Published:Updated:

மேற்கு வங்கம்.. மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

அ.மார்க்ஸ்

மேற்கு வங்கம்.. மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

அ.மார்க்ஸ்

Published:Updated:

சென்ற இதழ் தொடர்ச்சி...  

##~##

1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி கடையடைப்புப் போராட்டம் நடத்தியபோது, மம்தா பானர்ஜியின் மண்டையை உடைத்தார், மார்க்சிஸ்ட் கட்சிப் பிரமுகர் பாத்ஷா ஆலத்தூர் சகோ​தரர் லாலு. இரும்புத் தொப்பியும் கவசமும் கையில் தடியும்கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் அன்று வீதியில் திரிந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மார்க்சிஸ்ட் கட்சி பெருமை அடித்துக்​கொள்ளும் 'ஆபரேஷன் பர்கா’ நிலச் சீர்திருத்தமும் தோல்வியுற்று, ஒரு புதிய நிலப்பிரபுத்துவ வர்க்கம் தோன்றுவதற்கே காரணமாகியது. 1996-ல் அமைச்சரவையில் இருந்து விலகிய பினாய் சௌத்ரி மனம் நொந்து கூறிய கூற்றுகளை அன்று நிலச் சீர்திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட ஆணையர் டி.பண்டோபாத்யாயா நினைவுகூர்கிறார்.

மேற்கு வங்கம்.. மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

''உண்மையான குத்தகைதாரர்கள் மற்றும் நிலம் அற்றவர்களுக்கு நிலம் அளிப்பது என்பதற்கு பதிலாக, மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் அவர்களை முழுமையாக ஆதரிப்பவர்களுக்கும் மட்டுமே நிலம் வழங்கப்பட்டது. எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் குத்தகை நிலங்களில் இருந்து விரட்டப்பட்டனர். தவிர, அதிக அளவில் வாக்கு வங்கியை உருவாக்கும் போக்கில், நிலங்கள் மிகச் சிறிய துண்டுகளாகப் பிரித்து வழங்கப்பட்டன. வெறுமனே நிலத்தைப் பிரித்து நிலம் அற்றவர்களுக்கு வழங்கினால் போதாது. அவர்கள் சுயமாக விவசாயம் செய்யத்தக்க அளவுக்கு, அரசு உதவி, மற்றும் சுய உதவிக் குழுக்களை அமைத்து பாசன வசதிகள் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்''. நிலச் சீர்திருத்தத்தை இவ்வாறான விவசாயச் சீர்திருத்தமாக மாற்ற, மத்திய அரசுடன் போராடி பினாய் சௌத்ரி பெற்ற உரிமைகளை, ஜோதிபாசு அரசு நிறைவேற்றத் தயங்கியது. அதன் விளைவு... ஏழை விவசாயிகள் தமக்குக் கிடைத்த துண்டு நிலத்தை பெரிய விவசாயிகளிடம் கொடுத்தனர். இந்தப் பெரிய விவசாயிகள் எல்லோரும் மார்க்சிஸ்ட் கட்சியினராக இருந்தது தற்செயல் அல்ல. புதிய நிலப்பிரபுத்துவ வர்க்கமாக (ஜோடேதார்கள்) இவர்கள் உருவாகினர்.

கிராமங்களில் அரசியல் கொலைகள் 2000-ம் ஆண்டில் மீண்டும் தொடங்கின. பனஸ்குரா, மிதினாப்பூர் மாவட்டங்களில் தொடங்கி, இந்த வன்முறை விரிந்து பரவியது. வளம் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி உள்ளூர்த் தலைவர்கள், கொடும் வறுமையில் வாடும் மக்களுக்கு மத்தியில் சுகபோகங்களுடன் மினுக்கித் திரிந்தனர். ஆயுதம் ஏந்திய குண்டர் படைகளை பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், லால்கரை ஒட்டிய தரம்பூரில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் அனுஜ் பாண்டேயின் வீடு தரைமட்டம் ஆக்கப்பட்டு, அவர் ஊரைவிட்டே துரத்தி அடிக்கப்​பட்டதை 'மாவோயிஸ்ட்களின் வன்முறை’ என மார்க்சிஸ்ட் கட்சி பிரசாரம் செய்தது. வன்முறையை ஓர் அரசியல் வழிமுறையாகக் கொண்டவர்கள் மாவோயிஸ்ட்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், கடந்த ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு எதிராக நடந்த வன்முறைகள் எல்லாமே மாவோயிஸ்ட்களால் மேற்கொள்ளப்பட்டவை அல்ல. தன்னெழுச்சியாகப் பழங்குடியினர் திரண்டெழுந்து செய்த தாக்குதல்களே அதிகம். அனுஜ் பாண்டேயின் வீடு கொளுத்தப்பட்டதைப்பற்றி புலம்பிய மார்க்சிஸ்ட் கட்சி ஏடான 'பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ கடைசி வரை அந்த ஆடம்பரமான வீட்டின் படத்தை வெளியிடவே இல்லை!

மேற்கு வங்கக் குன்றுகளில் பட்டியல் சாதியினர் 16 சதவிகிதத்துக்கு மேலும், பழங்குடியினர் 14 சதவிகிதம் வரையிலும் உள்ளனர். பிரச்னைக்குரிய லால்கர் பகுதி பிற மேற்கு வங்க சமவெளியில் இருந்து எல்லா வகையிலும் வேறு​பட்டது. சோட்டா நாக்பூர், பீடபூமியின் நீட்சியாக அமைந்த இந்தப் பகுதியில் 30 சதவிகிதத்தினர் பழங்குடியினர். 20 சதவிகிதத்தினர் தாழ்த்தப்பட்டவர்கள். எந்த அடிப்படை வசதிகளும் இங்கே கிடையாது. இட ஒதுக்கீடு மிகக் குறைவு. அதுவும் முறையாக நிறைவேற்றப்படுவது இல்லை. தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்படுகிற அரசுப் பணிகள் பூர்த்தி செய்யப்படாத நிலை, பிற மாநிலங்களைக் காட்டிலும் மேற்கு வங்கத்தில் அதிகம். பழங்குடியினரின் சந்தாலி மொழியில், ஒலி, ஒளிபரப்புகள் கிடையாது. அவர்களது எழுத்துக்கு (Script)அரசு அங்கீகாரம் இல்லை. பழங்குடிப் பகுதியில் அதிகாரிகள், ஆசிரியர்கள் எல்லோரும் மே.வங்கச் சமவெளிப் பகுதியினர். பழங்குடியினர் பெரிய அளவில் அந்நியப்பட்டு இருந்தனர். அவர்களின் குறைந்தபட்சக் கோரிக்கையான 'குன்றுப் பகுதி நிர்வாக சுயாட்சி’ (Autonomous Hill Council)  என்பதைக்கூட அளிக்க மார்க்சிஸ்ட் அரசு தயாராக இல்லை.

சச்சார் குழு அறிக்கைப்படி, இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் இருக்கும் மாநிலமும் மேற்கு வங்கம்​தான். முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக இருப்பதும் அங்குதான்.

மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டணி மீது மக்களுக்கு இருந்த வெறுப்பைப் பயன்படுத்தி அரசியல் லாபம் தேட முனைந்த மம்தா, உருப்படியான மாற்றுத் திட்டங்கள் எதுவும் இன்றி, 1998-ல் தனிக் கட்சி தொடங்கினார். 1999-ல் அவர் உருவாக்கிய 'மாபெரும் கூட்டணி’யில் (மாஹாஜோட்) பா.ஜ.க-வும் இடம் பெற்றது. மத்தியிலும் அவர் பா.ஜ.க. தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். இதன் காரணமாக இடது சாரி கலாசாரப் பின்னணியும் சிறுபான்மையினர் பெரிய அளவில் வசிக்கும் நிலையிலும் உள்ள மேற்கு வங்கத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 2006-ம் ஆண்டில், பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வர் ஆனார் புத்ததேவ். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினால்தான் இனி தனக்கு அரசியல் எதிர்காலம் என்பதை உணர்ந்த மம்தா, காங்கிரஸுடன் கை கோர்த்தார்.

மேற்கு வங்கம்.. மார்க்சிஸ்ட் கட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்!

2006-ம் ஆண்டு வெற்றி மமதையுடன் ஆட்சியைத் தொடர்ந்த மார்க்சிஸ்ட் அரசு, நாட்டைத் தொழில் வளமாக்குகிறேன் என்ற பெயரில் 'டாட்டா’வுக்கு 997 ஏக்கர், இந்தோனேசிய 'சலீம்’ நிறுவனத்துக்கு 1,400 ஏக்கர் என விவசாய நிலங்களை கார்ப்பரேட்களுக்கு வாரி வழங்கியது. இதற்கு மிகப் பெரிய எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகளின் இந்த எதிர்ப்பை ஆரம்பம் முதலே போலீஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் என்ற வடிவில் மேற்கு வங்க அரசு எதிர்கொண்டது. 2007-ம் ஆண்டு மார்ச் 14-ல் நடந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் கொல்லப்​பட்டனர். 2008 நவம்பர் 2-ல் சல்போனி என்னுமிடத்தில் 'இன்டால்’ நிறுவன எஃகு ஆலை அடிக்கல் நாட்டு விழாவுக்கு, முதல்வர் புத்ததேவ் சென்று திரும்பியபோது கண்ணிவெடித் தாக்குதலை மாவோயிஸ்ட்கள் நடத்தினர். புத்ததேவ் உயிர் பிழைத்தபோதிலும், கடும் அடக்குமுறை அந்தப் பகுதியில் ஏவப்பட்டது. எண்ணற்ற அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நந்திகிராமை 'வெற்றிகொள்வது’ என்ற பெயரில், மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதையும், பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதையும் கண்டித்த  மார்க்ஸிய அறிஞர்கள் சுமித் சர்கார், தாளிகா சர்க்கார் ஆகியோர், தமக்கு இடது முன்னணி அரசு வழங்கிய அரசு விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். நடிகர் சௌமித்ரா சட்டர்ஜி, இயக்குநர் அபர்ணா சென், கால் பந்தாட்ட வீரர் சுர்ஜித் தாஸ் குப்தா, நாவலாசிரியர் சுனில் கங்கோபாத்யாயா, சினிமா தயாரிப்பாளர் கௌதம் கோஷ் ஆகியோர், பகிரங்கமாகக் கண்டன அறிக்கை வெளியிட்டனர். மொத்தத்தில், மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும் இடது முன்னணியும் தனிமைப்பட்டன. ரேஷன் கடை ஊழல்களை எதிர்த்து எட்டு மாவட்டங்களில் மக்கள் கிளர்ச்சி, பங்கூரா, புருலியா மாவட்டங்களில் பட்டினிச் சாவுகள் என இடது முன்னணி அரசுக்குச் சோதனைகள் தொடர்ந்தன.

2008 பஞ்சாயத்துத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெரும் தோல்விகளை எதிர்கொண்ட இடது முன்னணி அரசு, இன்றைய தேர்தலில் மண்ணைக் கவ்வும் என்பது எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான். மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான மக்களின் வெறுப்பைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ள மம்தா, ஆட்சியைப் பிடிப்பது தவிர வேறு அரசியல் கொள்கைகள் இல்லாதவர். இதற்காக அவர் பா.ஜ.க., மாவோயிஸ்ட் என எந்தப் பக்கமும் சாயத் தயங்காதவர்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்த​மட்டில், அதற்குச் சில உறுதியான கொள்கைகள் உண்டு. மதக் கலவரங்கள் இன்றி ஆட்சி செய்தமை, பெரிய அளவில் அமைப்பு ஆக்கப்பட்ட தொழிற்சங்கங்களைக் கையில் வைத்துள்ளது, மேல் மட்டங்களில் ஊழல் இல்லாதது, வாரிசு அரசியல் என்ற இழிவுக்கு ஆட்படாமல் இருப்பது ஆகியவை அதன் பலங்கள். தனது 34 ஆண்டு கால ஆட்சி குறித்த ஒரு விரிவான சுய விமர்சனம் இன்று அதற்குத் தேவை. அமெரிக்க சதி, கார்ப்பரேட்களின் எதிர்ப்பு என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்காமல், அணுகுமுறைக் கோளாறுகள், கட்சி குறித்த பார்வை, கருத்தியலில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவை குறித்து, வெளிப்படையான ஒரு விவாதத்தை மார்க்சிஸ்ட் தொடங்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசின் வீழ்ச்சி வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், நிச்சயமாக அது மகிழ்ச்சிக்கு உரிய ஒன்று அல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism