Published:Updated:

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே-11: 26.6.91

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே-11: 26.6.91

Published:Updated:
பழசு இன்றும் புதுசு

தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்கு சாதக​மாக வர ஆரம்பித்ததுமே, தனது ஆலோச​னையைத் துவக்கி​விட்டார் ஜெயலலிதா! 

அ.தி.மு.க-வின் முக்கியத் தேர்தல் வாக்குறுதி - மலிவு விலை மதுவை ஒழிப்பது. ஜெயலலிதா ஆட்சிப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
பொறுப்பில் அமர்ந்ததும் கையெழுத்திட இருக்கும் முதல் அரசு ஆணை, மலிவு விலை மது ஒழிப்பாகத்தான் இருக்கும். அதே நேரத்தில், 'மலிவு விலை மதுவை ஒழிப்பதன் மூலம், தமிழக அரசு கணிசமான வருவாயை இழக்க நேரிடும். இதனால் பெரும் 'நிதி நெருக்கடி’ ஏற்படும் என்பதும் ஜெயலலிதாவுக்கு சொல்லப்பட்டது. மலிவு விலை மது ரத்து மூலம் இழக்கும் வருவாயை ஈடுசெய்ய என்ன வழி என்பதுபற்றி இப்போது ஜெயலலிதா யோசித்து வருகிறார்.

அதேபோல், 'தி.மு.க. அனுதாபிகள்’ என்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பட்டியல் ஒன்றை வேறு சிலர் ஜெயலலிதாவிடம் தந்தபோது... ''இதெல்லாம் எதற்கு..? நாம் ஆட்சி அமைப்பது மக்களுக்கு நன்மை செய்யத்தானே தவிர, யாரையும் பழிவாங்க அல்ல!'' என்று அந்தப் பட்டியலை, அவர்களிடமே திருப்பித் தந்துவிட்டாராம்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆர்.எம்.வீ., போயஸ் கார்டனுக்கு வந்தார். அப்போது, ''காங்கேயத்தில் நீங்கள் போட்டியிட வேண்டியிருக்கும்...'' என்று ஆர்.எம்.வீ-யிடம் சொன்னார் ஜெயலலிதா. தமிழகத்தின் நிதி நெருக்கடிபற்றியும் பேசினார். அரசு நிகழ்ச்சிகளில் ஆடம்பரம் தவிர்ப்பது, அமைச்சர்கள் ஊதியம் வாங்காமல் பணி செய்வது - இவைபற்றியும் யோசித்தார்கள்!

ஜெயலலிதா முதலில், ''சட்டமன்ற உறுப்பி​னர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெறும்'' என்று அறிவித்தார். ஆனால், புதன்கிழமை இரவு 8.30 மணிக்கே அஷ்டமி ஆரம்பமாகிறது என்பது தெரிந்ததும், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

'ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்து என்று திடீரென ஏதோ தகவல் கிடைக்கவே, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைத் தள்ளிவைக்குமாறு டெல்லியிலிருந்து யோசனை சொல்லப்பட்டது... அதனால்தான் பாது​காப்பு ஏற்பாடுகள் முழுமையானதும் கூட்டம் நடத்தலாம் எனத் தள்ளிவைத்தார்’ என்றும் ஒரு தகவல்!

வெள்ளிக்கிழமை நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு ஜெயலலிதா வராததற்கு இதுவும் ஒரு காரணம். இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. கட்சித் தலைவராக ஏகமனதாக ஜெயலலிதா தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்தத் தகவலை மூத்த தலைவர்கள் போயஸ் தோட்டத்துக்குச் சென்று அவரிடம் தெரிவித்தபோது, ''என்னை எல்லோரும் மாட்டிவிட்டீங்களா?'' என்று ஜோவியலாகக் கேட்டார்.

ஜெயலலிதா மந்திரிசபை புதுமுகங்கள் நிறைந்ததாக இருக்கக்கூடும் என்றும் ஒரு தகவல். மூத்த தலைவர்கள் பலர் 'தங்கள் பெயர் அமைச்சர் பட்டியலில் இருக்குமா?’ என்ற 'திக்...திக்...’கில் அந்த நாளுக்காகக் காத்திருக்​கிறார்கள்!

கே.ஏ.கே., எஸ்.டி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் கட்சிப் பணிக்குப் பயன்படுத்தப்படுவார்கள் என்றும் ஒரு பேச்சு. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுடனும் சகஜமாகப் பேசினார் ஜெயலலிதா. இதிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

''எனக்குக் கட்சியின் இமேஜ்தான் முக்கியம். கட்சிக்கும் ஆட்சிக்கும் பங்கம் விளைவிக்க யார் முயன்றாலும், அவர்கள் உடனே கட்சியில் இருந்து அப்புறப்​படுத்தப்படுவார்கள்!'' என்ற ஜெயலலிதா, ''அதே சமயத்தில் எல்லோருக்கும் மந்திரி பதவி தர முடியாது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோல வாரியத் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்...'' என்று தன்னை சந்தித்த கட்சிக்காரர்களுக்கு சமாதானமும் சொல்லி அனுப்பினார்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவின் உற்சாகமான அணுகு​முறையால், கட்சிக்காரர்கள் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள்!

- ஜாசன்

பழசு இன்றும் புதுசு

31.7.91

சேடப்பட்டி முத்தையா

''ஒரு பெரும் பொறுப்பையோ, பணியையோ மேற்கொள்ளச் செல்லும்போது, நமது தாய் தந்தையரின் காலில் விழுந்து வணங்கிச் செல்வது இல்லையா? நமது இஷ்டதெய்வங்களை வழிபட்டுச் செல்வது இல்லையா? அதுபோல்தான் நான் சபாநாயகர் பதவி ஏற்கச் சென்ற தருணத்தில், என் கண்ணுக்கு எதிரே அமர்ந்து இருந்த, நான் மனதார ஏற்றுக் கொண்டு இருக்கும் என் தலைவியை, எனது இஷ்டதெய்வத்தின் ஸ்தானத்தில் நினைத்து வணங்கி ஆசி பெற்றுச் சென்றேன். எனவே, நான் முதல்வரின் காலில் விழுந்து வணங்கியதில் தவறு எதுவும் இல்லை...''

பழசு இன்றும் புதுசு

10.9.91

பண்ருட்டியைத் தட்டிய தாமரைக்கனி

அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் சென்ற வாரம் துவங்கிய முதல் சட்டசபைக் கூட்டமே பரபரப்பாகி​விட்டது.

முதல் நாள் சட்டசபை உறுப்பினர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாவது நாள் சபாநாயகராக சேடப்பட்டி முத்தையாவும், துணை சபாநாயகராக மருங்காபுரி பொன்னுசாமியும் போட்டி​இன்றித் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

அப்போது சபாநாயகர், துணை சபாநாயகர் இருவரையும் வாழ்த்திப் பேசும்போது, ''தமிழக சட்டசபை இழந்த புகழை மீண்டும் பெறவேண்டும்...'' என்றார் முதல்வர் ஜெயலலிதா.

மறுநாள் சட்டசபையில் அந்தப் புகழுக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

ஆளுநர் உரை நிகழ்த்த சில நிமிடங்கள் இருப்பதற்கு முன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த ஓர் அறிக்கையை ஆங்கிலத்தில் படித்தார். இந்த அறிக்கையைப் பண்ருட்டி படித்து முடிப்பதற்குள், சட்டசபையில் ஒரு ரகளையே நடந்துவிட்டது!

''இது தமிழ்நாடு... தமிழில் படி...'' என்று உறுப்பினர் தாமரைக்கனி கத்தியபடி, பின்னாலிருந்து பண்ருட்டியிடம் ஓடி வந்தார். அவரைத் தொடர்ந்து ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் பண்ருட்டியைச் சூழ்ந்து கொண்டனர்.

''அறிக்கையைப் படிக்காதே...'' என்று அவர்களும் தாமரைக்கனியுடன் சேர்ந்துகொண்டு கூச்சல் போட்டனர். பண்ருட்டி தொடர்ந்து அறிக்கை படிக்கவே... ஆத்திரமுற்ற தாமரைக்கனி, பண்ருட்டியின் முதுகில் ஓங்கி அடித்தார்.அப்போதும் பண்ருட்டி எந்தவித எதிர்ப்பும் காட்டாமல், தொடர்ந்து தனது அறிக்கை முழுவதையும் படித்த பிறகு வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து, பண்ருட்டியைத் தாமரைக்கனி அடித்ததைக் கண்டித்து திருநாவுக்கரசும் வெளிநடப்பு செய்தார். வலது கம்யூனிஸ்ட் மற்றும் இடது கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இருவரும்கூட வெளிநடப்புச் செய்தனர்!

'விதி 17-ன் படி கவர்னர் உரை படிக்கும்போது குறுக்கிடுவது என்பது முரணானது’ என்று பண்ருட்டி ராமச்சந்திரன் மீதும், கலாட்டா செய்த குற்றத்துக்காகத் தாமரைக்கனியின் மீதும் குற்றம்சாட்டி, அவர்களை மூன்று நாட்கள் சபையிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார் சபாநாயகர்!

பழசு இன்றும் புதுசு

28.8.91

கள்ளச்சாராயம் இருந்தால்!

''நான் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்துவதாகச் சொன்னேன். அதை செய்தும் காட்டிவிட்டேன். ஆனால், இப்போது கள்ளச்சாராயம் பெருகி வருவதாகத் தகவல் வருகிறது. இனி எங்காவது கள்ளச்சாராயம் இருப்பதாகத் தகவல் வந்தால், அந்த இடத்தின் காவல் நிலைய அதிகாரிகள் மட்டுமின்றி, கிராம அதிகாரியும் ஒரு முறை கண்டிக்கப்படுவார். மீண்டும் கள்ளச்சாராயம் இருப்பதாக அந்தப் பகுதியில் இருந்து தகவல் வந்தால், முதல் முறை கண்டிக்கப்பட்டவர்கள் இந்த முறை தண்டிக்கப்படுவார்கள். எங்கள் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism