Published:Updated:

மக்கள் தீர்ப்பு சம்திங் கிரேட்!

மார்க்சிஸ்ட் ஜி.ஆர். சொல்கிறார்

மக்கள் தீர்ப்பு சம்திங் கிரேட்!

மார்க்சிஸ்ட் ஜி.ஆர். சொல்கிறார்

Published:Updated:
##~##

தேர்தல் களத்தில் வெற்றி பெற்றால்... ஆரவாரம், தோல்வி என்றால் முடங்கிக்கொள்வது என இல்லாமல், இரண்டையும் நேர்மையாக சுய பரிசோதனை செய்வது கம்யூனிஸ்ட் கட்சி​களின் வழக்கம். அப்படிப்பட்ட ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் மும்முரமாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை சந்தித்தோம். 

''பல்வேறு நலத் திட்டங்கள் தங்களது ஆட்சியைத் தக்க வைக்கும் என்று நம்பிய தி.மு.க-வுக்கு பலத்த தோல்வி கிடைத்தது ஏன்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மக்கள் நலத் திட்டங்கள் பரவலாக அமலாக்கப்பட்டும், மிக மோசமான நிலை​யில், எதிர்க் கட்சியாகக்கூட இல்லாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது தி.மு.க. அரசியல், தொலைக்காட்சி, திரைப்​படத் துறைகளில் தி.மு.க-வின் குடும்ப ஆதிக்கத்தைக் கண்கூடாகப் பார்த்து அதிருப்தி அடைந்துவிட்டனர் மக்கள். முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரசியல் அதிகாரத்தில் இடம் பிடித்தனர்.

மக்கள் தீர்ப்பு சம்திங் கிரேட்!

முதல்வரின் குடும்பத்தினரால் மட்டும் ஐந்து திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு, மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட பல படங்களைத் திரையிடாமல் தடுத்தனர். 2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில், முதல்வரின் மகள் மீதே குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகி சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அவரது குடும்பத் தொலைக்காட்சியும் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறது.  விலைவாசி உயர்வு, மின் வெட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு ஆகியவையும் மக்களிடம் வெறுப்பை உண்டாக்கியது. குறிப்பாக, மதுரையின் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளுக்கு முதல்வரின் மகனே மையமாக இருந்தது, கடுமையான அதிருப்தியை ஏற்படுத்​தியது. இதை எல்லாம் மனதில்வைத்து இருந்த மக்கள், சரியான தருணத்தில் பதிலடி தந்தனர்.

தாங்கள் விரும்பும் அரசை தங்களின் உரிமைப்படி தேர்ந்தெடுப்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. ஆனால், அதை விலை கொடுத்து வாங்குவதே தனது பிறப்பு உரிமை என்பதுபோல தி.மு.க. மூர்க்கமாகச் செயல்​பட்டது. திருமங்கலம் பாணியின் மூலம், '200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி’ என அழகிரி கொக்கரித்தார். ஆனால், வாக்காளர்களோ வாக்குகளாலேயே அவர்களின் அரசு அதிகாரத்தைப் பறித்துவிட்டனர். இது சாதாரண நிகழ்வு அல்ல, சம்திங் கிரேட்!

தேர்தல் தோல்வி பற்றி உரிய கருத்தைக் கூறாமல், 'மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்...’ எனக் கிண்டலடித்து இருக்கிறார் கலைஞர். உண்மையில், மக்களின் எண்ணமும் அதுதான்!''

''கடந்த காலங்களில் உங்கள் கட்சியின் கடும் விமர்சனத்துக்கு ஆளானது ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம். மூன்றாவது முறையாக முதல்வராகி இருக்கும் அவரின் நிர்வாகத்துக்கு சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?''

''அறிவுரை எதற்கு? கருத்து என வைத்துக்கொள்ளுங்கள். முதல்வராகப் பதவி ஏற்றவுடன், ஜெயலலிதா, பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாத கால விடுப்பு உட்பட ஏழு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து உத்தரவிட்டு இருக்கிறார். இதை வரவேற்கிறோம். நல்ல பெயர் வாங்கும்படி, அமைச்சர்களுக்கு ஜெயலலிதா அறிவுறுத்தி இருப்பதும், உர ஊழலை வெளிக்கொண்டுவர அவரே காரணம் என்பதும் நல்ல அம்சங்கள். மின் வெட்டு, சட்டம் - ஒழுங்குப் பிரச்னை, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை ஆகிய பிரச்னைகளில் புதிய அரசு உடனடியாகத் தலையிட்டு, நல்ல விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். மற்ற எல்லாப் பிரச்னைகளைவிட ஊழல் மனிதர்களைத் தண்டிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில், ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, பன்னாட்டு மூலதனம் வரும் தொழில் துறைகளில் செய்யப்படும் ஒப்பந்தங்களில் என்ன இருக்கிறது என யாருக்கும் முழுமையாகத் தெரியாது. இதில் வெளிப்படையான தன்மை வேண்டும். கடந்த காலக் கசப்பான அனுவங்களுக்கு மாற்று சக்தி​யாக மக்கள் இந்த ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியும் இதைத்தான் எதிர்பார்க்கிறது.''

''மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்... இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அந்திமக் காலத்துக்கு இது தொடக்கம் என்கிறார்களே?''

''மேற்கு வங்கத்தில் நாங்கள் ஆட்சியை இழந்தாலும், மக்களின் ஆதரவை இழந்துவிடவில்லை. 41.9 சதவிகித வாக்குகளை இடது முன்னணி பெற்றிருக்கிறது. 34 ஆண்டுகளாக ஒரே கட்சி ஆட்சியில் நீடித்தது, ரெக்கார்ட் பிரேக். இதை யார் முறியடிக்க நினைத்தாலும், இன்னும் 34 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எங்களைப் பொறுத்த வரை, மேற்கு வங்கத்தில் 13 லட்சம் ஏக்கர் உபரி நிலங்களை விநியோகம் செய்ததை பெருமையாகவே சொல்ல முடியும். இடது முன்னணி ஆட்சி மீது ஊழல் என ஒரு புகாரும் இல்லை. சாதி, மத மோதல் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வருக்கு மாதத்துக்கு கட்சி தரும் அலவன்ஸ் தொகை

மக்கள் தீர்ப்பு சம்திங் கிரேட்!

5,000-தான். அவர் எளிமையான வாழ்க்கையையே நடத்துகிறார். ஆனாலும், மக்கள் மாற்றத்தை விரும்பி இருக்கிறார்கள். இதைப்பற்றிப் பரிசீலிக்க, கட்சியின் மத்திய குழு அடுத்த மாதம் 11, 12 தேதிகளில் ஹைதராபாத்தில் கூடி விவாதிக்க உள்ளது.

ஒன்று மட்டும் உறுதி... சமூக, அரசியல், பொரு​ளாதாரம், பண்பாட்டுரீதியாக, காங்கிரஸும், பி.ஜே.பி-யும் ஒன்றுபட்டே நிற்கின்றன. அவர்களுக்கு ஒரே மாற்று, இடதுசாரிகள்தான். அதனால், கம்யூனிஸ்ட் கட்சி​களுக்கு அந்திமக் காலம் எனச் சொல்வது, அரசியல் சிறுபிள்ளைகளின் பகல் கனவு!''

- இரா.தமிழ்க்கனல்

படம்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism