Published:Updated:

இணையம் வா... இணைவோம் வா..! - விகடன் அழைக்கிறான் #VikatanBlog

இணையம் வா... இணைவோம் வா..!  - விகடன் அழைக்கிறான் #VikatanBlog
இணையம் வா... இணைவோம் வா..! - விகடன் அழைக்கிறான் #VikatanBlog

இணையம் வா... இணைவோம் வா..! - விகடன் அழைக்கிறான் #VikatanBlog

’பிச்சைக்காரன்’ படம் பார்த்துவிட்டு வந்தார் அவர். ‘செம்ம படம்ப்பா. அம்மா சென்டிமென்ட்டை வெச்சு இந்தக் காலத்துலயும் பார்க்கற மாதிரி, போரடிக்காம கொண்டு போயிருக்கார்’ என்று நண்பரிடத்தில் பாராட்டுகிறார்.

இந்தப் பாராட்டு அவரோடும், அவர் நண்பரோடும் மட்டும் போயிருக்க வேண்டியது. ஆனால், இயக்குநர் சசிக்கு இந்தப் பாராட்டைக் கொண்டு சேர்க்க நினைக்கிறார்.

‘நான் சாதாரண பேப்பர் போடற பையன்’ என்று அவர் நினைக்கவில்லை. அடுத்த நாள் இயக்குநர் சசி வீட்டில் போட்ட தினசரியில், கைப்பட அந்தப் படத்தைப் பாராட்டி இரண்டு வரி எழுதிப் போடுகிறார். இயக்குநர் சசிக்கு எத்தனை மகிழ்வாய் இருந்திருக்கும்! இப்போதும் இது அந்தப் பையன், இயக்குநர் சசி என்று ஒரு வட்டத்தோடு முடிந்து போயிருக்கும். ஆனால்.. அன்றைய தினம் இணையம் முழுவதும் இது பரவியது. நெகிழ்ச்சியான இந்த வாழ்த்து பற்றியும், படம் பற்றியும் பேசப்பட்டது. இதற்கிணையான விருது ஏதும் உண்டா என்று விவாதிக்கப்பட்டது.

இதுதான் இணையம் தரும் விசால வெளி. ஒரு பயணத்தில் உங்களுக்கான அனுபவமாக இருக்கலாம், சமீபத்தில் நீங்கள் கேட்டு நெகிழ்ந்த பாடலாக இருக்கலாம், ‘ச்சே... என்னமா எழுதியிருக்கார்டா... யார்கிட்டயாச்சும் பகிர்ந்துக்கணுமே’ என்று நினைக்கும் கதையோ, கட்டுரையோ எதுவாகவும் இருக்கலாம், கவிதையாக இருக்கலாம். புகைப்படமாக இருக்கலாம். இன்றைக்கு நீங்கள் நினைத்ததை, அடுத்த நொடி இணையத்தில் வெளியிட்டு, முதல் நிமிடத்திலேயே 30 லைக்குகளையோ, சில பல   ரீ-ட்வீட்களையோ அள்ளிவிட முடியும்.

இணையம் வா... இணைவோம் வா..!  - விகடன் அழைக்கிறான் #VikatanBlog

வரலாறு முக்கியம் பாஸ்....

இந்த இடத்தில், இணையத்தில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வைப் பார்ப்போம். யூ-டியூபில் ஒரு வீடியோவை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பதற்கான ஒரு 'View Counter' இருக்கிறதல்லவா? அதில் அதிகபட்சம் ‘2,147,483,647’ - இவ்வளவுதான் வரும் என்றிருந்தது. டெக்னிகலாக மண்டையைக் குழப்பிக் கொள்ளாமல், சுருக்கமாகச் சொல்வதானால் C ப்ரோக்ராம் என்று ஒரு சமாச்சாரம், 32 Bit Integerல்  - அப்படி வடிவமைத்திருந்தது. ‘214 கோடிக்கு மேலயா ஒரு வீடியோவை மக்கள் பார்த்துட்டே இருப்பாங்க?’ என்ற சிந்தனையாக இருக்கலாம். ஜுலை 15, 2012ல் வெளியான ஒரு வீடியோ இந்த வரலாற்றை உடைத்தது. யூ-ட்யூப்காரர்கள் என்னடா இது என்று மண்டையைக் குடாய்ந்து 32 Bit ஆக இருந்த அதை 64 Bitக்கு மாற்றுகிறார்கள்.

அப்படி யூ-ட்யூபையே கலங்கடித்த அந்த வீடியோ, இதை எழுதும் இந்த நொடி வரை 2,534,499,132 பேர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. எப்படியும் அந்த இலக்கத்தை உச்சரித்திருக்க மாட்ட்டீர்கள். அதாவது, 253 கோடியே 44 லட்சத்து, 99 ஆயிரத்து 132 ! இன்றைய தேதிக்கு யூ-ட்யூபின் அதிக பார்வையாளர்களைப் பெற்ற அந்த வீடியோ - கொரியன் பாப் ஸ்டார் PSYன் கங்னம் ஸ்டைல்!

இதுதான் ஒரு படைப்பு உங்களுக்குள்ளே, உங்கள் நட்பு வட்டத்திற்குள்ளே இருப்பதற்கும் உலகளாவிய வகையில் சென்று சேருவதற்குமான உதாரணம். அந்த பேப்பரில் பாராட்டிய பையனின் செய்தி, விகடன் மாதிரியான இணைய வெளியில் வருவதற்கும், இயக்குநர் தனது வாட்ஸ் அப் க்ரூப்பில் 100 பேர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் உண்டான வித்தியாசமும் அதுதான்.

என் படைப்புக்கு, விகடன் மாதிரியான பாரம்பர்யமான ஒரு குழுமம் இணையத்தில் இடம் தருமா? ஆம். உங்கள் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், ஃபோட்டூன்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், சமையல் குறிப்புகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள் என்று எதையும் உலகிற்குக் கொண்டு செல்ல விகடன் தயாராகி விட்டான்.

விகடன் BLOG.

மிக விரைவில் வெளியாகவிருக்கும் விகடன் ப்ளாக் உங்கள் படைப்புக்கான எல்லையற்ற இணையவெளியாக இருக்கும். உங்கள் பெயரில், நீங்கள் சிந்திக்கும் ஒரு நல்ல விஷயம், பகிர்ந்து கொள்ள நினைக்கும் உங்கள் திறமைகள் என்று எதையும் blog@vikatan.com-க்கு எழுதி அனுப்புங்கள்.

இணையம் வா... இணைவோம் வா..!  - விகடன் அழைக்கிறான் #VikatanBlogயார் கண்டார்கள். உங்கள் படைப்பு ‘கொலவெறி ஹிட்’டாகி நாளைக்கே சூப்பர் ஸ்டாரோ, தோனியோ, இந்தியப் பிரதமரோ, உங்களை விருந்துக்குக் கூட கூப்பிடலாம்!


FAQ:-

எதையெதை அனுப்பலாம்?

கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், ஃபோட்டூன்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், மினிமலிஸ படைப்புகள், பயண சுவாரஸ்யங்கள், துறைசார் பதிவுகள், உலக, இந்திய மற்றும் தமிழ் சினிமா பார்வைகள், சமையல் குறிப்புகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள், இன்னும் இன்னும்! 

யார் பெயரில் வெளிவரும்?

உங்கள் பெயரில்... உங்களுக்கென்று ஒரு பக்கம் உருவாக்கப்பட்டு அதில் வெளிவரும்.

என் புகைப்படம் இடம்பெறுமா?

நிச்சயமாக.

என்னைப் பற்றிய விபரங்கள் அனுப்ப வேண்டுமா?

ஆம். பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட உங்கள் விபரங்கள்.

என் படைப்பு திருத்தப்படுமா?

தேவைப்பட்டால்! சமயங்களில் திருத்திய copy உங்கள் பார்வைக்கும் அனுப்பப்படும்!

படைப்பின் உரிமை யாருக்கு?

படைப்பாளிக்குத்தான். அதன் கருத்துகளும், பார்வைகளும் படைப்பாளிக்குச் சொந்தமானவை.

வேறு தளத்தில் வெளியிட்டவற்றை அனுப்பலாமா?


வேண்டாமே! விகடனுக்கு என்று பிரத்யேகமாக எழுதி அனுப்புபவை மட்டுமே பரிசீலிக்கப்படும்.

படைப்பாளி குறித்த விபரங்கள் இருக்குமா?

நீங்கள் தொடர்ந்து படைப்புகள் அனுப்பும் பட்சத்தில், உங்களுக்கான தனிபக்கம் தொடங்கப்பட்டு, அதில் நீங்கள் தரும், உங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறும். மின்னஞ்சல் முகவரி வெளியிட விரும்பினால் அதுவும் வாசகர்களின் பார்வைக்கு இருக்கும். முதல் பக்கத்தில் வெளியாகும் உங்கள் படைப்பில், உங்கள் பெயரைக் க்ளிக்கினால், மொத்தமாக விகடன் ப்ளாகில் நீங்கள் எழுதிய எல்லாம் ஓரிடத்தில் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அவற்றை ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம். சேமித்துக் கொள்ளலாம். இவையெல்லாம், நீங்கள் அனுப்பும் படைப்புகளின் எண்ணிக்கையையும், தரத்தையும் பொறுத்தே அமையும். 


வெளியான என் படைப்புகளை, வேறு சமூக வலைத்தளங்களில் வெளியிடலாமா?

விகடன் ப்ளாகிற்கு என்று நீங்கள் எழுதியதை, குறிப்பிட்டு ஷேர் செய்து கொள்ளலாம். அப்படியே வேறு தளங்களிலும் வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.


தமிழில் மட்டும்தான் எழுத வேண்டுமா?

அப்படி எந்தக் கட்டுப்பாடுமில்லை. ஆங்கிலத்தில்கூட இருக்கலாம். மொழியே தேவையில்லாமல், ஒரு சின்ன கார்ட்டூனில், மைம் வீடியோவில், ஃபோட்டோவில் எல்லையற்று உங்கள் சிறகை விரிக்கலாம்.

படைப்புச் சுதந்திரத்தின் எல்லை என்ன?
 
கற்பனைச் சிறகு விரிந்தால், வானம்கூட எல்லை இல்லைதான். உங்கள் படைப்பு ஒரு நல்ல விவாதத்துக்கு வழிவகுக்கலாம். ‘அட.. இப்படி ஒரு பார்வை இருக்கா?!’ என்று விழி விரிய வைக்கலாம். ஆனால், அது யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். 

என்னவெல்லாம் செய்யக் கூடாது?

வெற்று கவன ஈர்ப்புக்காக, யாரையேனும் புண்படுத்தக்கூடிய, சிலரது சென்டிமென்டைக் காயப்படுத்தக் கூடிய எதுவும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

என்ன.. ரெடியா?

அனுப்ப ஆரம்பிச்சாச்சா? இதோ மின்னஞ்சல் முகவரி:- blog@vikatan.com

இணையம் வா.. இணைவோம் வா!

.

அடுத்த கட்டுரைக்கு