Published:Updated:

அறுபடையானை நம்பி திருவையாறில் களமிறங்குகிறாரா ஜெ.?

Vikatan Correspondent
அறுபடையானை நம்பி திருவையாறில் களமிறங்குகிறாரா ஜெ.?
அறுபடையானை நம்பி திருவையாறில் களமிறங்குகிறாரா ஜெ.?
அறுபடையானை நம்பி திருவையாறில் களமிறங்குகிறாரா ஜெ.?

மிழக அரசியல் கட்சிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளும், 2016- தேர்தலின் சுவாரஸ்யத்தை கூட்டிக் கொண்டே போகிறது.

தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், தனித்துப்போட்டி என்ற விஜயகாந்தின் அறிவிப்பு, கூட்டணி பேரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதையடுத்து, ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை தேர்ந்தேடுக்கவும் அதைக் கைப்பற்றவும் களம் இறங்கி விட்டன. டாப் ஸ்டார் வேட்பாளர்களில் திருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் ஸ்டாலின், விருத்தாசலத்தில் கேப்டன் என்று ஹேஸ்யங்கள் றெக்கை கட்டுகின்றன.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்னும் தான் போட்டியிட வேண்டிய தொகுதியை தேர்வு செய்யவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கிராமப்புறங்களில்தான் அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம். அந்த வகையில் கடந்த 1989-ம் ஆண்டு ஜெயலலிதா போடிநாயக்கனுரில் நின்று வெற்றி பெற்றுதான் எதிர்கட்சித் தலைவரானார். அடுத்து 1991-ம் ஆண்டு தேர்தலில்,  பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதிகளில் நின்றார்.

அந்த முறை ராஜீவ் காந்தி படுகொலை காரணமாக காங்கிரஸ் - அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. பர்கூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஜெயலலிதா,  முதல் முறையாக முதல்வரானார். அதோடு தமிழகத்தின் இளம் முதல்வர் என்ற பெருமையையும் ஜெயலலிதா பெற்றார்.

1991 முதல் 1995-ம் ஆண்டு வரையிலான ஆட்சியில் அதிமுக மீது மக்கள் அதிருப்தியடைந்த காரணத்தால் அடுத்த தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. ஏன்  பர்கூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட முதல்வர் ஜெயலலிதா கூட படுதோல்வியடைந்தார். அந்த பர்கூர் தந்த பாடத்திற்கு பின், கிராமப்புறம் நிறைந்த ஆண்டிப்பட்டியில் மட்டுமே இருமுறை நின்று வெற்றி கண்டுள்ளார்.

இந்த தேர்தலை பொறுத்தவரை, ஜாதகம், ஜோசியம், நியூமராலஜி என எல்லா கணக்குகளையும் போட்டுப்பார்த்ததில், ஜெ.வின் ஜாதகப்படி முருகப்பெருமான் குடியிருக்கும் தொகுதி வெற்றிக்கு உகந்ததது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் தோழி சசிகலாவும், இளவரசியும் தமிழகத்தையே ஒரு ரவுண்டு அடித்து முடித்து,  அம்மா நிற்க சரியானத் தொகுதி எது? என்று தீவிரமாக அலசி ஆராய்ந்து,  தேர்வு செய்தவைதான் சென்னையில் மயிலாப்பூர், தியாகராய நகர், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர், தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதிகள். இதில் வடபழனி முருகன் கோவில் அமைந்துள்ள தி.நகர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அறுபடையானை நம்பி திருவையாறில் களமிறங்குகிறாரா ஜெ.?

என்னதான் ஜாதகம், நாள், நட்சத்திரங்கள் ஒருபக்கம் கைகொடுக்கும் என்றாலும் மே மாத கொளுத்தும் வெயிலையும் உடல்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? அதனால், சென்னைக்குள்ளேயே இரண்டு தொகுதிகளை பரிசீலனை செய்துள்ளார் என்கிறது கார்டன் வட்டாரம். மைலாப்பூர் மற்றும் தியாகராய நகர் இரண்டு தொகுதிகளிலுமே பிராமண ஓட்டுகள் அதிகம். அ.தி.மு.கவின் கை எப்போதும் ஓங்கியே இருக்கும் களம் அது. ஆனால் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் குடி இருக்கும் ஏரியா என்பதால் அங்கு ஜெயலலிதா போட்டியிட வாய்ப்புக் குறைவு.

திருவையாறு தொகுதியைப் பொறுத்தவரை தொகுதி எண் 173- என வருகிறது.  இதன் கூட்டுத்தொகை 11. ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட எண் 11. ஆர்.கே.நகர் தேர்தலின் போதும் ஜெ., ஜெயிப்பதற்கு காரணமாக இருந்ததும் இதே எண்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்றத் தேர்தலில்,  அ.தி.மு.கவில் 173 சென்ட்டிமென்ட் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. காரணம், ஐவர் அணியுடன் ஆதரவாளர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு 173 புதிய வேட்பாளர்களை களமிறக்கவும் தலைமை திட்டமிட்டுள்ளதாம். இவை எல்லாவற்றிற்கும் அடுத்தபடியாக கடைசியில் இருப்பதுதான் திருப்போரூர் தொகுதி.

அறுபடையானை நம்பி திருவையாறில் களமிறங்குகிறாரா ஜெ.?

இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் (பர்கூர் தவிர), ஜெ., ஆண்டிப்பட்டி தொகுதியில் மட்டும்தான் அதிகபட்சமாக இரண்டு முறை நின்று ஜெயித்திருக்கிறார். மற்றபடி ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு புது தொகுதி இருக்கும். இந்தமுறை, திருவையாறு, திருமயிலை, தியாகராயநகர், திருப்போரூர் ஆகியவற்றில் ஒன்று இருக்கும். கூட்டுத் தொகை பதினொன்றும், அறுபடையானும் அம்மாவுக்கு வெற்றி தேடித் தருவார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 - சுசித்ரா சீத்தாராமன்