Published:Updated:

'சமூகத்திலும் மாற்றம் கொண்டு வராமல், கல்வியில் மட்டும் மாற்றம் சாத்தியமில்லை!' #WhatisEducation?

'சமூகத்திலும் மாற்றம் கொண்டு வராமல், கல்வியில் மட்டும்  மாற்றம் சாத்தியமில்லை!' #WhatisEducation?
'சமூகத்திலும் மாற்றம் கொண்டு வராமல், கல்வியில் மட்டும் மாற்றம் சாத்தியமில்லை!' #WhatisEducation?

\

ருவநிலைகள் அதன் இயல்பில் உடைமாற்றிக் கொண்டேயிருக்கிறது. இயற்கை எப்போதும் பிழைசெய்வதில்லை. அது அதன் இயல்பில் அழகாகவே இருக்கிறது. அடர்த்தியான போர்னியோ காடுகளில் உள்ள மரங்களுக்கு யாரும் உரம் வைக்கவில்லை, நேர்த்தியாக வளர யாரும் கிளைகளை வெட்டுவதில்லை. இயற்கையிடம் சரணாகதி அடையும் போது, அது அனைத்தையும் பார்த்துக் கொள்கிறது. குழந்தைகளை தமது இயல்பில் விட்டால் சிறப்பாக வளர்வார்கள். ஆனால் அப்படிச் செய்வதிலிருந்து பல விஷயங்கள் நம்மைத் தடுக்கின்றன. நூற்றாண்டுகளினூடாக நாமே நாசம் செய்துவிட்ட சமூகச் சூழலில் குழந்தைகள் இயல்பாக வளர்ந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என நாம் அஞ்சுகிறோம். இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கும் போது, ஒன்றை மற்றும் சரி செய்ய வேண்டும் என நினைப்பது நம் முட்டாள்தனமன்றி வேறில்லை.
 
கல்வி குறித்த ஆளுமைகளுடனான உரையாடலில் இது இரண்டாவது பகுதி.

 

ஷாஜி. பன்முக திறமையாளர்., எழுத்தாளர், விமர்சகர், திரை நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பல அடையாளங்களுடன் இருப்பவர். இந்த அடையாளங்கள் எல்லாமே ஒருவகையான சுமை என்று கருதுபவர். நம்மை சந்தோஷப்படுத்த நமக்குப் பிடித்தவற்றைப் பேசும் போலியானவர் அல்ல அவர். எப்போதும் தனது அவதானிப்புக்களின் உண்மைகளை மட்டுமே பேசுபவர்.
 
மனம் ஓய்வை விரும்பும் ஒரு விடுமுறை நாளில், வெயில் அப்பிய ஒரு மதிய பொழுதில் அவருடன் கல்வி குறித்து துவங்கிய உரையாடல், பல பரிமாணங்களை எட்டியது. ஏறத்தாழ நான்கு மணி நேரம் நடந்த உரையாடலை சுருக்கி இங்கு பகிர்கிறேன்.


உங்களுடன் கல்வி குறித்து நான் உரையாட விரும்பியதற்கு காரணம், நீங்கள் எதார்த்தங்களைப் பேசுபவர். பலருக்கு அசெளகரியமாக இருக்கும் உண்மைகளைப் பேசுபவர். அத்துடன் குழந்தைகள் மீது பேரன்பு கொண்டவர். இன்றைய கல்வி குறித்து உங்களுடைய கருத்தைப் பகிருங்கள்?

உண்மை என்னவென்று தேடிக் கண்டடைவதும் அதைப் பேசுவதும் அனைவரின் அடையாளமாகவும் மாறவேண்டும். அப்போது அது யாருக்குமே அசௌகரியமாக இருக்கப் போவதில்லை. இப்போதைய கல்வி முறை பல அவலங்களை கொண்டது! அதை மாற்றவேண்டும் என்றெல்லாம் நானும் பேசுவேன் என்று நினைத்தீர்களானால், நம் உரையாடலை இங்கேயே முடித்துக் கொள்ளலாம்.


