Published:Updated:

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’ #WhatisEducation?

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’  #WhatisEducation?
’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’ #WhatisEducation?

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’ #WhatisEducation?

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’  #WhatisEducation?

பிரமிக்கதக்கதாய் இயற்கை இருக்கிறது. கவனம் மிக்க கண்களுக்கு எந்தவொரு கணமும் அழகுதான் என்கிறார் எமர்சன். ஆனால், நமக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை... நம் கவனம் வேறு எங்கோ குவிந்திருக்கிறது. நாம் கற்பிதம் செய்து கொண்ட, ஏற்படுத்திக்கொண்ட எதிர்காலம், பணம், அது சார்ந்த அழுத்தங்களை நம் அடுத்த தலைமுறையின் மீதும் பூசிவிட பள்ளிகளின் வாசலில் வெயில் அப்பிக் கிடக்கிறார்கள் பெற்றோர்கள்.  பள்ளிகளில் இடமில்லை என்றால் வெடித்து அழுகிறார்கள். ஏதோ வாழ்க்கையில் முற்றாக தோல்வியுற்றதாக ஒரு தாழ்வு மனப்பான்மைக்குச் செல்கிறார்கள். இதை தங்கள் குழந்தைகளிடமும் கடத்துகிறார்கள்!

வாழ்க்கையும், கல்வியும் அவ்வளவு சிக்கலானதா ? எல்லையற்ற பிரபஞ்சத்தில், இந்தப் பூமி ஒரு தூசென்றால், அதில் வாழும் நாம் ஒன்றுமில்லை. ஆனால், அனைத்தையும் நாமே சிக்கலாக்கி கொண்டோம். அதுவும் இந்த கோடை காலத்தில், வெயில் தரும் இறுக்கத்தைவிட மிகக் கொடுமையானது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி சார்ந்து அடையும் மன இறுக்கம்.  ஆனால், அவர்கள் மீதுமட்டும் பிழையில்லை. இது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. பல நூற்றாண்டுகளாக நாம் ஏற்படுத்திய, நமக்கு ஏற்படுத்தப்பட்ட மொத்த அழுத்தங்களும், நம் குழந்தைகள் தலையில் விடிகிறது. நாம் குழந்தைகளின் தற்கொலைகளையும் சுலபமாகக் கடக்கப் பழகிவிட்டோம். இது பேராபத்தானது!
 
பள்ளி கல்வி மட்டும்தான் அறிவை விரிவடையச் செய்யும் இடமா ? பள்ளிக் கல்வி அவசியம்தான். ஆனால், அதற்காக நாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா? இந்நிலையில் சில ஆளுமைகள், கல்வி குறித்து தங்கள் பார்வையை, அவர்கள் அனுபவங்களை  vikatan.com-ல் வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் போதகர்கள் அல்ல. ’தாங்கள் செல்லும் வழிதான் சரி... எங்களைப் பின் தொடருங்கள்’ என்று சொல்லும் இறைத்தூதர்களும் அல்ல.  ஆனால், கல்வி குறித்து தாங்கள் நம்பும் விஷயத்தை முன் வைக்கிறார்கள்!

முதலில், நாடக கலைஞர், நடிகர், பயிற்சி விவசாயி என்று பல அடையாளங்களை தாங்கி நிற்கும் குரு சோமசுந்தரம். ஆரண்ய காண்டத்தில் தன் மகனிடம் படாதபாடு பட்டவர், ஜிகர்தண்டாவில் சேதுவை ஜிப்ரீஸ் மொழி மூலம் படுத்தி எடுத்தவர். இப்போது ’என்னங்க சார் உங்க சட்டம்..?’ என்று ஜோக்கராக கேள்வி கேட்கிறார்.

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’  #WhatisEducation?

இதையெல்லாம் தாண்டி அவருக்கு கல்வி குறித்த ஒரு புரிதல் இருக்கிறது. தன் மகளின் கல்விக்காக சென்னையை விட்டு திருவண்ணாமலையில் வயல்வெளிகள் சூழ்ந்த ஒரு 200 சதுர அடி வீட்டில் தங்கி இருக்கிறார். அவருடன் மஞ்சள் பூசிய மாலை பொழுதில் நடந்த உரையாடல்...

முதலில் உங்களிடமிருந்தே துவங்குகிறேன். அது என்ன பயிற்சி விவசாயி?

(மெல்லிய சிரிப்பு முகமெங்கும் படர்கிறது) நான் சில காலமாக திருவண்ணாமலையில் ஒரு 30 ஏக்கர் விவசாய நிலத்தில் வேலை செய்கிறேன். நான் விவசாயம் முன்பே கற்றவன் அல்ல. அங்குதான் பயிற்சி பெறுகிறேன். அதனால்தான் பயிற்சி விவசாயி.

உங்களுடைய களம் சென்னை. உங்களுக்கான வாய்ப்புகள் அனைத்தும் இங்குதான் இருக்கிறது. பின்பு ஏன் திருவண்ணாமலை.  என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?

என் மகள் பருவதவர்த்தனி திருவண்ணாமலையில் இருக்கும் மருதம் பள்ளியில் படிக்கிறாள். அவளுக்காக தான் அங்கு இடம் பெயர்ந்தேன். அவளைக் காரணமாகச் சொன்னாலும், நான் அங்கு நிஜமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அடிக்கோடிட்டுக் குறித்துக் கொள்ளுங்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 30 ஏக்கர் நிலத்தின் மத்தியில் இருக்கும் 200 சதுரஅடி வீடு. வாடகை வீடுதான். மழை பெய்தால் மட்டும்தான் வீட்டுக்குள் செல்வோம். மற்ற நேரங்களில் மரநிழல்கள்தான் எங்கள் கூடு. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! 

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’  #WhatisEducation?

நீங்கள் இப்போது ஒரு திரை நடிகர். வசதிகளும், வாய்ப்புகளும்  இருக்கிற நடிகர். உங்களிடம் நிச்சயம் உங்கள் குழந்தையை தரமான பள்ளியில் சேர்க்கிற அளவிற்கு பொருளாதார வசதி இருக்கும். பின்பு ஏன் திருவண்ணாமலை?

இது பணம் சார்ந்தது மட்டுமல்ல. வாழ்தல் சார்ந்தது. இங்கு பள்ளிகள் குழந்தைகள் மனதில் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் விதைக்கிறது. இந்தக் கல்வி அறிவு எந்த மாற்றத்தையும் உண்டாக்குவதில்லை. நான் பள்ளி, கல்லூரி முடித்து வெளியே வந்தபோதுதான் உணர்ந்தேன், சமூகத்துடன் நான் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன் என்பதை! 

என்ன சொல்கிறீர்கள்... கல்வி எந்த அறிவையும் வளர்க்கவில்லை என்கிறீர்களா ?

நிச்சயம் வளர்க்கிறது. போட்டியும், பொறாமையும். சக மனிதன் மீது அவநம்பிக்கையை விதைக்கிறது. அவன் எப்போது நம்மைக் கீழே தள்ளிவிடுவான் என்ற அச்சத்தைதான் இந்தக் கல்வி தருகிறது. ஆனால், இந்த பண்புகள் எதுவும் இயற்கையானது அல்ல! 

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’  #WhatisEducation?

ஆனால், இந்த கல்வியை கற்று வரும் குழந்தைகள் தானே, சமூகத்தில் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள்?

எதை வெற்றி என்கிறீர்கள்?  குழந்தைகள் மனதில் உள்ளதை பேசாமல், பணமும் பெயரும் குவித்து என்ன பயன்? நான் நாடகக் கலைஞன். பல பள்ளிகளில் பயிற்சி பட்டறைகள் நடத்தி இருக்கிறேன். குழந்தைகள் தங்கள் மனதில் பட்டதை பேச எவ்வளவு தயங்குகிறார்கள், பயப்படுகிறார்கள் என்று தெரியுமா ? இந்தப் பள்ளிகளும், அவர்களின் கல்வி முறைகளும் குழந்தைகளின் சிந்தனையை சிதைத்துவிட்டது. கிளைகளும், ஆழமாக வேர்களும், இலைகளும், காய்களும் , கனிகளும் கொண்டதுதான் மரம். உங்கள் இஷ்டத்திற்கு  அனைத்தையும் வெட்டிவிட்டு அதை மரம் என்று எப்படி அழைப்பீர்கள்?

இன்றைய சமூக சவால்களை எதிர் கொள்ள அதுதானே தேவையாக இருக்கிறது?

அப்படி நாமே நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மை அப்படி இல்லை. 14 வயது வரையுள்ள குழந்தைகளின் பருவம் மிக முக்கியமானது. அதிலும் குறிப்பாக 5 வயது வரை. அப்போதுதான் உடல் சார்ந்த பல மாற்றங்கள் நடக்கும். அப்போது நாம் அவர்களுக்கு எத்தகைய உலகைக் காட்டுகிறோம் என்பது மிக முக்கியம். அவர்கள் எதைக் கற்கிறார்கள் என்பது முக்கியம். அவர்களை அந்த வயதில் சுதந்திரமாக சிந்திக்கவிட வேண்டும். அதற்கான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்! 

மருதம் பள்ளியில் இதுவெல்லாம் நடக்கிறதா?

ஆம்.  குறிப்பாக சீருடை, ரேங்க் கார்ட் போன்ற அபத்தங்கள் இல்லை. உண்மையில் அவர்கள் முதிர்ச்சி அடைகிறார்கள். முதிர்ச்சி என்றால் தவறான பொருளில் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் புரிதலில் முதிர்ச்சி. குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே இருக்கிறார்கள்.

’’பள்ளிக் கூட கல்வி குழந்தைகளுக்கு அவசியமா?’’  #WhatisEducation?

உங்களுக்கு இது சாத்தியம். ஆனால், ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு இது ரிஸ்க் இல்லையா...? அதாவது வீடு, கார் என்ற கனவுகளை சுமந்து வாழும், சமூகத்தில் தமக்கான அங்கீகரத்தை தேடும் அவர்களுக்கு ?

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் எதார்த்தங்களைத்தான் பேசுகிறேன். இதைவிட, அதுதான் ரிஸ்க். உங்கள் குழந்தைகள் மீது பல அழுத்தங்களை அந்தப் பள்ளிகள்தான் சுமத்துகிறது. அங்கு, விளைவுகள் மிக மோசமாகக் கூட போகும் வாய்ப்புகள் அதிகம். இங்கு குழந்தைகள் சுதந்திரமாக யோசிக்கிறார்கள். சமூக பிரச்னைகளை புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இது போன்ற மாற்று பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகள்தான் திடமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்த சூழலிலும் மிளிர முடியும்.

இது போன்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் ?

சகமனிதனை நம்புகிறார்கள். இங்கு ஒரு உணர்வு பூர்வமான பந்தம் ஏற்படுகிறது. சமூக வளர்ச்சிக்கு அது தானே மிக முக்கியம்.  இங்கு பயம் இல்லை.  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், குழந்தைகள் விரும்பி பள்ளிக்குச் செல்கிறார்கள். நான் என் குழந்தையை வைத்தே சொல்கிறேன். அவள் பள்ளிக்கு செல்வதறக்காக என்றுமே அழுததில்லை. அதே நேரம்,  உயர்தர பள்ளியில் படிக்கும் பக்கத்து வீட்டு குழந்தை தினமும் அழுது கொண்டே செல்கிறது. இந்த ஒப்பீட்டிற்கு மன்னிக்கவும். ஆனால், நீங்கள் மகிழ்வாக ஒரு வேலையை செய்யும்போதே அதன் விளைவும் சிறப்பானதாக இருக்கும்.

ஆனால், இந்த கார்ப்பரேட் உலகின் சிக்கல்களை வெற்றி காண, இந்த நவீன பள்ளிகள் தானே உதவுகிறது?

(பலமாகச் சிரிக்கிறார்)  மா மரத்தில் பழங்கள் அதிக சுவையாக காய்க்க வேண்டும் என்பதற்காக வேர்களில் சர்க்கரை தண்ணீரை ஊற்றுகிறார்கள் இந்த நவீன பள்ளிகள். அது மரத்துக்கு ஆரோக்கியம் என்று நம்பும் மனநிலையை என்னவென்று சொல்ல!? 

இறுதியாக,  “குழந்தைகளை நீங்களே சுமந்து கொண்டு திரியாதீர்கள்.சுதந்திரமாக சிந்திக்கும்  குழந்தைகள் தான், அதிகம் கற்கும். சொல்லப்போனால்,  அவர்களுக்கு கற்று கொடுக்க நம்மிடம் எதுவும் இல்லை, அவர்களிடம் கற்று கொள்ளதான் நிறைய இருக்கிறது.  பயப்படாதீர்கள். சுதந்திரமாகச் சிந்திக்கும் குழந்தைகள் தான், கார்ப்பரேட் உலகின் சிக்கல்களிலும் வெற்றி அடைவார்கள்!’’ 

(கல்வி முறை, பள்ளிகள் குறித்த வெவ்வேறு ஆளுமைகளின் பேட்டி தொடரும்)

#WhatisEducation?

- மு. நியாஸ் அகமது
  

அடுத்த கட்டுரைக்கு