என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

ஆம்! நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க. அரசு, பொது நல நோக்கங்களில் இருந்து விலகி, சொந்த நலனை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு எப்படி எல்லாம் தங்களை அல்லலில் ஆழ்த்தியது என்பதைத் தமிழக மக்கள் மறக்கவில்லை. அதனால் எழுந்த சினத்தை அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் காட்டியதன் விளைவுதான் - 2011 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்!

சகல துறைகளிலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தைப் பரவவிட்டு, அதற்கு ஆதரவாக அதிகார பலத்தை வரைமுறையின்றிப் பிரயோகித்து, மாநிலத்தை தி.மு.க. அரசு எப்படி எல்லாம் பாதிப்புக்கு ஆளாக்கியது என்பதை மனசாட்சி உள்ள ஊடகங்கள் சுட்டிக் காட்டிக்கொண்டே இருந்தன. மக்களின் மனநிலையை உள்வாங்கித் தரும் கண்களாகவும் காதுகளாகவும் ஊடகங்களைப் பார்க்க வேண்டிய தி.மு.க. அரசோ, ஆக்கபூர்வமான விமர்சனங்களைப் புறந்தள்ளியது. அரசுப் பொறுப்பில் இருந்த தி.மு.க-வின் தலைமை ஒரு படி மேலே போய், அந்த ஊடகங்களின் மீதே உள்நோக்கம் கற்பித்தது. சாதிச் சாயம் பூசி, அற்ப திருப்தி அடைந்தது.

தலையங்கம்

பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, தி.மு.க-வின் கண்கள் காலம் கடந்தாவது திறந்து இருக்கும் என நம்புவோம்.

மக்களின் பேராதரவுடன் இப்போது பொறுப்பேற்று இருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு - அதை வழி நடத்தப் போகும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, விகடன் தன் உளப்பூர்வமான வாழ்த்துக்களை உரித்தாக்குகிறான். 'இதை என்னுடைய வெற்றியாகப் பார்க்கவில்லை. தமிழக மக்களின் வெற்றியாகவே பார்க்கிறேன்' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதையும், இங்கே கவனமாகப் பதிவு செய்ய விரும்புகிறான் விகடன்.

காரணம், கடந்த காலத்தின் நிகழ்வுகளில் இருந்து முதல்வர் ஜெயலலிதா எடுத்துக்கொள்வதற்கான பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அரசுத் திட்டங்களில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், குடும்ப ஆதிக்கம், தனி மனிதப் புகழ் மயக்கம், ஊடக அடக்குமுறை ஆகிய அபாய குணங்கள் துளியும் இந்த ஆட்சியை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது.

'இனி, உங்கள் முகத்தில் நான் புன்னகையை மட்டுமே பார்ப்பேன்' என்று அவர் கொடுத்துள்ள உறுதிமொழி நிறைவேற வேண்டும் என்றால், மின் வெட்டு தொடங்கி மக்கள் அனுபவித்த துன்பங்கள் எதுவும் மறுபடி நேராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் உடனே இறங்க வேண்டும்.

அமைச்சர் பிரதானிகளும், அரசு அதிகாரிகளும், ஆளும் கட்சி நலம் விரும்பிகளும் தன் கவனத்துக்குக் கொண்டுவரும் பிரச்னைகளைத் தீர ஆராய்ந்து, அவற்றுக்கான தீர்வைத் தேடும்போது, அதில் மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறதா என்பதையும் முதல்வர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஊடகங்களையும் அரசு இயந்திரத்தின் ஓர் அங்கமாகவே பாவிக்க வேண்டும். அவை சுட்டிக் காட்டும் குறைபாடுகளை எதிர்ப்புக் கருத்துக்களாக நினைத்து ஒதுக்கிவிடாமல், அந்த விமர்சனங்களில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து... விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

'தி.மு.க.' என்பதே 'திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி'யின் குடும்பக் கட்சியாக மாறிப் போனதுதான், மக்களின் இந்த வாக்குப் புரட்சிக்கு முக்கியக் காரணம் என்பதை மீண்டும் மீண்டும் முதல்வர் ஜெயலலிதா நினைவில் நிறுத்த வேண்டும். இதற்கு முந்தைய அ.தி.மு.க. ஆட்சிகளின்போது கிளம்பிய 'நிழல் அதிகார'க் குற்றச்சாட்டுகளையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த முறை அதற்கு ஜெயலலிதா துளியும் இடம் தந்துவிடக் கூடாது. தன்னைச் சார்ந்து இருக்கும் எவரும், அரசு விவகாரங்களில் தலையிடாமல் கண்டிப்போடு பார்த்துக்கொண்டால்தான், மக்கள் அளித்த இந்த வெற்றியின் பலனை மக்களுக்கு முழுமையாகத் திருப்பி அளிக்க முடியும்!

நடந்து முடிந்த தி.மு.க. ஆட்சியின் தவறுகளுக்குப் பரிகாரம் தேடும்போது... கடுமையான சில நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை. அதில் அரசியல் உள்நோக்கம் இன்றி, பொது நலனும் தெளிவான சட்டப் பார்வையும் மட்டுமே இருந்தால், அரசுக்கு ஆதரவு மேலும் பலப்படும்.

புதிய முதல்வர் பொறுப்போடு அணுக வேண்டிய முக்கியமான மற்றொன்று - இலவசத் திட்டங்கள்! இந்தத் தேர்தலுக்கென அறிவித்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதோடு, இவை முடியட்டும். மக்களின் தட்டில் இலவச மீன்களைப் போட்டு, அவர்களைச் சோம்பேறிகள் ஆக்கி வீட்டுக்குள் முடக்குவதற்குப் பதிலாக, அவர்கள் கைகளில் தூண்டிலைக் கொடுத்து தானாகவே உழைத்துப் பசியாறுவதற்கான வாய்ப்புகளே வேண்டும். கசப்பாக இருந்தாலும், கட்டாயப்படுத்தியாவது, 'மழை நீர் சேகரிப்பு’ பாணியில், நல்ல பல திட்டங்களை அமல்படுத்தி, தமிழன் தன்மானத்தோடு தலை நிமிர வழி வகுக்க வேண்டும். இலவசங்கள் போகட்டும்... வளர்ச்சி வரட்டும் என்பதே இனி இலக்காக இருக்கட்டும்.

அதே சமயம், ஏழைகள், அடித்தட்டுப் பெண்கள், முதியவர்கள், மாணவர்கள் ஆகியோரின் நலனுக்காகக் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடருவதுதான் முறை. இதில், 'ஏட்டிக்குப் போட்டி' அரசியல் தேவை இல்லை!

சவால்கள் ஏராளமாகக் காத்துக்கிடக்கின்றன. வாக்களித்த மக்கள் அளவற்ற எதிர்பார்ப்போடு, அரசுக்குத் தோள் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையைச் சிறப்புற நிறைவேற்றி... சவால்களையே சாதனைகளாக மாற்ற வேண்டும் புதிய அரசு.

மக்களோடு சேர்ந்து விகடனும் காத்திருக்கிறான், நம்பிக்கையோடு!