Published:Updated:

கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ...

''காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா!''

கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ...

''காரியம் முடிந்ததும் கதவைச் சாத்திய சோனியா!''

Published:Updated:
##~##

ழத் தமிழினம் இனப் படுகொலை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை, கடந்த 18-ம் தேதி பேரெழுச்சியுடன் சென்னையில் நினைவுகூர்ந்தனர் தமிழின உணர்வாளர்கள். எம்.ஜி.ஆர். நகர் சந்தை அருகே, பெரியார் தி.க. நடத்திய பொதுக் கூட்டத்துக்கு 5,000-க்கும் அதிகமான இன உணர்வாளர்கள் திரண்டு வந்திருந்தனர். 

கூட்டத்துக்குத் தலைமை வகித்த பெரியார் தி.க. பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், ''சிங்கள அரசின் மீது இனப் படுகொலைக் குற்றச்சாட்டு வலுத்​துள்ளதை அடுத்து, ரத்தக் கறை படிந்த அந்தக் கொடும் கரங்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முயல்கிறது. ஈழத் தமிழர்களுக்கு அரசியல் உரிமை கிடைக்க உதவி செய்வதாக, கண் துடைப்பு நாடகம் ஆடுகிறது. தமிழ் மக்களுக்கான பட்ஜெட் போட முடியாத, தமிழர்​களின் நிலத்தை சிங்களர்கள் பறிப்பதைத் தடுக்க முடியாத, போலீஸ் அதிகாரம் இல்லாத, உலகத்திலேயே விசித்திர​மான ஒரு மாகாண அரசு முறையை ஈழத் தமிழர்கள் மீது இலங்கை திணிக்க இருக்கிறது. அதற்கு உதவியாக இப்போதும் இந்தியா துணை நிற்கிறது. இதைத் தடுக்க இந்தியக் குடிமகன் எனும் முறையில், நமக்கு உரிமை உண்டு. நம்முடைய உரிமையை ஏற்க மறுத்தால், 'நாங்கள் ஏன் இந்த நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும்?’ எனக் கேட்கும் நிலை வரும்!'' என்றார் ஆவேசமாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ...

பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, '' திம்பு பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் இயக்கம்​போலவே, அனைத்துப் போராளி இயக்கங்களும், 'ஈழ தேசிய இனம், தமிழீழத் தாயகம், தன்னாட்சி’ என்​பதை வலியுறுத்தின. அதற்குக் காரணம், அப்போது தமிழகத்தில் இருந்த ஆன்டன் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோர்தான் என நினைத்து, அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது இந்திய அரசு. தமிழகமே திரண்டெழுந்து எதிர்த்தவுடன், அப்படியே பின்வாங்கியது டெல்லி. ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் மீன்டும் இழைக்கப்படும் துரோகத்தை எதிர்த்து, தமிழகத்தில் அதே எழுச்சி வர வேண்டும். வட நாட்டில் இனத்தின் உரிமைக்காகக்கூட இல்லை, கௌரவம் பாதிக்கப்பட்டதற்காக ரயிலை எரிக்கிறார்கள். நாம் எரிக்க வேண்டியது இல்லை, மறித்தாலே போதும்'' என்றார் சீறலாக!

கடைசியாக மைக் பிடித்த வைகோ, ''2009 மே மாதம் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், சாத்தூர் அருகே ஒரு கிராமத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, ஈழத்தில் இருந்து கடல் புலிகளின் தளபதி சூசை என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். 'நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ என்று நான் சொன்னதும் கோபப்பட்டார். 'அண்ணா, இங்க எங்கட சனம் செத்துக்கிடக்கு. எங்கு பாத்தாலும் பிணக் குவியல்கள். பிஞ்சுப் பிள்ளையள், பெண்கள், வயோதிகர்கள்னு ஆயிரம் ஆயிரமாய் ரத்தக் காயங்களுடன் கிடக்கிறாங்கள். அவங்கட காயத்தில புழுக்கள் நெளியுதண்ணே. இந்தியா​விலிருந்து எம்.பி-க்களை அனுப்பி இதை வந்து பார்க்கச் சொல்லுங்கண்ணே...’ என சூசை சொன்னதை மேற்கொண்டு என்னால் கேட்க முடியவில்லை. ஈழத் தமிழர்களை அழிக்க யுத்தம் நடத்தத் திட்டமிட்டுக் கொடுத்தது, சோனியா உத்தரவின் பேரில் இந்திய அரசுதானே! எல்லாவற்றையும் செய்துவிட்டு, இன்று இனப் படுகொலைக் குற்றத்தைச் செய்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக கூட்டறிக்கை விடுகிறார்களே டெல்லியில்!

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வது நின்றுவிட்டதாக அப்பட்டமாகப் பொய்யை அவிழ்த்து​விடுகிறார்கள். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான்கு மீனவ சகோதரிகள் தாலி அறுத்த சோகம் முடிந்து

கருணாநிதியைக் கிண்டலடிக்கும் வைகோ...

16 நாள்கூட ஆகவில்லை. என்ன தைரியம் வேண்டும் இப்படிச் சொல்வதற்கு? கொல்லப்பட்ட தங்கச்சிமடம் மீனவன் அந்தோணிராஜ், கடைசியாக அவன் மனைவியிடம் விடைபெறும்போது, 'நான் உயிரோடு திரும்ப வேண்டுமானால், இன்று நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று கர்த்தரிடம் வேண்டிக்கொள்’ எனச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். அந்த மீனவ சகோதரி இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, நான் ஆடிப்போனேன். சில பதவிகளுக்காக, முன்னாள் முதல்வர் நாடகம் ஆடினார். திட்டமிட்டே, கருணாநிதிக்கு சில துண்டுகளைப் போட்டார்கள். சில மந்திரி பதவிகளுக்காக தீராப் பழியை, தீராத துன்பத்தைத் தேடித் தந்துவிட்டீர்கள். இதனால், அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கிறீர்கள். டெல்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூளுரைத்த கருணாநிதியின் போர்க் குரல் எங்கே? ஜனநாயகத்தை நிலைநாட்ட, முழங்கிய அந்த வீரம் எங்கே? தி.மு.க-வின் அந்த உணர்ச்சி எங்கே? சில பதவிகளுக்காக, நான் - என் குடும்பம் நல்லா இருந்தாப் போதும் என்று நினைத்தீர்களே! இன்று நடப்பது என்ன?

போயஸ் கார்டனுக்கு சோனியாவின் வாழ்த்துச் செய்தி உடனே போகிறது. முதலமைச்சருக்கு, பிரதமர் வாழ்த்துச் சொல்லலாம். சோனியா எதற்கு வாழ்த்து சொல்கிறார்? காரியம் முடிந்ததும் கருணாநிதியைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள். ஜெயலலிதாவை உள்ளே இழுக்கிறார்கள்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம், கொலைபாதகச் செயலைச் செய்த ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதுபற்றி கேட்​கிறார்கள். ''செய்தியாளரின் கேள்வியிலும் தன்னுடைய பதிலிலும் இந்தப் பிரச்னை அடங்கிவிடாது. அது சர்வதேசப் பிரச்னை!'' என கருணாநிதி சொல்கிறார். ஈழப் பிரச்னையில் மத்திய சர்க்கார்தான் தலையிட வேண்டும் என கீறல் விழுந்த ரெக்கார்டைப்போல கருணாநிதி சொல்லி வந்ததை, இன்றைய முதலமைச்சரும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார். இதே நிலை நீடித்தால், தமிழ்நாட்டு விவகாரமும் வெளிநாட்டு விவகாரம் ஆகிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்'' என்று முடித்தார் கோபமாக!

- இரா. தமிழ்க்கனல்

படங்கள்:   ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism