Published:Updated:

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!
##~##

''மதுரையைத் தாக்கப்போகிறது அரசியல் சுனாமி!'' - வந்ததும் வராததுமாக பீதியைக் கிளப்பினார் கழுகார்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அ.தி.மு.க. ஆட்சியின் ஆரம்ப அதகளம், மதுரையை மையம்கொண்டதாகத்தான் இருக்கும். அதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன. இந்த பயத்தில்தான், தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு முன்பே மதுரை தி.மு.க-வினர் சிலர் அ.தி.மு.க. முகாமுக்கு அப்ளிகேஷன் போட்டுவைத்தார்கள். அவர்களைஎல்லாம்வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்த அ.தி.மு.க. தலைமை, அவர்கள் மூலமாகவே மதுரை தி.மு.க-வை ஆட்டிப்படைத்தவர்களின் வண்ட​வாளங்களைக் கறக்கும் திட்டத்தில் இருக்கிறது!'' என்று முன்னுரை கொடுத்தார் கழுகார்.

''தேர்தல் நேரத்தில், அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் முன் ஜாமீன் வாங்கி இருந்த தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, கடந்த 17-ம் தேதி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து, பிணை கொடுத்து வெளியில் வந்தாரே... அதுவும் இதன் தொடர்ச்சியா?''

''அட, அதெல்லாம் ஜுஜுபி வழக்கு! சென்னையில் இருந்து  போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று, மதுரையில் முகாமிட்டு விசாரணையைத் தொடங்கிவிட்டது. எஸ்.பி. தலைமையில் ஊடுருவி இருக்கும் இவர்கள், மதுரைக்காரர்களின் மகாத்மியங்களைத் தோண்டித் துருவுகிறார்கள். 16-ம் தேதி, ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே, மதுரையின் முக்கிய தி.மு.க. பிரமுகர் வீட்டுக்குள் ஆஜரானவர்கள், ஒரு கட்டுமான கம்பெனியின் பெயரைச் சொல்லி, 'இது உங்களுடையதுதானே’ என்று கொக்கி போட்டார்களாம். உடனே, 'உங்களை யார் அனுப்பினது? எனக்கும் போலீஸ்ல ஆள் இருக்காங்க. உங்ககிட்ட ஐ.டி. கார்டு இருக்கா?’ என்று பழைய பந்தா காட்டினாராம் அந்த நபர். 'மிஸ்டர்... நாங்கள் உங்களை விசாரிக்க வந்து இருக்கிறோம், யார் சொல்லி வந்திருக்கிறோம் என்று கேட்கிற இடத்தில் இப்போ நீ இல்லை!’ என்று சொன்ன பிறகும் மடங்கவில்லையாம். 'எந்த கேஸ்ல என்னைய விசாரிக்கிறீங்க?’ என்று கேட்டாராம். 'என்ன கேஸ்ல விசாரிக்கலாம்? நாமக்கல் கேஸ் சம்பந்தமா விசாரிக்கலாமா?’ என்று வந்தவர்கள் சொல்ல... வியர்த்து விறுவிறுத்துப்​போனாராம் புள்ளி!''

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!

''நீர் சொல்வதைப் பார்த்தால், அப்படி ராஜபோகமான வாழ்க்கையில் இருந்து  இருப்பார்​போல!''

''காலம் மாறிவிட்டதை அவர் அந்த நேரத்தில்தான் உணர்ந்தாராம். அதற்கு மேல் வீறாப்புக் காட்ட முடியாமல், கேட்ட கேள்விகளுக்கு மென்று விழுங்கி பதில் சொன்னாராம். 'நான்கு வருடங்களுக்கு முன்பு, வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்குக்கூட கான்ட்ராக்ட் எடுக்க முடியாத நிலையில் இருந்த இந்த கம்பெனி, இன்று நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்யும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டது எப்படி?’ என்று துளைத்தார்களாம். கைது உறுதி என்று கலக்கத்தில் இருக்கிறார் பிரமுகர்!''

''வேறு என்ன மாதிரியான வழக்குகள் வருமாம்?''