நீங்கள் இந்த கல்வி முறை சிறப்பு என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

இல்லை. ஆனால் நான் கல்வியில் மட்டும் சிக்கல் என்று கருதவில்லை. மொத்த சமூகமே சீழ்ப் பிடித்து இருக்கும் போது, அதன் ஓர் அங்கமாக இருக்கும் கல்வியை மட்டும் நாம் எப்படி குறை சொல்ல முடியும்? அனைவரும் பணம் மட்டுமே ஈட்டத்தூண்டப்படும் ஒரு சமூகத்தை நாம் நூற்றாண்டுகளாகக் கட்டமைத்துவிட்டோம். அதுவே இன்றைய கல்வியும் செய்கிறது. பள்ளிப்படிப்பின் அனைத்து அம்சங்களமும் இறுதியில் பணம் சம்பாதித்தல் என்ற ஒரே குறிக்கோளில்தான் சென்று முடிகிறது. ஆகையால் மொத்த சமூகத்திலும் மாற்றம் ஏற்படாமல் கல்வியில் மட்டும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைப்பது இயலாத காரியம். ஒத்துக்கொள்ள சிரமமாக இருந்தாலும் இது தான் எதார்த்தம்.
 
 
சரி நீங்கள் சொல்லும் சமூக மாற்றத்தை எப்படி முன்னெடுப்பது?

சமூகம் என்றால் என்ன? தனி மனிதர்கள் தங்களை ஒரு கூட்டமாக நினைத்து வைத்திருப்பது தானே? தனி மனிதர்கள் மனதிலிருந்து பேராசை அகலாமல் சமூகம் எப்படி மாறும் என்று நினைக்கிறீர்கள்?  ‘அள்ள அள்ள பணம்’ என்று ஒரு புத்தகம் போட்டால் அந்த புத்தகம் லட்சக் கணக்கில் விற்பனையாகிறது. அந்தப் புத்தகத்தை அதன் எழுத்தாளர் நம் வீட்டு வாசலில் வந்து விற்கிறாரா என்ன? பணத்தை அள்ளிக்கொண்டே இருக்கவேண்டும் என்கின்ற நமது பேராசையை கல்வி நிறுவனங்களும் அறுவடை செய்து கொள்கிறார்கள். ஆனால் எந்த பள்ளியுமே நம் வீட்டு வாசலில் வந்து உங்கள் பிள்ளைகளை எம் பள்ளியில் சேருங்கள் என்று கெஞ்சுவதில்லை. பெரிய பள்ளியின் பெரிய கல்வி எதிர்காலத்தில் பெரிய பணத்தைக் கொண்டுவரும் என்கின்ற பேராசையில் நாம் வாழ்கிறோம். தனி மனிதன் மாறாமல் சமூகம் ஒருபோதும் மாறப்போவதில்லை. அது நடக்கும்போது கல்வி முறையும் மாறும். கல்வி என்பது குறித்து காலம்காலமாக ஏற்படுத்தப்பட்ட பிம்பங்கள் உடைந்து சுக்குநூறாகும்.
 இது சாத்தியம் என்று நம்புகிறீர்களா...?

இந்த சிக்கல்கள் எதுவுமே ஒருநாள் இரண்டுநாளில் ஏற்பட்டவையல்ல. பல நூறு ஆண்டுகளின் தொடர்ச்சி இது.  ஒரு காலகட்டத்தின் அழுக்கும் அழுத்தங்களும் பின்வரும் காலகட்டத்தின் வாழ்க்கை முறையாகவே மாறுகிறது.  பல்சுவையை விரும்பி என்னென்னவோ செய்து கடைசியில் கசப்பு மட்டுமே மிஞ்சும் ஒரு வாழ்க்கை முறைக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம். இந்த சிக்கல்களிலிருந்து அனைவரும் உடனடியாக வெளிவர முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் தீர்வை விரும்புபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரவேண்டும். இந்த கட்டமைப்பை வெறுப்பவர்கள், கல்வி என்பது பணத்திற்காக அல்ல என்பதை உணர்ந்து தமது இயற்கை வேர்களுக்கு திரும்ப வேண்டும். அதை செய்யாமல் வெறுமெனே திட்டிக்கொண்டும் அதேசமயம்  அனைத்துடனும் சமரசம் செய்துகொண்டும் வாழ்ந்தால் மன அழுத்தத்தை மட்டுமே சந்திப்பார்கள்.
 

