Published:Updated:

உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்... - இதுதான் காரணம்

உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்... - இதுதான் காரணம்
உயரும் வெயில் அளவு, சாகும் மக்கள்... - இதுதான் காரணம்

நான்கு வழிச் சாலைகள், ஆறு வழிச் சாலைகள், குளிரூட்டப்பட்ட உயர்ந்த கட்டடங்கள் என அனைத்தும் நம் கண்ணோட்டத்தில் வளர்ச்சியின் அடையாளங்கள். நாம் ஒரு புறம் சிக்கிமின் செழிப்பான காடுகளையும், அதன் இயற்கை வனப்பையும் கொண்டாடிக் கொண்டே,  மறுபுறம் மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்கும் போது,  “இதெல்லாம் வளர்ச்சியின் அங்கம்தானே சார்.... நாடு வளரணும்னா இதெல்லாம் தேவைதானே...” என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வோம். இது யாருக்கான சாலைகள்,  எளிய மக்களுக்காக இவ்வளவு அகலமான சாலைகள் தேவையா...? என எந்த  கேள்வியும் கேட்காமல் அந்த சாலைகளுக்காக நூற்றுக் கணக்கில் சுங்க கட்டணமும் கொடுக்க பழகிவிட்டோம். தமிழகத்தின் எந்த மூலையிலிருந்து சென்னை வரவேண்டுமென்றாலும் குறைந்தது கி.மீ க்கு ஒரு ரூபாய் சுங்க கட்டணமாகவே போய் விடும். அதாவது ஒரு நபர் சேலத்திலிருந்து சென்னை வரை காரில் பயணிக்க  வேண்டுமானால் சுங்க கட்டணமாகவே மட்டும் ரூபாய் முன்னூறு செலவாகும்.

வளர்ச்சிக்கானதா சாலைகள் ?:

சுங்க  கட்டணங்கள் என்பதையெல்லாம் தாண்டி, நாம் வளர்ச்சியின் விலையாக மரணங்களை கொடுத்து கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் ரம்மியமாக இருந்த கோவை - மேட்டுப்பாளையம் சாலை பயணம்,  இப்போது ஒரு கொடுங்கனவாக மாறி இருக்கிறது. சேலத்திலிருந்து  தொப்பூர் கனவாய் வழியான தருமபுரி பயணம் ஒரு காலத்தில் எவ்வளவு மகிழ்வான ஒன்றாக இருந்தது என்று போன தலைமுறையை சேர்ந்த யாரிடமாவது கேட்டு பாருங்கள்...! ஒரு வேளை அவர்களது அந்த வர்ணனையில் நீங்கள் மரங்களின் வாசனையயும், அதில் கூடு கட்டி இருந்த பறவைகளின் ஏகாந்த ஓசையையும் உணரலாம். ஆனால், இப்போது அது மரண சாலையாக இருக்கிறது. வருடத்திற்கு குறைந்தது நூறு விபத்துகள் அந்த சாலையில் நடக்கிறது, ஐம்பதிற்கும் மேற்பட்டோர் மரணமடைகிறார்கள். அதே வேளை, இந்த சாலைகளால் மக்களின் வாழ்க்கை சூழலும் மேம்பட்டுவிடவில்லை. இன்னும், அந்த ஊர்களில் வசிக்கும் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி இருக்கிறார்கள். சாலைகள் வளர்ச்சியின் குறியீடு என்றால்,  அது  யாருடைய வளர்ச்சிக்கான குறியீடு?  நமது பயன்பாட்டிற்கு இரண்டு வழிச் சாலைகள் போதுமே, நம் இரண்டு சக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் பயணிக்க மேம்படுத்தப்பட்ட  இரண்டு வழி சாலைகள் போதாதா என்ன ? நிச்சயம் போதும்.  அப்படியானால், இது யாருடைய சாலைகள் அல்லது யாருக்கான சாலைகள். எளிய விடைதான். இது பெருநிறுவனங்களுடைய சாலைகள், பெருநிறுவனங்களுக்கான சாலைகள்.

மேட்டூரில் சூழலியலை கெடுத்துக் கொண்டிருக்கும் அலுமினிய, மெர்குரி, பிவிசி கம்பெனிக்காக போடப்பட்ட சாலைகள் இவை. இந்த சாலைகள் கொள்ளை சாலைகள். ஆம், நம் வளத்தை கொள்ளையடிக்கப்பட்ட போடப்பட்ட சாலைகள் இவை. மேட்டூரில் உள்ள நிறுவனங்களில் யார் வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்னைகள் என்ன என்று ஆய்வு செய்தாலே தெரிந்துவிடும், இந்த நிறுவனங்களும் அதற்காக போடப்பட்ட சாலைகளும் எளிய மனிதர்களுக்கானது இல்லை என்று.

வளர்ச்சியின் விலை மரணம்:

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் ஏறத்தாழ அறுபது பேர் சூரிய வெப்பம் தாங்காமல் இறந்து இருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் அதிகபட்சமாக பதிவான வெயில் அளவு 41 டிகிரி செல்சியஸ். இந்த அளவு வெப்பத்திற்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், காடுகள் அழிப்பும் ஒரு பிரதான காரணம். அது மட்டுமல்லாமல், வளர்ச்சியின் பெயரால், சாலை விரிவாக்க பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்களால், வாகன ஓட்டிகளாகிய நாம் ஒதுங்க நிழல் கூட இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நம் வளர்ச்சி பசி இன்னும் அடங்கவில்லை, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்கவியிலிருந்து கோவா பனாஜி வரை சாலைகள் விரிவாக்கப்பணிக்காக வெட்ட திட்டமிடப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்க எவ்வளவு தெரியுமா..? 37, 682 மரங்கள். அத்தனையும் பல தலைமுறைகளை பார்த்த மரங்கள். பல பறவைகளுக்கு கூடாக, வீடாக இருக்கும் மரங்கள். வெயில் காலத்திலும் மெல்லிய குளிர்ச்சி இருக்கும் பெங்களூரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அளவிற்கு வெயில். சில நாட்கள் சென்னையை விட வெயில் அதிகம். நம் என்ன செய்வதாக உத்தேசம் ? இதே நிலை தொடர்ந்தால், நாளை சாலைகள் இருக்கும், உயர்ந்த கட்டடங்கள் இருக்கும், ஆனால் வசிக்க மக்கள் இருக்க மாட்டார்கள். இது வெறும் பிதற்றலாக கருதி, ஒரு கிராமத்து சாலையை கடந்து செல்வது போல் கடந்து சென்றுவிடாதீர்கள். ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளப் போகிறோம்.

கேரளாவிடமிருந்து கற்று கொள்வோம்:

கேரளாவிடமிருந்து கற்றுக் கொள்ள நமக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சாலையும், அதன் பராமரிப்பும் மற்றும் சுங்க வசூலும். கோவையிலிருந்து பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு வழியாக நீண்ட எங்கள் பயணத்தில் எங்கும் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டப்பட்டுள்ளதை பார்க்க முடியவில்லை. ஆம். அங்கு இரண்டு வழி சாலைகள்தான். பல தலைமுறைகளை பார்த்த மரங்கள் சாலையின் இரு மருங்கிலும் கம்பீரமாக நிற்கின்றன. விலையுயர்ந்த கார்களும் சென்று கொண்டுதான் இருக்கின்றன, எந்த பிரச்னையும் இல்லாமல்.  சாலை விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்த போது, மக்களே அதே எதிர்த்துள்ளனர். இருக்கும் சாலைகளே போதும் என்று சொல்லி இருக்கின்றனர்.


அது மட்டுமல்ல, பாலக்காடு முதல் காசர்கோடு வரை நாங்கள் செலுத்திய சுங்க கட்டணம் வெறும் பதினைந்து ரூபாய்தான். ஆம். அங்கு சாலைகள் மக்களுக்கானதாக இருக்கிறது. ஆனால் அங்கேயும் பிரச்னை இல்லாமல் இல்லை, கூத்தாட்டுகுளம் முதல் சங்கனாசேரி வரையிலான சாலைகள் விரிவாக்கப் பணிக்காக மட்டும் இரண்டாயிரம் மரங்களை வெட்ட திட்டமிட்டுள்ளனர். ஆனால், ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைவிட இயற்கையை சுரண்டுதல் அங்கு மிகக் குறைவு.  பலவகையில் நம்மைவிட வளர்ச்சி அடைந்தவர்கள் கேரள மக்கள். கல்வி அறிவு அங்குதான் அதிகம். அதனால், மிக தெளிவாக இருக்கிறார்கள்- எது வளர்ச்சி,  எது சுரண்டல் என்பதில். ஆனால், நாம் இவ்வளவு நடந்த பின்னும், மேகமலை காப்பு காட்டில் சாலை விரிவாக்கத்திற்காக, நூறு மரங்களை வெட்டிக் கொண்டிருக்கிறோம். 

நாம் வளர்ச்சி என்று இதைதான் கருதுவோமாயின், வெயில் அளவு இப்படிதான் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருக்கும். நாம் முதலில் தெளிவாகுவோம். பின் வெயிலை தூற்றுவோம்.

- மு. நியாஸ் அகமது