என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

எம்.பரக்கத் அலிபடங்கள்: சு.குமரேசன், பொன்.காசிராஜன், என்.விவேக், கே.கார்த்திகேயன்

##~##

'இனி எல்லாம் ஜெயமே!’- வெள்ளிக் கிழமை காலையில் ஜெயலலிதா கேட்ட முதல் வாசகமே இதுதான்!

'சிம்ம ராசி நேயர்களே! மக நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் இன்று நினைத்தது நடக்கும். காரியங்கள் கைகூடும்’ என்று சன் டி.வி-யில் வாசித்த பெண், ஜெயலலிதாவுக்காகவே தேர்ந்தெடுத்துச் சொன்னது மாதிரி இருந்தது அன்றைய ராசி பலன். அடுத்த மூன்று மணி நேரத்தில் வேதா நிலையத்தின் பால்கனிக்கு கை காட்ட வந்துவிட்டார் ஜெயலலிதா.

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

அவரை அரசியல் தலைவியாக அங்கீகரித்த இடம் அந்த பால்கனிதான். 'பால் கனிப் பாவை’ என்று இதை வைத்துத்தான் அவரது அரசியல் எதிரிகள் கிண்டல் அடித்தார்கள். அரசியலில் அத்தனை அவமானங்களையும் புறம் தள்ளி, மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளார் ஜெ.

புத்தம் புது சட்டசபையை கருணாநிதி கட்டிவைத்து இருக்க, அதைப் புறக்கணித்துவிட்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமர்ந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!  

தேர்தல் முடிவு வெளியான நிமிடம் முதல் ஜெயலலிதாவின் பதவியேற்பு வைபவம் வரையிலான ரிலே ரேஸ் கவரேஜ் இங்கே...

போயஸ் கார்டன்!

வாக்கு எண்ணிக்கை துவங்கிய முதல் ஒரு மணி நேரம் வரை போயஸ் கார்டனில் அமைதி. முன்னணி நிலவரம் எகிறத் துவங்கிய சமயம், உற்சாக முகத்துடன் ஜெயலலிதாவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ) திருமலைசாமி வெளியே வந்து நின்றார். தொடர்ந்து வீட்டுக்குள் இருந்தே பட்டாசுப் பெட்டிகள் அணி வகுத்து வந்தன. போயஸ் கார்டனில் முந்தைய நாளே வாங்கிவைக்கப்பட்டு இருந்தது பட்டாசு.

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

பெரும்பான்மைத் தொகுதிகளின் முன்னணி நிலவரம் வெளியாக, 'ஆட்சி உறுதி’ என்று தெரிந்ததும், போயஸ் கார்டனின் இரும்புக் கதவு திறந்து தொண்டர்களுக்கு வழிவிட்டது. இப்படி இதற்கு முன் தொண்டர்களை உள்ளே அனுமதித்ததே இல்லை. தொடர்ந்து தொண்டர்களுக்கு பால்கனி தரிசனம் கொடுத்தார் ஜெயலலிதா. 1989-க்குப் பிறகு இப்போதுதான் பால்கனியில் நின்று போஸ் கொடுத்து இருக்கிறார் ஜெயலலிதா!

தலைவர்களுக்கு மரியாதை!

று நாள் லாயிட்ஸ் சாலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வெயில் தணிந்த நேரத்தில் வந்தார். உடல் எடை காரணமாக, சிறிது நாட்களாக நடப்பதற்கே சிரமப்படுகிறார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் உயரம் குறைந்த படிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

தொடர்ந்து, அண்ணா சாலை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அருகே இருக்கும் அண்ணா சிலைக்கு மலர் தூவினார். அப்போது மறந்தும் புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தின் மீது அவர் பார்வை திரும்பவில்லை. அப்படியே, அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதி களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரியார் சிலைக்கும் மாலை போட்டார்.  இந்த மரியாதை நடைமுறையில் ஒன்று மட்டும் மிஸ்ஸிங். கடந்த முறை பெரியார் திடல் பெரியார் சமாதிக்குச் சென்ற ஜெயலலிதா, இந்த முறை வீரமணி மீதான கோபத்தில் பெரியா ரையும் புறக்கணித்தார்!

கவர்னர் மாளிகை!

முதல்வராக ஒரு மனதாக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கார்டனுக்கு ஓ.பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் எடுத்துச் சென்றார்கள். கொஞ்ச நேரத்திலேயே கவர்னர் பர்னாலாவைச் சந்திக்க காரில் கிளம்பினார் ஜெயலலிதா. கவர்னருக்குப் பூங்கொத்து கொடுத்தார். கவர்னரும் அவருடைய உறவினர்களும் ஜெயலலிதாவுக்கு பூங்கொத்துகள் வழங்கினார்கள். விழாக்களில் கலந்துகொள்ளும்போது ஜெயலலிதாவுக்குத் தனியாகப் பெரிய நாற்காலியைத்தான் பயன்படுத்துவது வழக்கம். கவர்னர் மாளிகைக்கு ஜெயலலிதா வந்தபோது, அங்கே இருந்த சின்ன நாற்காலியில் கொஞ்சம் சிரமப்பட்டு தான் அமர்ந்தார்.