இந்த அமைப்பிற்குள்ளேயே தீர்வை தேட முடியாதா...?

ஒட்டுமொத்த அமைப்புமே புரிதலின்மையால் தவறாக உருவானது என்னும் போது அதை சரி செய்வதற்கு வழிதேடாமல் கல்வியை மட்டும் சரி செய்யலாம் என்று நினைப்பது அபத்தமானது.


கல்வியால் தானே நீங்கள் சொல்லும் தனி மனித மாற்றத்தை கொண்டு வர முடியும்?

அ..னா ஆ…வன்னாவே தவறாக இருக்கும்போது அக்கல்வியினூடாக தனிமனிதன் எப்படி மாறுவான்? நன்றாகப் படித்தால் உயர்ந்த மதிப்பெண்கள். உயர்ந்த மதிப்பெண்கள் என்றால் எளிதான உயர் கல்வி. உயர் கல்வியை அடைந்தால் உயர்ந்த வேலை. உயர்ந்த வேலை என்றால் அள்ள அள்ள பணம். இதுதான் இன்றைய கல்வி. இதில் தனி மனித மாற்றத்திற்கு எங்கே இடமிருக்கிறது? உண்மையாக மாற்றத்தை விரும்புபவர்கள் பேராசையைக் கைவிட்டு எளிமையான வாழ்க்கைக்கு திரும்பி இருப்பார்கள். தமது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை அவர்களே வடிவமைத்துக் கொள்வார்கள். அதிகப் பணத்தை மட்டுமே விரும்பிக் கொண்டே, கல்வி மாற வேண்டும் எனப் பேசுபவர்கள் தாம் சிக்கலானவர்கள். பணம், புகழ், வெற்றி போன்றவை அல்ல, புரிதலும் சந்தோஷமும் நிம்மதியும் தாம் மனிதனுக்குத் தேவை. அதற்கான மாற்று கல்விமுறை வரவேண்டும் என்று சொன்னால் இவர்களே அதை  கடுமையாக எதிர்ப்பார்கள்.
 

 

புரிகிறது. இப்போதிருக்கும் பள்ளிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?

பெரிய பெரிய மதில் சுவர்கள் கொண்ட சிறைச்சாலைகளாக பள்ளிகள் இருக்கிறது. இந்தச் சுவர்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக என்று சொல்வார்கள்! உண்மையில் இந்தப் பள்ளிகள் குழந்தைகள் வெளி உலகத்தைத் தெரிந்து கொள்வதை விரும்புவதில்லை.  குழந்தைகள் பள்ளிக்கு வெளியேதான் புரிதலைப் பெறுகிறார்கள். நான் ஐந்தாயிரம் புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எட்டு புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். ஆனால் ஒன்பதே வயதான எனது மகளின் குழந்தை மனம் எழுப்பும் பல அடிப்படை கேள்விகளுக்கு என்னால் உண்மையான பதில்கள் சொல்ல முடிவதில்லை. அவளிடம் எதாவது பொய்களைச் சொல்லி சமாளிக்க எனக்கு விருப்பமில்லை. இதுதான் உண்மை நிலவரம் என்னும்போது இந்தப் பள்ளிகளும், அதன் ஆசிரியர்களும் என்ன பெரிதாக நம் பிள்ளைகளுக்கு கற்பித்து விட முடியும்? அப்பா அம்மா முகத்தை மட்டுமே பார்த்து கொண்டிருந்தால் குழந்தைக்கு சலித்து விடும் என்பதால் மட்டுமே அவளைப் பள்ளிக்கு அனுப்புகிறேன்.
 
“இந்த கல்வி முறை பணம் போட்டு பணம் அள்ளும் நமது வியாபார யுக்தி. பணத்தால் ஒரு மருத்துவரை வாங்கலாம்; ஆனால் ஆரோகியத்தை வாங்க முடியாது. பணத்தால் இந்த  கல்வியை நாம் வாங்கலாம் ஆனால் புரிதலையும் ஞானத்தையும் ஒருபோதும் வாங்க முடியாது.” என்று சொல்லி முடித்தார் ஷாஜி.
 

#WhatisEducation?

- மு. நியாஸ் அகமது