Published:Updated:

வலுத்தது எதிர்ப்பு: பிரசார நேரத்தை மாற்றினார் ஜெயலலிதா!

விகடன் விமர்சனக்குழு
வலுத்தது எதிர்ப்பு: பிரசார நேரத்தை மாற்றினார் ஜெயலலிதா!
வலுத்தது எதிர்ப்பு: பிரசார நேரத்தை மாற்றினார் ஜெயலலிதா!

சென்னை: கடும் வெயிலில் மக்களை பிரசாரத்திற்கு அழைத்து வந்து வதைப்பதாக எழுந்த தொடர் விமர்சனங்கள் காரணமாக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, இன்று தனது தேர்தல் பிரசார நேரத்தை மாற்றினார்.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் மிகக்கடுமையாக உள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 110 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் பகலில், குறிப்பாக 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வர வேண்டாம் என பல்வேறு மாவட்டங்களில் அரசு நிர்வாகமே அறிவிப்பு வெளியிடும் அளவுக்கு அனல் வீச்சு உள்ளது.

இவை ஒருபுறம் இருந்தாலும், கடந்த 9ம் தேதி, அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சென்னையில் பிரசாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அடுத்ததாக 11 ம் தேதியன்று விருத்தாசலத்தில் தமது கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரசாரம் மேற்கொண்டார். மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டரில்  வந்திறங்கிய ஜெயலலிதா, 3 மணி அளவில் மேடை ஏறி, வேட்பாளர்களை அறிமுகம்  செய்து வைத்து பேச தொடங்கினார்.

இதற்கிடையில் இந்த கூட்டத்துக்காக காலை 11 மணிக்கெல்லாம் அழைத்து வரப்பட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களில் பலர்  வெயிலின் கொடுமை தாங்காமல்  மிகவும் அவதிக்குள்ளாகினர். தங்கள் சேலை முந்தானையால் தலையை மூடியிருந்தவர்கள், நேரம் ஆக, ஆக வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் இருக்கைகளை விட்டு வெளியேற முயன்றனர். அப்போது அதிமுகவினர் அவர்களை கட்டாயப்படுத்தி உட்கார வைத்தனர். போலீசாரும் ஜெயலலிதா பேசி முடித்து செல்லும் வரை நகரக்கூடாது என கெடுபிடி செய்த நிலையில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் கொடுமை தாங்காமல் பலர் மயங்கி விழ, அவர்கள் ஜெயலலிதா பேசி முடித்த பின்னர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சில பெண் போலீஸாரும் அடக்கம். இந்நிலையில் இவ்வாறு மயங்கி விழுந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததால் கடும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் மறுநாள் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், அவர்கள் இருவரும் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. கடும் வெயிலாக இருப்பதால் ஜெயலலிதா தனது பிரசார நேரத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனாலும் அவர் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற தருமபுரி பிரசாரம் வரை பிற்பகல் 3 மணி அளவிலேயே மேற்கொண்டார்.

இதனால், ஜெயலலிதாவுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும், அதனால்தான் அவர் தனது பிரசார நேரத்தை மாற்றிக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற ஜெயலலிதாவின் பிரசாரம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதனால் காலையிலிருந்து தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்திருக்கும் அவஸ்தையிலிருந்து கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஓரளவு தப்பினர்.