என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

''அன்பு செலுத்துவதும் ஒரு அரசியல்தான்!''

ரீ.சிவக்குமார், படம் : என்.விவேக்

##~##

வீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா நிறைவை ஒட்டி, கொரிய அரசாங்கம், சாகித்ய அகாடமியின் பரிந்துரைகள் வழியாக இந்தியாவில் உள்ள எட்டு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு 'தாகூர் விருது’ வழங்கியது. அந்த எட்டு எழுத்தாளர்களில், நம் எஸ்.ராமகிருஷ் ணனும் ஒருவர். 'யாமம்’ நூலுக்க£க விருது பெற்றுள்ள எஸ்.ரா, தென்னிந்திய மொழிகளில் தாகூர் விருது பெற்றுள்ள ஒரே எழுத்தாளர்!

 ''விருது பெற்ற மனநிலை குறித்தும் விருதுகளோடு எழும் சர்ச்சைகள் குறித்தும் சொல்லுங்களேன்?''

''ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டு இருப் பவனுக்கு குளூகோஸ் தருவதைப்போலத் தான் இந்த விருதுகள். மேலும் ஓடத் தூண்டும் என்பதற்கான குளூகோஸே தவிர, 'ஓடியது போதும், ஓய்வெடுங்கள்’ என்பதற்கான சமிக்ஞை அல்ல விருதுகள். நூற்றாண்டுகளைக் கடந்தும் வாசிக்கப்படும் ஷேக்ஸ்பியருக்குப் பெரிதாக எந்த விருதுகளும் அளிக்கப்படவில்லை. நோபல் பரிசு பெற்ற எல்லா எழுத்தாளர்களும் காலம் தாண்டி நின்றதும் இல்லை. 'இலக்கியவாதிகள் மட்டுமல்ல, அகராதி சார்ந்து இயங்குபவர்கள், மொழிஇயல் துறையில் செயல்படுபவர்களுக்கும் பெரிய அங்கீகாரங்கள் இங்கு இல்லையே!''

''அன்பு செலுத்துவதும் ஒரு அரசியல்தான்!''

''ஒரு புறம் தமிழ் வழிக் கல்வி, தமிழ் வாசிப்பில் இருந்து அப்புறப்படுத்தப்படும் அடுத்த தலைமுறை, இணையங்களை மேய்வதை வாசிப்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள், இன்னொரு புறம் புத்தகக் கண்காட்சியில் கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்பனை ஆகும் புத்தகங்கள்... உண்மையில் வாசிப்புக்கு வளர்ச்சியா, தளர்ச்சியா?''

''இன்றைய இளைய தலைமுறை நிறைய வாசிக்கிறார்கள் என்பதன் அர்த்தம்தான், புத்தகக் கண்காட்சி களின் வெற்றி. ஆனால், அவர்கள் தேர்வு செய்து வாசிக்கிறார்கள். என் அவதானிப்பில், பொதுவாக 30-48 வயது உள்ளவர்கள்தான் வாசிப்பது இல்லை. அறிவைப் பெறுவதற்கு ஒரே வழி, வாசிப்புதான். 'இணையத்தில் எல்லாமே இருக்கிறது’ என்கிற மனநிலையே தவறானது. இணையத்துக்கு நாம்தான் வழங்குகிறோமே தவிர, இணையம் அதுவாக எதையும் உருவாக்கிக்கொள்வது இல்லை. ஒரு காகிதம் பணமாக மாறும்போது எப்படி அதன் மதிப்பு ஏறுகிறதோ... அதேபோல் புத்தகமாக மாறும்போதும் அதன் மதிப்பு மாறுகிறது!''

''140 வார்த்தைகளுக்குள் தங்கள் கருத்தை ட்வீட்டரில் சொல்கிற மனநிலைதான் இப்போது இருக்கிறது. பிறகு ஏன் 'யாமம்’ மாதிரியான ஆயிரக்கணக்கான பக்கங்களைக்கொண்ட நாவல்கள்?''

''ஒரு நாவல் என்பது ஒரு வாழ்க்கை. அனுபவத்தின் புனைபெயர்தானே வாழ்க்கை! ஒருநாள் என்பது, வெறுமனே தேதி மட்டும் அல்ல... மனிதர்கள், பறவைகள், வெயில், மழை, வெயிலைப்போல தொற்றிக்கொள்கிற சந்தோஷம், மழையைப்போல அமிழ்த்திவிடுகிற சோகம் எல்லாமும்தான். ஒரு நாவலின் தேவையைப் பொறுத்துத்தான், அதன் பக்க அளவும். என்னுடைய நாவல்கள் அச்சுக்குப் போகும்போது 200, 300 பக்கங்களை நானே நீக்கி இருக்கிறேன். உண்மையில் அந்த நாவலின் ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு வெளியிலும் வாழ்க்கை பிதுங்கி இருக்கிறது. இப்படி நாம், சொற்களைச் சுருக்கிக்கொண்டே போனால், நம் சொல் வளம் தீர்ந்துவிடும். பிறகு, வெறுமனே பத்து சொற்களோடு வாழ வேண்டியதுதான். இப்போது சொற்களைச் சுருக்குவதுகூடப் போய், 'ஸ்மைலி’ மாதிரியான குறியீடுகள் வந்துவிட்டன. நிறையப் பேச ஆசைப்படும் சமூகம் தமிழ்ச் சமூகம். பின், எழுத்திலும் வாசிப்பிலும் மட்டும் ஏன் இத்தனை சிக்கனம்?''

''உங்கள் எழுத்துகள் நேரடியான அரசியலை ஏன் பேசுவது இல்லை? உதாரணமாக, ஈழத் தமிழர்கள் மீது பேரழிவு என்னும் பிசாசு பாய்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. உலகமயமாக்கலின் விளைவாக இந்தியாவிலும் முகாம்கள், பழங்குடி மக்களின் நிலம் பறிப்பு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை... இவைபற்றி எல்லாம் ஏன் நீங்கள் எழுதுவது இல்லை?''

''அன்பு செலுத்துவதும் ஒரு அரசியல்தான்!''

''ஒரு எழுத்தாளன் மேடைகளில் பேசுவது தீர்வு என்று நான் கருதுவது இல்லை. பாதிக்கப் பட்டவர்களோடு நேரடியாக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதை நான் செய்து வருகிறேன். ஆனால், அதைப் பொதுத் தளங்களில் பகிர்ந்துகொள்வது இல்லை. அதேபோல், ஈழ எழுத்தாளர்களை அங்கீகரிப்பதும் கொண்டாடுவதும்கூட ஓர் அரசியல்தான். என் குடும்பத்தில் பலரும் நேரடியான அரசியலில் ஈடுபட்டதால் பெரிய வீழ்ச்சி நடந்தது. அதனால், நேரடியான அரசியலில் ஈடுபடுவது இல்லை என்று முடிவெடுத்தோம். ஆனால், நான் எப்போதும் எதிர்நிலை எடுத்தது இல்லை. மதக் கோட்பாடுகளை நான் ஏற்பது இல்லை. அடிப்படைவாத அரசியல் தந்திரங்களுக்கு எதிரானவன் நான். பெரும்பாலும் இடதுசாரி நிலைப்பாடுகளையே எடுக்கிறேன். பௌத்தம் போன்ற வாழ்வியல் நெறிகளை எழுத்தில் முன்வைக்கிறேன். என் எழுத்துகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும், நான் சுட்டும் விஷயங்களுக்குப் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது என்பது. போர்க் காலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக செஞ்சிலுவைச் சங்கம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதே மாதிரியான பணிதான், ஓர் எழுத்தாளனின் பணியும். உலகத்தில் மிகவும் சலிப்பான பழைய வார்த்தை, அன்புதான். ஆனால், அதற்கு மாற்றான ஒரு சொல் இல்லை. அன்பை வலியுறுத்துவதும் அரசியல் நடவடிக்கைதான். அதைத்தான் நான் செய்கிறேன்!''