Published:Updated:

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!
பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

திமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக அதிகாரம் மிக்க பதவி பொருளாளர் பதவி. திமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த கருணாநிதி, அந்த கட்சியின் தலைவரானார். பின்னர் முதல்வரானார். அதே சென்டிமென்டில் தனது மகன் ஸ்டாலினுக்கும் திமுக பொருளாளர் பதவி வழங்கி தமிழகம் முழுவதும் வலம்வர வைத்துள்ளார்.

திமுகவில் எம்.ஜி.ஆர் பொருளாளராக இருந்தபோதுதான் கட்சியில் கணக்கு கேட்ட சர்ச்சை எழுந்தது. இறுதியில் எம்.ஜி.ஆர் கட்சியைவிட்டு கட்டம் கட்டும் வரை அது சென்றது. பின்னாளில் எம்.ஜி.ஆர் கட்சியை துவங்கி தமிழக முதல்வரானார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட முக்கிய பதவியாக விளங்கும் பொருளாளர் பதவி,  அதிமுகவில் மட்டும் நேர்எதிர் ராசியாகிவிட்டது.  இக்கட்சியில் பொருளாளர் பதவியில் இருந்தவர்களின் வாழ்க்கை சமீபகாலமாக அடையாளம் இல்லாமல் போனதுதான் பரிதாபம்.

அதிமுகவை பொருத்தவரையில் பொருளாளர் பதவி என்பது அதிர்ஷ்டமில்லாத பதவி என்கிறார்கள் அக்கட்சியினர். ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அதிமுக பொருளாளர்களை பற்றி பார்ப்போம்...

காணாமல் போன போயஸ்கார்டனின் நிழல்


ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்தவர் தினகரன். மாநிலங்களவை உறுப்பினர், அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொருளாளர் பதவிகளை அலங்கரித்தவர். இப்போது அதிகாரம் இல்லாமல் இருக்கிறார். ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்காள் வனிதாமணிக்கு  டிடிவி.தினகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் டிடிவி.பாஸ்கரன் மூன்று மகன்கள். இதில் மூத்தமகன்தான் தினகரன்,  சசிகலா மூலமாக கார்டனுக்குள் நுழைந்து, ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராக வலம் வந்தார். ஜெயலலிதாவின் பாதுகாவல் பணிகளை  கவனித்துக் கொள்வதற்காக கார்டனுக்குள் சென்றவருக்கு அதன்பிறகு கிடுகிடு வளர்ச்சி. பிறந்த ஊரான திருத்துறைப்பூண்டியையும் அப்பா விவேகானந்தன் பெயரையும் இணைத்து, டி.டி.வி.தினகரன் என கட்சிக்காரர்களால் அழைக்கப்பட்டார்.

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்,  பெரியகுளம் தொகுதி வேட்பாளராக  ஜெயலலிதாவால் களமிறக்கப்பட்டு, வெற்றியும் பெற்றார். அடுத்தடுத்து  ஏறுமுகமாக இருந்த இவருக்கு,  அதிமுகவின்  மாநிலப் பொருளாளர் பதவி  வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் அ.தி.மு.கவின் அறிவிக்கப்படாத அதிகார மையம் என எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டார். உச்சகட்டமாக கட்சியினரால் ஜெயலலிதாவின் 'அடுத்த வாரிசு’ என்றும் இவர் கூறப்பட்டார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய,  டிடிவி தினகரனும் அதில் தப்பவில்லை. தோல்வியடைந்தார். அடுத்தடுத்து வழக்குகள், போயஸை விட்டு வெளியேற்றம் என பல சர்ச்சைகளில் சிக்கினார். ஹவாலா பணப்பரிமாற்றம் மூலம் ஜெ.ஜெ. டிவிக்கு அப்லிங்க் வசதி, அயல்நாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாக சசிகலா, தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது கடந்த 1997-ம் ஆண்டு அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதா மீதான  சொத்துக் குவிப்பு வழக்கில்  டிடிவி. தினகரனும் குற்றவாளிகளில் ஒருவர்.

இப்படி அதிகார மையமாக இருந்தபோதுதான் இப்போது கட்சியின் பொருளாளராக உள்ள ஓபிஎஸ்ஸை தினகரன் அடையாளம் காட்டினார். டிடிவி தினகரன் பெரியகுளத்தில் தங்கியிருந்தபோது,  ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி வீட்டில் குடியிருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம்தான், ஒ.பி.எஸ்ஸை முதல்வர் நாற்காலி வரை கொண்டு சென்றது என்கிறார்கள் தேனிவாசிகள்.

