Published:Updated:

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!
'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

ள்ளி என்றதும் நம் மனதில் ஒரு சித்திரம் விரியும்... இறுக்கமான கட்டடங்கள், கண்டிப்பான ஆசிரியர்கள், வீட்டுபாடம் என அதன் நினைவுகள் சில அழுத்தங்களை தரும். பெரும்பாலான பள்ளிகள் முன்முடிவுகளை நம்மிடம் திணிப்பவை, நம்மை நம் இயல்பில் சிந்திக்க விடாதவை. நிச்சயம், பள்ளிகள் மீது மட்டும் தவறல்ல, பாடத்திட்டங்களும்தான்.

தனிக்குடும்பமும், கூட்டுக் குடும்பமும், பிறகு நம் கல்வி முறையும்:

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

ஒரு முறை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயத்தை பகிர்ந்தார்.

"வகுப்புல பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது தனிக் குடும்பம்,  கூட்டுக் குடும்பம் பற்றிய சப்ஜெக்ட். பாடப்புத்தகத்தில் தனிக் குடும்பம் என்றால் கணவன், மனைவி மற்றும் அவர்கள் குழந்தைகள் என்றும், கூட்டுக் குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள், தாத்தா, பாட்டி என்றும் இருந்தது.  

நானும் இதை எடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவன், 'ஏன் சார்...  தனி குடும்பத்துல, தாத்தா, பாட்டி இருக்க கூடாதா...? தாத்தா, பாட்டியும் நம்ம கூடத்தானே இருக்கணும்... அவங்கள சேர்க்கிறது எப்படி சார் கூட்டுக் குடும்பம் ஆகும்...?' என்றான்.   

எனக்கு சுருக்கென்று இருந்தது... குழந்தைகள் அவர்கள் இயல்பில் மிக அழகாக சிந்திக்கிறார்கள். ஆனால், நாம்தான் அவர்கள் இயல்பில் குறுக்கிடுகிறோம். தனிக் குடும்பத்தில் தாத்தா, பாட்டிக்கு இடம் இல்லை என்பதை கற்கும் குழந்தைகள் தான், பெரியவர்கள் ஆனதும், அம்மாக்களையும், அப்பாக்களையும் ஹோமில் சேர்க்கிறார்கள்” என்றார்.

ஆம். குழந்தைகளிடம் சீல் படிந்த நம் முன்முடிவுகளை கடத்துகிறோம். பள்ளிகளும், அதன் பாடத்திட்டமும் அவர்களையும் அறியாமல் குழந்தைகளிடம் வன்மத்தை வளர்க்கிறது. பள்ளிகளும், அதன் ஆசிரியர்களும், பாடங்களை குழந்தைகளுக்கு எளிதாக புரிய வைக்கும் facilitator மட்டுமே. ஆனால், இதுபோன்ற எத்தனை பள்ளிகள் இருக்கின்றன. முற்றாக இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இருக்கும் பள்ளிகளும் அதிகம் கட்டணம் வசூலிப்பவையாக இருக்கின்றன. ஏழ்மையான குழந்தைகளுக்கு அங்கு இடமில்லை.

நம்பிக்கையை விதைக்கும் பள்ளி:

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம்  சிங்காரப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கு செல்ல நேர்ந்தது. காலை 9 மணி முதல் 4 மணி வரை இயங்கும் வழமையான பள்ளி  அல்ல அது. அவ்வப்போது சில பயிற்சி பட்டறைகளை நடத்துகிறது. ஆனால், தொடர்ந்து குழந்தைகளுடன், குறிப்பாக கிராமத்து மாணவர்களுடன் இயங்குகிறது. அந்த பள்ளியின் பெயரை கேட்டதும், அந்த பகுதி மாணவர்கள் குதூகலிக்கிறார்கள். ‘குக்கூ’ காட்டு பள்ளி.

பள்ளிக்கு இருபுறமும்  மலைகள், பின்புறம் நீரோடை என்ற அந்த பள்ளியின் நிலவியல் அமைப்பே மனதிற்கு இதமான ஒன்றாக இருக்கிறது. பெங்களூரில் அதிகம் ஊதியம் தந்த மென்பொறியாளர் வேலையை, குழந்தைகளுடன் இயங்க வேண்டும் என்ற நோக்கத்தில் விட்டுவிட்டு வந்த செந்தில்தான் நம்மை அந்த பள்ளிக்கு அழைத்து சென்றார். அந்த பள்ளியை அடைந்தபோது அதிகாலை 4 மணி. அந்த கும்மிருட்டில், இருவரும் ஒரு பாறை மீது உரையாட அமர்கிறோம்.

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

பத்திரிக்கையாளனுக்கே உள்ள குறுகுறுப்பில் சில கேள்விகளை அடுக்குகிறேன். அவர் அமைதியாக, “உங்கள் பல கேள்விகளுக்கு என்னால் பதில் தரமுடியாது.  நாங்கள் வாழ்க்கையை, இயற்கையை நேசிக்க கற்று தருகிறோம். வாழ்க்கை குறித்து நம்பிக்கையை விதைக்கிறோம். என் மகள் நிலா, வார விடுமுறை நாட்களை இங்குதான் கழிக்கிறாள். சுயமாக சிந்திக்கிறாள். இது மட்டும்தான் என் பதிலாக இருக்க முடியும்...” என்கிறார்.

“நீங்கள் காலை, பீட்டர், சிவராஜை சந்தியுங்கள். உங்களின் கேள்விகள் அனைத்திற்கும் அவர்களிடம் விடை இருக்கிறது.”

பொழுது புலர்ந்தது. பீட்டர் மற்றும் சிவராஜுடனான உரையாடல் துவங்கியது. ஜென் துறவிகள், சீடனுக்குரிய பணிவுடன் பதில் கூறுவது போல் பேசுகிறார்கள்.

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

யார் இந்த பள்ளியின் நிறுவனர்...?

“பள்ளியின் நிறுவனர் யார் என்ற கேள்வியே,  மிகவும் வக்கிரமானது. ஆம். பள்ளிக்கு ஒற்றை மனிதர் நிறுவனராக இருக்கும்போது, ஒன்று அது இலாபம் சார்ந்ததாக ஆகிறது அல்லது அவர்களின் சிந்தாந்தத்தை திணிப்பதாக ஆகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. அண்மையில், பள்ளிகான கட்டடம் கட்ட பெரும் பணம் தேவைப்பட்டது. நாங்கள் பெரிதாக யாரிடமும் கேட்கவில்லை, இங்கு இருக்கும் தன்னார்வலர்களே அதை திரட்டி தந்தார்கள்...” என்கிறார் சிவராஜ்.

பீட்டருடனான உரையாடல் நமக்கு சங்கடத்தை தரும். ஆம். அவரின் பணிவும், சிரித்துக் கொண்டே அவர் பேசும் உண்மைகளும், நிச்சயம் நமக்கு சங்கடங்களை தருபவை.

சமூகம் வேறு விதமாக இருக்கிறது. அதை எதிர்கொள்ள கற்றுதராத உங்கள் பயிற்சிகள் எப்படி அவர்களுக்கு பயன்படும்...? அதுவும் நீங்கள் முதல்தலைமுறையாக பள்ளிக்கு செல்லும் கிராமத்து மாணவர்களுடன் இயங்குகிறீர்கள், ஆனால் உங்கள் பயிற்சிகள் பணம், பொருள் இதற்கு எதிராகதானே இருக்கிறது. இது அவர்களை கிராமத்திலேயே தங்க வைத்து விடாதா...? என்று கேள்விகளை பீட்டரிடம் அடுக்குகிறேன்.


“ஆம். சமூகம் வேறு மாதிரியாகதான் இருக்கிறது. மறுப்பதற்கில்லை. ஆனால், நம் சமூகம் வேற்று கிரகவாசிகளால் உண்டானதில்லை அல்லவா...? நீங்களும், நானும்தான் சமூகம்.  பொய்யும், பேராசையும், இயற்கையை அதிகம் சுரண்டுவதுதான் இந்த சமூகத்தின் பண்பாக நீங்கள் கருதுவீர்களானால், நிச்சயம் நாங்கள் அதுபோன்ற பண்புகளை வளர்க்கும் பயிற்சிகளை அளிக்கவில்லை என்பதை நாங்கள் பெருமையாக கூறுவோம்.

நாங்கள் அவர்களுக்கு இயற்கையை நேசிக்க, அதனுடன் உரையாட கற்று தருகிறோம். கற்று தருகிறோம் என்ற வார்த்தை கூட மிகையானதுதான். குழந்தைகள் எப்போதும் இயற்கையுடன் உரையாடுபவர்கள்தான். நாம்தான் அவர்களுக்கு அதிகம் கற்று தருகிறோம் என்ற பெயரில், இயற்கைக்கும் அவர்களுக்குமான கண்ணியை அறுக்கிறோம். அந்த கண்ணி அறுபடாமல் இருக்கும் வேலையை மட்டும்தான் நாங்கள் பார்க்கிறோம்.

அவநம்பிக்கை என்பது செயற்கையானது. அது, நாமே ஏற்படுத்தியது. நாங்கள் குழந்தைகள் மனதில் இருக்கும் அவநம்பிக்கையை அகற்ற முயற்சிக்கிறோம். வாழ்க்கையை அதன் இயல்பில் புரிந்து கொள்ள பயிற்றுவிக்கிறோம்.

ஆம். பணம் முக்கியம்தான். ஆனால், வாழ்தல் அதைவிட முக்கியம் அல்லவா...? பணம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நாம் வாழ்க்கையை சிக்கலாக்கி விட்டோம். பேராசை இல்லாமல், தேவைக்காக மட்டும் பணத்தை ஈட்டுங்கள் என்கிறோம்."

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!


இது வாழ்க்கைக்கு உதவுமா....?

"எந்த அறமும் இல்லாமல் இருக்கும் பிழைத்தலுக்கு வேண்டுமானால் உதவாமல் போகலாம். ஆனால், நிச்சயம் வாழ்தலுக்கு உதவும். குழந்தைகளிடம் ஒரு அப்பாவித்தனம் இருக்கும், அதை அழித்துவிடாமல் காப்பது மட்டும்தான் எங்கள் நோக்கம். நம் அனைவரையும் விட, இயற்கை  மிகப்பெரிய ஆசான். அந்த ஆசானிடம் சரணடைய உதவுகிறோம்.”

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!


ஆனால், இது முழு நேர பள்ளி இல்லையே..?


“ஆம். சில கட்டட வேலைகள் இருக்கிறது. அது முடிந்தவுடன் முழு நேர பள்ளியாக இயங்க ஆரம்பிக்கும். அது வரை தொடர்ந்து பயிற்சி பட்டறைகள் நடக்கும்.”

'குக்கூ'.... குழந்தைகள் விரும்பும் காட்டுப் பள்ளி!

இங்குள்ள கட்டடங்கள் எல்லாம் வித்தியமாக இருக்கிறதே...?

“குழந்தைகளின் படைபாற்றலை மேம்படுத்துவதுதான் எங்கள் நோக்கம் எனும் போது, கட்டடங்களும் அது போல்தானே இருக்க வேண்டும். இது மெக்ஸிகோவில் பயின்ற மென்பொறியாளர் வருண் என்பவரால் கட்டப்பட்ட கட்டடம். சிமெண்ட் இல்லாமல் களிமண்ணால் கட்டப்பட்டது. மண்ணை நேசிக்க சொல்லும் போது, கட்டடங்கள் ரசாயனமாக இருக்க கூடாது அல்லவா...? இது மட்டுமல்ல, இந்த கட்டடத்தில், இந்தியா முழுவதும் உள்ள இயற்கை காதலர்களின் வியர்வை கலந்து இருக்கிறது. ஆம். அவர்களே கொத்தனாராக, சித்தாளாக, மேஸ்திரியாக இருந்து, இந்த கட்டடத்தை கட்டினார்கள்.”

இப்படியாக அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, சில குழந்தைகள் வருகிறார்கள். அவருடன், இவர்கள் விளையாட துவங்குகிறார்கள்.  நாம், அங்கிருந்து விடைபெற்றோம்.

இயற்கை மட்டுமல்ல, அதை நேசிக்கும் மனிதர்களும் தொடர்ந்து இயங்கி கொண்டுதான் இருக்கிறார்கள்.

- மு. நியாஸ் அகமது
 

அடுத்த கட்டுரைக்கு