ஆறு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பர்னாலாவைச் சந்தித்தார். சில நிமிடங்களி லேயே இந்த சந்திப்பு முடிந்து, ஜெயலலிதா உடனே கிளம்பினார். கவர்னரின் செயலாளர் தயங்கியபடி, ''புரோட்டோகால்படி கவர்னர் எழுந்து நின்ற பிறகுதான் நீங்கள் எழுந்து செல்ல வேண்டும். இது மரபு'' என்று சொல்ல... உடனே மீண்டும் பர்னாலா அருகில் போய் அமர்ந்தார் ஜெயலிதா. பர்னாலா எழுந்து உள்ளே சென்ற பிறகு, ஜெயலலிதா கிளம்பினார்.

பதவியேற்பு வைபவங்கள்!

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

•  மேடையில் அமைச்சர்களுக்கு எல்லாம் ஒரே மாதிரியான நாற்காலிகள் போட, ஜெயலலிதாவுக்கு மட்டும் ஸ்பெஷல் குஷன் நாற்காலி. விழா தொடங்குவதற்கு முன்பு கீழே முன் வரிசையில் அமைச்சர்களாக பதவியேற்க வந்தவர்கள் அமர்ந்து இருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பு எல்லோரும் மேடை ஏறினார்கள். அவர்களிடம் ''யாரும் அம்மா வின் காலில் விழக் கூடாது'' என்று கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்தார் ஓ.பி.

•  போலீஸ் அதிகாரிகள் எல்லாம் கடைசி வரிசைக்குத் தள்ளப்பட்டார்கள். முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் மட்டும் கோட் சூட்டில் முன் வரிசையில் இருந்தார். தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சி.பி.ஐ. அகில இந்தியச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் மோடி, அஜித் சிங் என்று தமிழகத்தைத் தாண்டிய பிரபலங்களும் வந்திருந்தார்கள். மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா போனதால், ஜெயலலிதாவுக்காக மோடி வந்திருந்தார். ஆனாலும், மோடி வருகைக்கு இன்னொரு காரணம் சொல்கிறார்கள். தமிழகத்தில் மின் வெட்டுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, குஜராத்தில் உபரியாகக் கிடைக்கும் மின்சாரத்தை வாங்க ஜெயலலிதா நினைக்கிறாராம். ஜெயலலிதா, விஜயகாந்த்துக்கு அடுத்து கைதட்டல்களை அள்ளியவர் மோடிதான்.

•  அரங்கத்தில் இருந்த நாற்காலிகளில் நம்பர்கள் எழுதி ஒட்டி இருந்தார்கள். முன் வரிசையில் நம்பர் 1 என்று எழுதப்பட்ட இருக்கையில் சசிகலா அமர்ந்தார். அவர் வருவதற்கு முன்பு, அந்த இருக்கையில் சோ உட்கார்ந்து இருந்தார். அதன் பிறகு அவர் மூன்றாவது எண்ணுக்கு மாறினார். சசிகலா வுக்கும் சோவுக்கும் இடையே இருந்த இரண்டாவது எண் இருக்கை காலியாகவே இருந்தது. அந்த இருக்கையில் சசிகலாவும் சோவும் கைகளை ஊன்றியபடி கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த இரண்டாவது எண் இருக்கை,  விஜயகாந்த்துக்கு என்று பேச்சுகள் கிளம்பின. விஜயகாந்த் வந்தபோது,மோடி, நாயுடு, பரதன் ஆகியோரிடம் கை குலுக்கிவிட்டு, கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்து விட்டார். இரண்டாவது எண் இருக்கையில் கடைசியில் சுலோச்சனா சம்பத்தான் அமர்ந்தார்.

சோவும் சசிகலாவும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்ததைப் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். ''இந்த ஆட்சியை உருவாக்கினவங் களே இவங்க ரெண்டு பேர் தான்'' என்று ஒருவர் கமென்ட் அடித்தார்.

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

'விஜயகாந்த்தை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவந்தால்தான் வெற்றி சாத்தியம்’ என்று சொல்லி, ஜெயலலிதாவைச் சம்மதிக்கவைத்தவர் சோ. அதைப் பக்குவமாகப்  பல முறை புரியவைத்தவர் சசிகலா. இதனால் கருணாநிதியால் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் சோ. ''வெற்றிச் சூத்திரத்தை சோவும், கட்சியின் வேட்பாளர் தேர்வை சசிகலாவும் செய்து கொடுத்து, ஜெயலலிதாவை வெற்றி மனுஷியாக மாற்றினார்கள்'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

ஜெயலலிதா காதில் புது கம்மல்!

இலையைத் துளிர்க்கவைத்த இரண்டு தலைகள்!

தவியேற்புக்காகப் புத்தம் புதுப் புடவையில் வந்திருந்தார் ஜெயலலிதா. அவருடைய தலை முடியின் முன் பகுதி கொஞ்சம் நரைத்து இருக்கும். ஆனால், பதவியேற்புக்காக டை அடித்து ஃப்ரெஷ் லுக்கில் வந்தார். இன்னொரு பெரிய மாற்றம்... ஜெ காதில் மின்னிய கம்மல். 1996 தேர்தல் தோல்விக்குப் பிறகு நகை அணிவதையே நிறுத்தி இருந்தார் ஜெயலலிதா. அதன் பிறகு, இன்றைக்குத்தான் ரொம்பவும் சிறிய சைஸில் கல் வைத்த கம்மல் அவருடைய காதில் டாலடித்தது.

அவரது முகம் அதைவிட டாலடித்தது!