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

இப்படிப்பட்ட நபர் கடந்த 2012-ல் போயஸ் கார்டனைவிட்டு அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியினர் உட்பட எல்லாரும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அத்துடன் தினகரன் அடங்கிப் போனார். சட்டமன்ற தேர்தல் வந்தால் எம்.எல்.ஏ சீட் பரிந்துரை செய்ய சொல்லி இவரது வீட்டில் ஆதரவாளர்கள் குவிந்து கிடப்பார்கள்  இப்போது வெறிச்சோடி கிடக்கிறது அந்த வீடு.

திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக உதயமாகி முதன்முதலில் அக்கட்சி 1973, திண்டுக்கலில் லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு உழைத்தவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். அப்போது சீனிவாசன் திண்டுக்கல் மாவட்ட துணைச்செயலாளராக இருந்தார். அந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மாயத்தேவர், எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் தி.மு.க.விற்கு மாறியபோது, அதிமுகவிற்கு விசுவாசமிக்கவராக இருந்தவர்களில் திண்டுக்கல் சீனிவாசனும் ஒருவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, சீனிவாசன் மாவட்டச் செயலாளராக்கப்பட்டார்.

1987-ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை திண்டுக்கல் மாவட்டச் செயலராக  இருந்தவர், அப்போதுதான் தனக்கு துணையாக இருப்பார் என நினைத்து, நத்தம் விஸ்வநாதனை மாவட்ட துணைச் செயலாளராக்கினார். 1989, 1991, 1998, 1999 அடுத்தடுத்து  ஐந்து முறை எம்.பியாக இருந்தவர். கடந்த 2000 முதல் 2006 ம் ஆண்டு வரை அ.தி.மு.க. பொருளாளராக,  ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக நம்பிக்கைக்குரியவர்கள் பட்டியலில் இருந்தார். அப்போதுதான் மாநில பொறுப்புக்கு போனதால், தனக்கு நம்பிக்கையான நத்தம் விஸ்வநாதனை மாவட்டச் செயலாளராக பரிந்துரை செய்ததும் இவர்தான்.

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

திண்டுக்கல்லைத் தாண்டி நத்தம் விஸ்வநாதனையும், பெரியகுளத்தைத் தாண்டி ஓ. பன்னீர் செல்வத்தையும் யாருக்கும் தெரியாத காலத்தில் ஜெயலலிதாவைச் சந்திக்க சீனிவாசன்தான் அப்பாயின்ட்மென்ட்  வாங்கி கொடுத்தார் என்பது அப்போதைய அவரது செல்வாக்கை சொல்லும். எப்போது நத்தம் மாவட்டச் செயலாளர் ஆனாரோ அன்று முதல், நத்தம் விசுவநாதனுக்கு கட்சியில் ஏறுமுகம்தான்.

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க வென்று, விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்ற பிறகு, இருவருக்குமான பனிப்போர் பகிரங்கமாகவே வெடித்தது. அ.தி.மு.க சார்பாக நடக்கும் கூட்டங்கள், விழாக்களில் சீனிவாசனின் பெயர் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள். தவறிப்போய் சீனிவாசன் பெயரை அச்சடித்த பிளக்ஸ் பேனர்களில், அவரது பெயர் மட்டும் வெள்ளைதாள் ஒட்டி மறைக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. அரசியலில் ஆடிஓடி அசந்துப் போய் கிடந்த சீனிவாசன், எதுவும் செய்யமுடியாமல் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது

குருவை மிஞ்சிய சிஷ்யனாக தற்போது நத்தம் விசுவநாதன் அமைச்சராகவும், கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் கட்சியின் இரண்டாம் கட்ட முக்கியத் தலைவராகவும் செல்வாக்குமிக்கவராக வலம் வருகிறார். ஆனால், திண்டுக்கல் சீனிவாசனோ, மாவட்ட அவைத் தலைவர் என்ற டம்மி பதவியில் அமர்த்தப்பட்டு உள்ளுார் கட்சி அலுவலகத்தில் தினம் கையெழுத்து போட்டுவிட்டு டீ, காபி, சமோசா சாப்பிட்டுவிட்டு தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்.

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

கடந்த  மக்களவை தேர்தலிலாவது, திண்டுக்கல் தொகுதியில் ‘சீட்' கிடைக்கும் என தவம் இருந்தார். வாய்ப்பு மறுக்கப்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன் கட்சியில் முழுமையாக ஓரங்கட்டப்பட்டார். தற்போது அதிர்ஷ்ட காற்று திண்டுக்கல் சீனிவாசம் பக்கம் வீசுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

பொருளாளர் இருட்டு சிறையில்...

இரண்டு முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். தற்போதய நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர். வழக்கமாக முதலமைச்சரும், அதிமுக வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை எந்த அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் வந்து சந்தித்தாலும், இவர்கள் உடனிருப்பார் அந்தளவுக்கு ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர்.

பெரியகுளத்தில் டீக்கடை வைத்திருந்த பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதல்வரான கதை சுவாரஸ்யமானது. அதிமுகவில் சாதாரண உறுப்பினராக இருந்த ஓபிஎஸ்,  1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாக பிரிந்தபோது, ஜானகி அணிக்கு போனார். அடுத்து அதிமுகவில் ஐக்கியமானவர்,  டிடிவி தினகரன் சிபாரிசுகளுடன் தேனியில் வலம்வந்தவர், பெரியகுளம் முனிசிபாலிட்டியில் 1996 - 2001ல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

2001ல்  முதன் முறையாக ஓபிஎஸ் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏவான மூன்றே மாதங்களில் ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் நாற்காலி காத்திருந்தது. 2000 ம் ஆண்டில் டான்சி மற்றும் பிளசெண்ட் ஸ்டே ஊழல் வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் தண்டனைபெற்றபோது ஐந்தரை மாதங்கள் முதலமைச்சராக இருந்தார். அடுத்து  சசிகலா குடும்பத்தினர் கார்டனை விட்டு வெளியேற்றப்பட்ட நேரத்திலும் கூட ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்ததால்,  இரண்டாவது முறையாக ஓ பன்னீர்செல்வத்துக்கு ஜாக்பாட் அடித்தது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டீ ஜான் குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரையும் சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என்று தண்டித்து அவர்களுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். செப்டம்பர் 29ம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் ஓபிஎஸ்.

பொருளாளர் பதவி...அலறும் அதிமுகவின் இரண்டாம்கட்டத்தலைவர்கள்!

2015 மே 23ம் தேதி மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்கும் வரையில் அரியணையில் இருந்தார். ஆகவே 2001 - 2002ல் ஐந்தரை மாதங்கள், 2014 - 2015ல் கிட்டத் தட்ட ஏழரை மாதங்கள் என்று தனது அரசியல் வாழ்வில் 12 மாதங்களுக்கு மேல் முதலமைச்சராக இருந்திருக்கிறார் ஓபிஎஸ். யாரையும் அவ்வளவு சுலபத்தில் நம்பாத ஜெயலலிதாவே இரண்டு முறை ஒருவரை முதலமைச்சராக ஆக்கி அழகு பார்த்தார். கடந்த ஆண்டு ஓபிஎஸை பொருளாளராக அறிவித்தார். அதிமுகவின் அதிகாரமிக்க மையமாக விளங்கிய ஐவர் அணியில் முக்கியமானவராக இருந்தார்.

ஆனால் பொருளாளர் ராசி இவரையும் விடவில்லை. அடுத்தடுத்து அவர் மீதான கட்சிமேலிடத்தின் நடவடிக்கைகள், அவரது அரசியல் வாழ்க்கை முடக்கிவிடும் அபாயத்தை தந்துள்ளது. அதிகாரம் மிக்கவராக இருந்த ஒருவர் இப்போது டம்மியாக்கப்பட்டுள்ளார். பன்னீர் செல்வத்தின் வீடுகளில் இருந்து இத்தனை கோடி பறிமுதல், அத்தனை கோடி பறிமுதல் என அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அடுத்தடுத்து இவரின் ஆதரவாளர்கள்,  கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டு வருகிறார்கள்,  கைதுக்கும் ஆளாகின்றனர். 

இந்நிலையில்தான் அதிர்ஷ்டமில்லாத பதவியா அதிமுகவின் பொருளாளர் பதவி? என்கிற பேச்சு அக்கட்சியில் புதிதாக புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அம்மா அடுத்து யாரை பொருளாளராக அறிவிப்பாரோ என்ற பீதியில் உறைந்துகிடக்கின்றனர் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.

- சி.ஆனந்தகுமார்

அடுத்த கட்டுரைக்கு