''கடந்த நான்கு வருடங்களில் மதுரைக்குள் மூன்று தியேட்டர்கள் கை மாறி இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பத்திரப் பதிவு அலுவலகங்களையும் குத்தகைக்கு எடுத்துக் காரியங்கள் சாதித்து வந்த இன்னொரு தி.மு.க. பிரமுகரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார். மதுரை மாவட்டப் பத்திரப் பதிவு அலுலகங்களில் செய்திருக்கும் அத்துமீறல்கள் குறித்தும் விசாரிக்கிறார்கள். கட்டடங்கள் இருப்பதை மறைத்து, காலி இடம் என்று காட்டியே மதுரை மாவட்டத்தில் ஏகப்பட்ட சொத்துகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, தன்னுடைய பாக்கெட்டை நிரப்பி இருக்கிறார் அந்தப் பிரமுகர். இதைத் தோண்டித் துருவிய அதிகாரிகள் கடந்த நான்கு வருடங்களில் மதுரை மாவட்டத்தில்

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!

50 லட்சத்துக்கு மேல் பதிவான சொத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டு இருக்கிறார்களாம்.''

''இதெல்லாம், இப்போதைக்கு முடிவதுபோல் தெரியவில்லையே?''

''மதுரை தி.மு.க. பிரமுகர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த தற்கொலைவிவகாரத்தின் மர்மங்களும் தோண்டப்படலாம். தேர்தலுக்கு முன்பாக கூடல் புதூர் ஏரியாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் கடத்தப்பட்டு, முக்கிய நபர் ஒருவரின் தோட்டத்தில் சிறை வைக்கப்பட்டார்கள். இது தொடர்பாக, கூடல் புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டு, அதற்கு ரசீதும் வழங்கப்பட்டு இருக்கிறது. விவகாரம் வில்லங்கமாவது தெரிந்ததும், மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு அந்தப் பெண்களை விடுவித்து இருக்கிறார்கள். இந்த விவகாரமும் இப்போது தோண்டப்படுகிறது. கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள், மதுரையில் நிறையவே குவியப்போகிறதாம். 'ஏராளமான சம்பவங்கள் புகார் தரப்படாமல் அமுக்கப்பட்டன. எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பாதிப்புகள் குறித்து அனைவரும் புகார் சொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இந்த புகார்களை வைத்து மதுரையில் தனி கோர்ட் உருவாக்க வேண்டும்’ என்று மதுரை வக்கீல்கள் சிலர் சொல்கிறார்கள். சரண்டர், அரெஸ்ட், அப்ரூவர், என்கவுன்ட்டர் எனப் பலரும் பயத்தில் திரிகிறார்கள். இந்நிலையில் நேற்று மதுரை நகரில் உள்ள லாட்ஜுகளுக்குள் போலீஸ்படை புகுந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். இவர்களின் குற்ற ஜாதகத்தை அலசினால் சில தி.மு.க.பிரமுகர்களுக்கும் சிக்கல் ஆரம்பம் ஆகலாம்!''

''இதற்கு கருணாநிதி ரியாக்ஷன்..?''

''மதுரை சுனாமி குறித்த தகவல்கள் உடனுக்குடன் கருணாநிதிக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. 'எதுவாக இருந்தாலும் 20-ம் தேதிக்குப் பிறகு யோசிக்கலாம்...’ என்றாராம் கருணாநிதி.

அன்றுதான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா... இல்லையா என்பது சி.பி.ஐ. கோர்ட்டில் தெரியும். 'கனிமொழி கைதானால், மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. உடனடியாக விலக வேண்டும். நம்முடைய எதிர்ப்பைக் காட்டியாக வேண்டும்!’ என்று கனிமொழி ஆதரவுப் பிரமுகர்கள் சொல்கிறார்கள். 'மாநிலத்திலும் ஆட்சி போய்விட்டது. மத்திய அதிகாரத்தையும் யாராவது இழப்பார்களா?’ என்று ஸ்டாலின், அழகிரி தரப்பு, அதற்குத் தடை போட்டு வருகிறது. 20-ம் தேதி தனது வாழ்க்கையில் மிகப் பெரிய கண்டம் என்று கருணாநிதி நினைக்கிறார். சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கருணாநிதி மனதை வெகுவாக பாதித்ததாகச் சொல்கிறார்கள். 'எதிர்க் கட்சியாகவே ஆனாலும் 60 ஸீட்டாவது வருமென்று எதிர்பார்த்தேன்...’ என்றாராம். கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் கருத்தை அறிவதற்காக பொதுக் குழுவைக் கூட்டி விவாதிக்கலாம் என்றும் கருணாநிதி நினைக்கிறார்.''

