Published:Updated:

விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?

Vikatan Correspondent
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?

ரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்தின் அறிவிப்பால் தங்களுக்கான சாதக பாதகங்கள் குறித்த கூட்டல் கழித்தல் கணக்குகளை போடத்தொடங்கிவிட்டன மற்ற கட்சிகள்.

கடந்த ஒரு வருடமாக விஜயகாந்த்  திமுக பக்கம் சாய்வார், பாஜக பக்கம் தாவுவார், மக்கள் நலக் கூட்டணியில் இணைவார் என்றெல்லாம் கருத்துக்கணிப்புகள், விவாதங்கள் நடந்து ஓய்ந்த நிலையில்,  நேற்று நடைபெற்ற சென்னை தேமுதிக மகளிரணி மாநாட்டில், நாங்க தனித்தே போட்டியிடுவோம் என்ற விஜயகாந்தின் அறிவிப்புக்கு பின்னரே, கூட்டணி குறித்த பெரும் குழப்பத்திலிருந்து மீண்டன தமிழக அரசியல் கட்சிகள்.  ஆனால் விஜயகாந்தின் இந்த அறிவிப்பு சில கட்சிகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது, வேறு சில கட்சிகளை உறக்கம் தொலைக்க வைத்துள்ளது.

மாநில சுயாட்சி பேசிய, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய, தமிழ் ஆட்சிமொழி என்று உறுதி கொடுத்த திமுக,  தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்த் என்ற பழம் நழுவி ( திமுக என்ற) பாலில் விழும் என இறுதிவரை  நம்பியது. அவர் யார் பக்கம் போகிறார், என்ன செய்கிறார் என்று உளவுத்துறை, ஊடகக் கணிப்பு என்று காத்து இருந்தது ஆளும் அதிமுக.

'மத்தியில் நாம்தான் 'பவர்',  அத்தோடு கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நம்மோடு சேர்ந்துதானே சந்தித்தார், அதனால் கண்டிப்பாக தாமரையுடன் இணைவார்' என்ற நம்பிக்கையில் படியேறிச் சென்று  பலக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும்  பலன்றி தவிக்கிறது பாஜக. இன்னொரு பக்கம் திமுக - அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்ற கோஷத்துடன் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ,பிரசார பயணம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மண்டல மாநாடுகள் என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே அதகளப்படுத்திய பாமகவை, 'கூட்டணி இல்லை' என்ற விஜயகாந்தின் ஒற்றை அறிவிப்பு மிரள வைத்துள்ளது.

இவற்றில் எதுமாதிரியும் இல்லாமல்,புது மாதிரியாக 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்று செயல்படும் அணி, தேமுதிக வருகையை வழிமேல் விழிவைத்து காத்திருந்து இறுதியில் விஜயகாந்த் வராமல்  போகவே  கொஞ்சம் 'ஷாக்' ஆகியுள்ளது. இன்னும் எந்தப்பக்கம் போவது என்பதில் ஜி.கே.வாசனின் தமாகா தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆக ஒரு வழியாக 2016 சட்டமன்றத் தேர்தல் ரேசுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் விஜயகாந்த். இனி மற்ற கட்சிகள் தேர்தல் ரேசில் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஓட வேண்டியதுதான்.

விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?

இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய விஜயகாந்த், அப்படி என்னதான் செல்வாக்கு வைத்திருக்கிறார்? அவரின் சேர்க்கை  யாருக்கு லாபம் தரும் அல்லது வெற்றி இழப்பைத் தரும் என்பதற்கு அவரின் கடந்த தேர்தல் நிலவரங்களை வைத்து கணிக்கலாம்.

விஜயகாந்தின் வாக்கு வங்கி என்பது திமுக, அதிமுக அதிருப்தியாளர்களை அடிப்படையாகக் கொண்டது, பாமகவை எதிர்ப்பவர்களைக் கொண்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அந்தவகையில், கட்சி தொடங்கிய ஒரே ஆண்டில், அதாவது 2006-ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று, விருத்தாசலம் தொகுதியில்  மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். அப்போது தேமுதிகவின் வாக்கு அளவு 10 சதவீதம். இது திமுக, அதிமுகவிற்கு மாற்றை விரும்பியவர்கள் அளித்த வாக்குகள் என்று கூறப்பட்டது.

பின்னர் அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 10.3% வாக்குகள் பெற்றது தேமுதிக. அதற்கடுத்து  நடந்த 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 எம்.எல்.ஏ.களை  பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. அப்போது தேமுதிக பெற்ற வாக்கு அளவு 7.9% ஆகும்.  அடுத்து நடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 5.1% ஆகும். இது முந்திய தேர்தலைக்காட்டிலும் பாதி அளவே. ஆனால், இப்போதும் தங்களுக்கு 10% வாக்கு வங்கி இருக்கிறது என்று தேமுதிக நம்பிக்கைக் கொண்டுள்ளது.

ஆனால் இது,  தேமுதிக ஆட்சி அமைக்க மெஜாரிட்டி பெறும் அளவுக்கு போதாது என்பது விஜயகாந்திற்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் 'திமுக, அதிமுகவிற்கு மாற்று நாங்கள் எங்களுக்கு முழு ஆதரவை தாருங்கள்' என்று பொது வாக்காளர்கள் மற்றும் நடுநிலைமையாளர்களை கோருகிறார். ஏனெனில் அதிமுகவிற்கு வாக்கு வங்கி 44.3% என்று கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவு கூறுகிறது. ஆனால் இது,  வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அப்படியே கிடைக்குமா என்பதில் உறுதி எதுவும் இல்லை. குறைந்தபட்சம் 8% முதல் 10% அளவிற்கு குறையும் என்கிறது வேறு ஒரு கருத்துக் கணிப்பு.

அதே போல திமுகவின் வாக்கு வங்கி தேர்தலுக்கு தேர்தல் சரிந்து தற்போது  26.3% மாக இருக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் யார் வெல்வார்கள் என்பது வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

அதே நேரத்தில் தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்து போட்டியிட்டால் 15% மற்றும் தேமுதிக சொல்லிக்கொள்ளும்  10% இணைந்தால் அது அதிமுக, திமுகவிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. இது இணைந்து நடந்தால்தான் சாத்தியமாகும். தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். 

தேமுதிக தனித்துப் போட்டியிடுவது அதிமுகவிற்குதான் லாபம் என்று கருத்து நிலவுவதை தவிர்க்க முடியவில்லை. அது  நிகழக் கூடாது என்றால் தேமுதிகவுடன் திமுக, அதிமுகவை விரும்பாத கட்சிகள் ஒன்றிணையவேண்டும். அது நடக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
       
  - தேவராஜன்.