Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

அணு அரசியலும் தமிழகத்தின் 'தாழ்ந்த’ நிலையும்... 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீங்கள் எல்லோரையும் கொஞ்ச நாட்கள் ஏமாற்றலாம்... கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம்... ஆனால், எல்லோரையும்... எப்போதும் ஏமாற்ற முடியாது!''

- ஆபிரகாம் லிங்கன்

தமிழக அரசியல் கட்சிகளின் அணு சக்தி நிலைப்பாடு, இந்தியாவின் மற்ற கட்சிகளின் நிலையில் இருந்து வேறுபட்டது அல்ல. கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே அரசக் கூட்டமைப்புக்கு இணங்கி, அதன் வரையறைக்கு உள்ளேயே இயங்குவதால், அணு சக்தித் திட்டங்களை வளர்ச்சித் திட்டங்களாக, பாதுகாப்புத் திட்டங்களாகவே பார்க்கின்றனர். அதனால், இந்தத் திட்டங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்பது, தேவையற்றதாகவும் தவறானதாகவும் ஆகிறது. எனவே மத்திய அரசும், அணு சக்தித் துறையும் செய்வதை அப்படியே ஆமோதித்துவிட்டு, 'நமக்கு ஏன் வம்பு?’ என்று ஒதுங்கிக்கொள்கின்றனர். அணு சக்தித் துறை பலமானதாக ஆகும்போது, அந்த நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் அந்தத் துறையின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதற்கு ஜப்பானும் பிரான்ஸும் சிறந்த உதாரணங்கள்.

அணு ஆட்டம்!

சக்தி மிக்க இந்தத் துறையைப் பகைத்துக்கொள்ளாது, நாட்டின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் எதிரி என்ற அவப் பெயரை சம்பாதித்துக்​கொள்ளாது கவனமாகக் கையாளுகின்றனர் கட்சிகளும், தலைவர்களும்.

பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸும், கட்சித் தலைவர் ஜி.கே.மணியும் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டேன். அப்போது மணியிடம், கூடங்குளம் அணு மின் திட்டப் பிரச்னைபற்றிப் பேசினேன். அவர் என்னை ராமதாஸிடம் அறிமுகம் செய்துவைத்து, அவரிடம் பேசச் சொன்னார். சுருக்கமாகப் பேசி, 'கூடங்குளம் பிரச்னையில் ஒரு நிலைப்பாடு எடுங்கள்!’ என்று விண்ணப்பித்தேன். என் கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக... ஆனால், அர்த்தபுஷ்டியோடு சிரித்தார். 2007-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் நடந்த பா.ம.க. நெல்லை மாவட்ட மகளிர் சங்க

அணு ஆட்டம்!

மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், ''கூடங்குளம் அணு மின் நிலையத்தால் இங்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி பலர் மனு கொடுத்தனர். உங்​களுடைய கருத்துகளை நான் டெல்லி சென்று அங்கு உள்ளவர்களிடம் கூறி, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்...'' என்றார்.

2007, மே மாதம் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, ''கூடங்குளம் அணு மின் திட்டத்தின் 1,000 மெகா வாட் திறனுடைய முதல் பிரிவின் இயக்கமானது, டிசம்பர் 2007-ல் இருந்து டிசம்பர் 2008 என்று தாமதமாகிறது. இந்தக் கால தாமதம் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்தும். எனவே, பிரதம மந்திரியிடம், இந்த அணு மின் திட்டத்தை விரைந்து இயக்கிவைக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்!'' என்று அங்கலாய்த்தார்.

அணு ஆட்டம்!

2007, டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மேல் சபையில் பேசிய தனது கன்னிப் பேச்சில் கனிமொழி, ''2020-ம் ஆண்டுக்குள் 30,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க, நாம் பேராவல் கொண்டுள்ளோம்.

அணு ஆட்டம்!

அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தம் நிறைவேறாமல், அந்தக் கனவு கை கூடாது. இந்த ஒப்பந்தம், அணு ஆயுதப் பரவலாக்கத் தடைச் சட்டத்தில் கையெழுத்திடாது அணு மின் தொழில்நுட்பத்தை நாம் பெறவும், 33 வருடத் தடை உத்தரவைக் களைந்து ராணுவ அணுத் திட்டங்களை நடத்தவும் நமக்கு உதவும் என்று எனது கட்சியும் நானும் உறுதியாக நம்புகிறோம்...'' என்றார்.

இன்னொரு புறம் தெளிவற்ற நிலையில் தத்தளிக்கும் கட்சிகளைப் பார்க்கலாம். 2009 அக்டோபரில் அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு சார்பாக டெல்லியில் பேரணி நடத்தினோம். அங்கு வந்த 'புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியிடம், எங்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசும்படி கேட்டுக்கொண்டபோது, ''கூடங்குளம் அணு மின் திட்டத்தை உடனே மூட வேண்டும்; பொருள் இழப்புபற்றிக் கவலைப்பட வேண்டாம்; அரசியல்வாதிகள் ஒரு நாளில் திருடும் பணத்தைத்தான் நாம் இழப்போம்!'' என உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். ஆனால், ஓரிரு மாதங்களுக்குள் நிலையினை மாற்றிக்கொண்டு கூடங்குளத்தில் அவர் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், ''கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கு வழங்காவிட்டால், தொடர் போராட்டம் நடைபெறும்!'' என்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணு ஆயுதங்களை எதிர்த்தாலும், அணு உலை​களை ஆதரித்தே வருகிறது. வளர்ச்சி, விஞ்ஞானம் என்று பேசித் திரிந்தவர்கள், 2008 அக்டோபர் 10-ம் தேதி கையெழுத்து இடப்பட்ட இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டுக்குப் பின்னர்தான், அணு மின்சாரத்தின் கடுமையான உற்பத்திச் செலவு, ஆபத்துகள்பற்றிப் பேசுகின்றனர். பிரகாஷ் காரத் மற்றும் முக்கியத் தலைவர்களோடு, நானும் நண்பர்களும் நடத்திய விவாதங்கள், உரிய பலனைத் தரவில்லை.

ம.தி.மு.க-வின் கட்சிப் பத்திரிகையான 'சங்கொலி’ இதழில் பொதுச் செயலாளர் வைகோ, ''கல்பாக்கத்தில் புதிதாக வர்த்தக ரீதியில் அமைக்கப்பட இருக்கும் இரண்டு 500 மெகா வாட் அதிவேக ஈணுலைகளைக் கைவிடவும், இருக்கின்ற அணு உலைகளை ஆபத்து இன்றித் தொடர்ந்து பராமரிக்கவும், விஞ்ஞானிகள் மின்சாரம் தயாரிப்பதற்கான புதிய வழி வகைகளைக் கண்டறியவும் கேட்டுக்கொள்கிறேன்!'' என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கை கூடங்குளம், நியுட்ரினோ பற்றிப் பேசவே இல்லை.

அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும், மக்களோடும் மக்கள் பிரச்னைகளோடும் உள்ள தொடர்பு தேய்ந்து வருவது கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம். உதாரணம், 2011 மே 19-ம் தேதி வெளியான அதிர்ச்சியான தகவல். கடந்த இதழில் 'தேனியில் ஒரு 'திடுக்’ என்ற தலைப்பில் தேனி நியூட்ரினோ திட்டம்பற்றி எழுதி இருந்தோம். அந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கிவிட்டது என்பதுதான் அந்தத் தகவல்!

இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்​பேற்று இருக்கின்ற அ.தி.மு.க. என்ன செய்யப்​போகிறது?

அணு சக்திக்கு எதிரான போராட்டத்துக்கு, ஒரு முன்னணி அரசியல்வாதியை அழைக்கலாம் என்று எண்ணி, சில வருடங்களுக்கு முன் மேனகா காந்தியைத் தொடர்புகொண்டேன். 'அணு சக்தியை எந்தப் பெண்ணும் ஆதரிக்க மாட்டாள்...’ என்று கடுமையான ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். 'வீதிக்கு வந்து இதை உரக்கச் சொல்லுங்களேன்’ என்று அழைத்தபோது, 'விருட்’டென்று விலகிச் சென்றார். இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம்!

தேனி நியூட்ரினோ திட்ட அபாயங்கள்

நியூட்ரினோ நோக்குக் கூடம் என்ற சுரங்கம் அமைக்க, பாரம்பரியமாகப் பயிர் செய்து வரும் வளமான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும். சுரங்கம் தோண்டும் வண்டிகள், இயந்திரங்கள் வருவதற்கான பாதைகள் போடவும் நிலங்கள் எடுக்கப்படும்.

சுரங்கம் தோண்டும்போதும், கற்களை உடைக்கும்போதும் எழும் தூசி, ஏராளமான பாறைக் கழிவுகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் கொட்டப்படும்.

கல் பாறைகளில் சுரங்கம் தோண்ட வைக்கும் வெடிகளாலும், இயந்திரங்களாலும், எறும்புகள் முதல், மான்கள், சிறுத்தைகள், யானைகள் வரையுள்ள உயிரினங்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்.

சுரங்கத்தைச் சுற்றி 20-30 கி.மீ சுற்றளவுக்கு, மக்களும், கால் நடைகளும் நடமாட முடியாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். ஆடு, மாடுகள் மேய்க்க முடியாது, மலை ஏற முடியாது.

இந்தத் திட்டம் மத்திய அரசின் அணு ஆய்வுத் திட்டம் என்பதால், தேவாரம் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, ராணுவக் களமாக மாற்றப்படும்.

ஹெலிபேடுகள், சிறு விமான தளங்கள் அமைக்கப்படலாம். மக்களின் அன்றாட வாழ்க்கையும், நடமாட்டமும், முடக்கப்பட்டு, சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ வேண்டி இருக்கும்.

இந்த ஆய்வுக்கூடச் சுரங்கம் அருகே உள்ள ஆனை இறங்கல், இடுக்கி போன்ற அணைகள் பாதிக்கப்படலாம். இந்த அணைகளின் நீர் அழுத்தத்தால் சுரங்கமே பாதிக்கப்பட்டு, திட்டம் கைவிடப்பட வேண்டி வரலாம்.

அனைத்துக்கும் மேலாக இந்த ஆய்வுச் சுரங்கத்தில் இருந்து அபாயகரமான வேதியியல் பொருட்களும், விஷ வாயுக்களும் உருவாகிப் பரவலாம். நியூட்ரினோக்கள் கதிர்வீச்சையும் எழச் செய்யும்!

அணு ஆட்டம்!

சகோதரி எல்சி ஜேக்கப்

நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், கேரளாவில் பிறந்து, தனது 16-வது வயதில் ஜெர்மனிக்குச் சென்று ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டு, பின்னர் அந்த நாட்டிலேயே பாதிரியாராகப் பயிற்சி பெற்றவர் சகோதரி எல்சி. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பியவர் பாதிரியாராகி, சமூக சேவகியாகி, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, விடுதலைகொண்ட மனித நேயம் மிக்க சமூகத்துக்காக உழைக்கும் சீர்த்திருத்தவாதியாக உயர்ந்து நிற்கிறார். மார்த்தாண்டத்தில், 'நவஜோதி’ எனும் அமைப்பை நடத்தி வரும் இவர், பெண்கள் விடுதலைக்கு உழைப்பவர். உலக சமூக மாமன்றம் உள்ளிட்ட பல இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டவர். அணு ஆயுதம், அணு சக்தி போன்றவற்றுக்கு எதிராக உழைக்கும் உணர்வுபூர்வமான போராளி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism