘பா.ம.க-வுடன் கூட்டணி இல்லை’ என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால், தனிச் சின்னத்தில் போட்டியிடும் முடிவுக்கு மாறிவிட்டாராம் திருமா. ஆனாலும், பதற்றம் தணியவில்லை என்கிறார்கள்.”

“இப்போது எதற்காகப் பதற்றமாம்?”
“தி.மு.க கூட்டணியில் எட்டு தொகுதிகளை எதிர்பார்க்கிறது வி.சி.க. இதற்காக, தாங்கள் போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளின் பட்டியலை தி.மு.க-விடம் அளித்து, அதிலிருந்து எட்டு தொகுதிகளை ‘டிக்’ செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. லிஸ்ட்டைப் படித்துப் பார்த்த தி.மு.க தரப்பு, ‘டிக்’ செய்வதற்கு பதிலாக, 13 தொகுதிகளைத் ‘தர முடியாது’ என்று அடித்துவிட்டதாம். அதில் செய்யூர் தொகுதியும் ஒன்று. திருமா தரப்பில், ‘கூட்டணி தர்மம் என்கிற பெயரில் எங்களின் அடையாளத்தை விட்டுக்கொடுக்க முடியாது. எட்டு தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘நான்கில் உங்கள் சின்னத்திலும், மீதி நான்கில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடத் தயாரா?’ என்று தி.மு.க தரப்பில் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். இதற்கு பதிலேதும் சொல்ல முடியாமல் அப்செட்டில் இருக்கிறது திருமா தரப்பு.”
“ஓஹோ...”
“வைகோவும் தனிச் சின்னத்தில் போட்டியிடும் மனநிலையில்தான் இருக்கிறார். அவர் விரும்பும் தொகுதிகளை ஒதுக்குவதிலும் தி.மு.க முரண்டு பிடிக்கிறதாம். இன்னொரு பக்கம், காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வென்ற தொகுதிகளைக்கூட அவர்களுக்கு மீண்டும் ஒதுக்க அறிவாலயம் விரும்பவில்லை என்கிறார்கள். ‘இங்கேயெல்லாம் தி.மு.க ஸ்ட்ராங்கா இருக்குங்க. வேற தொகுதி எடுத்துக்குறீங்களா?’ என்கிறதாம் தி.மு.க தரப்பு. தி.மு.க தலைவர்களின் இல்லங்களில் மறைமுகமாக நடைபெறும் இந்த சீட் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாததால், கூட்டணிக் கட்சிகள் பதற்றத்தில் இருக்கின்றன. இதில் தெளிவு கிடைக்காததால்தான், முறைப்படியான பேச்சுவார்த்தை ஆரம்பமாகவில்லை என்கிறார்கள். அதேசமயம், சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வாக்குகள் சிதறும் என தி.மு.க தெம்பாகியிருக்கிறது.”

“ம்ம்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பதற்றத்தில் இருக்கிறாராமே?”
“அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்துவரும் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்துவிட்டன. வழக்கை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருக்கிறது நீதிமன்றம். ‘தேர்தலுக்கு முன்பு இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்துவிட்டால், தேர்தலில் போட்டியிட முடியாமல் போய்விடுமோ?’ என்ற அச்சத்தில் தவிக்கிறாராம் ராஜேந்திர பாலாஜி. வழக்கிலிருந்து மீள எடப்பாடி பழனிசாமி தனக்கு உதவவில்லை என்கிற வருத்தமும் பாலாஜிக்கு இருக்கிறது.”
“எடப்பாடிக்கு இருக்கும் பிரச்னைகள் போதாதா... இவர் சுமையை வேறு தனியாகச் சுமக்க வேண்டுமா!”
“முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சசிகலா முகாமுக்குச் செல்லவிருப்பதாக செய்திகள் றெக்கைகட்டின அல்லவா... அது வதந்தி என்கிறார்கள். சசி தரப்பிலிருந்து மணிகண்டனைத் தொடர்புகொண்டது நிஜம்தானாம். ‘நாலு வருஷமா நம்மளை ஓரங்கட்டிட்டாங்க பார்த்தீங்களா... நீங்க நம்ம பக்கம் வரணும்’ என்றதாம் சசி தரப்பு. இதற்கு உடன்பட மறுத்த மணிகண்டன், ‘எல்லோரும் ஒற்றுமையாத்தாங்க இருக்கோம்’ என்று சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டாராம்” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றதிலிருந்தே ராஜீவ் ரஞ்சன் படு பிஸி என்கிறார்கள். வரும் பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னைக்கு வரவிருக்கும் சூழலில், அதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டிருக்கிறார். இந்த விழாவில், மொத்தம் 14-க்கும் மேற்பட்ட திட்டங்களை அறிவிப்பதாக இருந்தது. அவற்றில், ஏழு திட்டங்களை மட்டும் சென்னையில் அறிவிக்கவிருக்கிறாராம் பிரதமர். மற்ற திட்டங்களை, கோவையில் பிரதமர் கலந்துகொள்ளும் விழாவில் அறிவிக்கும் வகையில் மாற்றியிருக்கிறார்கள். கோவை நிகழ்ச்சிக்கு இன்னும் நாள் குறிக்கப்படவில்லை. அரசு விழா முடிந்ததும், மறைமலை நகரில் பொதுக்கூட்டம் நடத்த மாநில பா.ஜ.க-விலிருந்து டெல்லி மேலிடத்தில் நேரம் கேட்டிருக்கிறார்கள். இன்னும் பதில் வரவில்லையாம்.”
“ம்ம்... தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் சண்முகம் என்ன செய்கிறார்?”
“கோட்டையில் சண்முகத்துக்கு முதல்வர் அலுவலகம் அருகே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அமர்ந்திருந்த அதே அறையைத்தான் ஒதுக்கியிருக்கிறார்கள். முதல்வரின் அலுவல்ரீதியான கூட்டங்களில் கலந்துகொள்ளும் சண்முகம், துறைரீதியான சந்தேகங்கள் வரும்போது விளக்கமளிக்கிறாராம். இந்தக் கோட்டைத் தாண்டி அவர் மூக்கை நுழைப்பதில்லை.”
“சரிதான்... அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க வருவது முடிவாகிவிட்டதா?”
“இழு இழுவென இழுக்கிறார்கள்... பிப்ரவரி 6-ம் தேதி மாலை, அமைச்சர் தங்கமணி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பா.ம.க., 600 ஸ்வீட் பாக்ஸ்களை எதிர்பார்த்ததாம். அப்போது, ‘2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது உங்களுக்குக் கொடுத்த 350 ஸ்வீட் பாக்ஸ்கள் வேட்பாளர்களுக்குச் சரியாகப் போகவில்லை என எங்கள் கட்சிக்காரர்கள் சொன்னார்கள். இந்தமுறை உங்கள் வேட்பாளர்களின் தேவைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். ‘பூத் ஏற்பாடு’களை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று ஆளுங்கட்சித் தரப்பில் கூறியிருக்கிறார்கள். இதை தைலாபுரம் ஏற்கவில்லையாம். இதே பிரச்னைதான் தே.மு.தி.க-விடமும் ஏற்பட்டிருக்கிறது. இரு கட்சிகளின் தலைமையுமே ஸ்வீட் பாக்ஸ் எண்ணிக்கையில் விட்டுக் கொடுக்க மறுப்பதால், அ.தி.மு.க கூட்டணியில் அனல் அடிக்கிறது.”

“ஓஹோ... பா.ஜ.க-விலும் ஏதோ அனல் அடிக்கிறது என்கிறார்களே?”
“பா.ஜ.க-வின் துணைத் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலைக்கு மத்திய அரசின் ஒப்புதலுடன் ‘ஒய் ப்ளஸ்’ பாதுகாப்பு அளித்திருக்கிறது தமிழக அரசு. பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகக் காரணம் காட்டி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பது, பா.ஜ.க-வில் மற்ற தலைவர்களிடம் பொருமலை ஏற்படுத்தியிருக்கிறதாம். பா.ஜ.க துணைத் தலைவரான வி.பி.துரைசாமி, தி.மு.க-விலிருந்து தாவியதிலிருந்து அவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தபடி இருக்கின்றனவாம். அதை அவர் தமிழக தலைமைச் செயலாளரிடம் நேரிடையாகச் சொல்லி, பாதுகாப்பு கேட்டும் தரப்படவில்லையாம். இவரைப்போலவே, பா.ஜ.க-வில் வேறு சிலரும் பாதுகாப்பு கேட்டு வரிசைகட்டி நிற்கிறார்களாம். ‘அவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மத்திய அரசுத் தரப்பிடம் பேசி அண்ணாமலைக்கு மட்டும் பாதுகாப்பு அளித்திருப்பது, ஒரே மண்டலத்துக்காரர் என்கிற விசுவாசத்தில்தானா?’ என்று எடப்பாடி மீது கொதிப்பில் இருக்கிறது பா.ஜ.க-வில் ஒரு தரப்பு” என்றபடி, கிளம்ப ஆயத்தமான கழுகார்,
“தி.மு.க-வில் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் புதிதாகச் சுற்றுச்சூழல் அணி உருவாக்கப்பட்டது. இதற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், சமீபத்தில் அந்த அணிக்கு மாநில துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் செல்வமான பெயர்கொண்ட ஒருவரின் நியமனம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அவர், மணல் கொள்ளை மாஃபியாக்களில் முக்கிய நபரின் பிசினஸ் பார்ட்னராம். ‘இவரை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படிச் சுற்றுச்சூழலை பாதுகாப்பீர்கள்?’ என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் கேள்வி எழுப்புவதால், தி.மு.க சுற்றுச்சூழல் அணி விழி பிதுங்குகிறது” என்றபடி சிறகுகள் விரித்தார்.
மூக்கைத் துளைக்குது கரன்சி வாசம்!
கடந்த 15 நாள்களாகத் தமிழகத்தில் கரன்சி வாசம் மூக்கைக் துளைக்கிறது என்கிறார்கள் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள். தேர்தல் நெருங்குவதால் ஆளுங்கட்சி மற்றும் மன்னார்குடி தரப்புக்கு ஹவாலா மூலம் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து கரன்சி கொட்டுகிறதாம். சென்னையைச் சேர்ந்த ‘மார்வாடி பிரதர்ஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு குரூப்தான் இந்தக் காரியங்களை முன்னின்று கனகச்சிதமாக முடித்துக் கொடுக்கிறதாம். இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட துறையினருக்குத் தெரிந்தாலும், மேலிடத்திலிருந்து சிக்னல் கிடைக்காததால், அதிகாரிகள் வெயிட்டிங் என்கிறார்கள்!