''சரியான முடிவு. எப்போது கூடுகிறதாம் பொதுக் குழு?''

''கனிமொழிக்கு 20-ம் தேதி ஜாமீன் கிடைத்துவிட்டால், உடனடியாக கருணாநிதி பொதுக் குழுவைக் கூட்டுவாராம். கைது சம்பவம் நடந்தால், அநேகமாக பொதுக் குழு கூட்டப்படாது. கூட்டத்துக்கு வரும் பிரமுகர்கள் அனைவர் மனதிலும் ஆ.ராசா - கனிமொழி விவகாரம் நிழல் ஆடினால், அதுவே நெகட்டிவ் ஆகிவிடும் என்று நினைக்கிறாராம் கருணாநிதி. பொதுவாகவே கருணாநிதியால் யாரையும் குறை சொல்ல முடியவில்லை.''

''ஸ்டாலின்?''

''ஸ்டாலினை தென் மாவட்டப் பிரமுகர்சந்தித்தபோது, நெடுநேரம் தனது மனவருத்தங்களைக் கொட்டினாராம். 'எத்தனையோ சாதனைகளைச் செய்தோம். ஆனால், அது மக்கள் மனசுல நிக்காத அளவுக்கு குடும்பத்துலயே நடந்துக்கிட்டாங்க...’ என்றாராம் வேதனையாக!  கட்சியின் கிளைக் கழகச் செயலாளர்கள் வரை அழைத்து, கருத்துக் கேட்கும் காரியத்தில் இறங்கப்போகிறாராம் ஸ்டாலின்!''

''அதற்குள் ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ?''

''கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி. அன்றுதான் புதிய அரசாங்கத்தின் திட்டங்களை அறிவிக்கும் கவர்னர் உரை, சபையில் வாசிக்கப்பட இருக்கிறது. பழைய சட்டசபை வளாகத்தில் இருக்கைகளை ஒழுங்குபடுத்தும் காரியங்கள் மும்முரமாக நடக்கின்றன. 'கிழக்குப் பக்கமாக கடற்கரையை நோக்கியதாக அம்மா இருக்கை இருந்தால் நல்லது’ என்றார்களாம். அதற்காகத்தான் இந்த மாறுதலாம்...'' என்றபடி புறப்பட்டார்!

படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

ரவுசு காட்டும் ரங்கசாமி

'நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி’ என்று  ஆவேசம் காட்டி இருக்கிறார் ஜெயலலிதா. இதற்கு பதில் சொல்லவேண்டிய ரங்கசாமியோ, இந்த நிமிடம் வரை மௌனம் காத்துவருகிறார். இதுகுறித்துப் பேசும் புதுவை காங்கிரஸ்காரர்கள், ''ரங்கசாமி ஆட்சி புரிந்த கடைசி மூன்று வருடங்களாக சோனியாவை சந்திக்காமல் தனிக்காட்டு ராஜாங்கம் நடத்தி வந்தார். அழைப்பு விடுத்தும் சந்திக்காத காரணத்தால்தான், முதல்வர் மாற்றம் நிகழ்ந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும் ஜெயலலிதாவை சந்திக்க அழைப்பு வந்தும், சந்திக்காமல் ஆட்சி அமைப்பில் கவனம் செலுத்தினார். அதனால் ஜெயலலிதா இப்போது கோபமாகி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ரங்கசாமி எப்போதும், யாரையும் மதிக்கவே மாட்டார் என்பதை இப்போதாவது மக்கள் புரிந்து கொள்ளட்டும்!'' என்கிறார்கள்.

ஆனால் ரங்கசாமி ஆதரவாளர்களோ, ''எங்கள் பலம் காரணமாகத்தான் அ.தி.மு.க-வுக்கு புதுவையில் ஐந்து இடங்கள் கிடைத்து இருக்கிறது. அது தெரியாமல், அ.தி.மு.க-வின் பலத்தில்தான் நாங்கள் ஜெயித்தது போல் காட்ட நினைக்கிறார்கள். ரங்கசாமி யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டார்!'' என்கிறார்கள்.

தமிழ்நாட்டுடன் உறவு சீராக இல்லை என்றால், தொழில் மற்றும் சேவை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதுதான் இப்போது புதுவைவாசிகள் கவலை.

மிஸ்டர் கழுகு: அதிருது மதுரை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism