Published:Updated:

ஃபேஸ்புக்கை ஹேக் செய்ததா அதிமுக ஐடி விங்? - வைரலான மின்னஞ்சல் !

விகடன் விமர்சனக்குழு
ஃபேஸ்புக்கை ஹேக் செய்ததா அதிமுக ஐடி விங்? - வைரலான மின்னஞ்சல் !
ஃபேஸ்புக்கை ஹேக் செய்ததா அதிமுக ஐடி விங்? - வைரலான மின்னஞ்சல் !
ஃபேஸ்புக்கை ஹேக் செய்ததா அதிமுக ஐடி விங்? - வைரலான மின்னஞ்சல் !

சென்னை: அதிமுக போஸ்ட்களை வைரலாக்குவதற்காக அக்கட்சியின் ஐ.டி. பிரிவு, ஃபேஸ்புக்கை ஹேக் செய்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்தக் கட்சியின் ஐ.டி. பிரிவு தலைவர், அவரது அணியினருக்காக அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலில், ஃபேஸ்புக்கில் அதிமுக போஸ்ட்களை வைரலாக்குவதற்காக அதனை ஹேக் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் வேடிக்கையே அந்த மின்னஞ்சல் லீக் ஆகி அது வைரல் ஆனதுதான்.

நேற்று காலை முதல் வலம் வரத் தொடங்கிய அந்த மின் அஞ்சலின் புகைப்படத்தில் விடுநர், பெறுநர் அனைவரது மின்னஞ்சல் முகவரிகளும், அஞ்சலிலுள்ள செய்தியும் இருக்கிறது. அதில் அந்த கட்சியின் ஐ.டி. பிரிவு தலைவர் ஆர். பாலு ஒப்பமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அந்த மின்னஞ்சல் செய்தியில் கூறப்பட்டுள்ள ஆலோசனையின்படி, "அனைவரும், நமது பிரிவிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட FB account switcher tool ஐ தயவு செய்து பயன்படுத்துங்கள்" எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த டூலைப் பற்றி விவரங்களையும் அந்த அஞ்சலில் இணைத்திருந்தனர்.

இந்த கருவியைக் கொண்டு, பல ஃபேஸ்புக் அக்கவுண்ட்களில், போஸ்ட்களை லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்ய (வைரல் ஆக்க) முடியும் என்றும், சந்தைகளில் இப்படி ஒரு கருவி இல்லை, நாம் தனியாக ஃபேஸ்புக்கின் பாதுகாக்கப்பட்ட குறீயீடுகளை மாற்றி இதை ஹேக் செய்து, நமது ஐடி பிரிவிற்காக உருவாக்கியுள்ளோம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. முக்கியமாக ஃபேஸ்புக்கில் அவர்களது செயற்திறனை மேம்படுத்துவதற்க்கும், அவர்களது போஸ்ட்களை வைரல் ஆக்குவதற்க்குமே இது உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, அதே ஐடி பிரிவின் செயலாளர் ராமசந்திரன், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஃபேக் ஐடிகளை உருவாக்க வேண்டுமென வாட்ஸாப்பில் செய்தி அனுப்பியதாக ஒரு படம் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு " ஃபேக் ஐடிகள் உருவாக்குவது, ஹேக் செய்வது என்பது எங்களுக்கு தேவையில்லாத விஷயம். இது போன்ற செய்திகளை எளிதாக ஃபோடோ ஷாப்பில் செய்ய முடியும். இதை யார் வேண்டுமானாலும், ஏன் எதிர்கட்சியினரே கூட செய்திருக்கலாம்" என்று கூறி, பாலு அப்படி எந்த ஒரு மின்னஞ்சலையும் அனுப்பவில்லை என மறுத்தார்.

"சில அனுமதிக்கப்பட்ட கருவிகளை நாங்களும் பயன்படுத்துவதை மறுக்கவில்லை, ஆனால் அவை சந்தைகளில் அனைவருக்கும் கிடைக்கும் கருவிகளே" எனவும் அவர் கூறினார்.

இதுகுறித்து ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,  "ஃபேஸ்புக்கில் மக்களை உண்மையாகவும், மோசடி இல்லாமலும் ஒன்றிணைக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், தவறானவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் ஏனென்றால் ஃபேஸ்புக்கில் சேரும் மக்களும், தொழில் செய்பவர்களும் உண்மையான உறவையே விரும்புவர். மக்கள் அவர்களது உண்மையான அடையாளங்களில் இணையவே பரிந்துரைப்போம், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க, எங்களிடம் தொழில்நுட்பமும் சிறப்பு பிரிவுகளும் உள்ளது. இதனால் மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது தடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

பா. அபிரக்ஷன் (மாணவப் பத்திரிகையாளர்)